Published:Updated:

மலேசியா: மியான்மர் அகதிகளுக்காகக் காலணிகள் கொண்டு அறப்போராட்டம் - என்ன நடக்கிறது?

முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிகளுக்கானது என்ற அடிப்படையில் 1,086 காலணிகள்கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மலேசியா: நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த 1,200 மியான்மர் அகதிகளில் 1,086 அகதிகளைத் திரும்ப மியான்மர் நாட்டுக்கே நாடு கடத்திய விவகாரத்தில், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகின்றன, மனித உரிமை சார்ந்த சில தன்னார்வ அமைப்புகள்.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்

மியான்மர் உள்நாட்டு அரசியலின் உட்பூசல் காரணமாக அங்கு போராட்டம் வெடித்திருக்கும் வேளையில், மக்கள் பாதுகாப்பில்லாத சூழலில் இருக்கிறார்கள். இந்தநிலையில் மலேசியாவில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 1,086 அகதிகளை மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைக்கும் பொருட்டு மலேசியக் குடி நுழைவுத்துறை திருப்பி அனுப்பியது. பேராக் லுமூட்டிலுள்ள ராயல் மலேசியக் கடற்படை தளத்திலிருந்து மியான்மர் கடற்படையின் மூன்று கப்பல்களில் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர்.

மியான்மர் அகதிகள்

முன்னதாக கடந்த ஆண்டு முதல் அகதிகள் முகாமில் இருக்கும் மியான்மர் அகதிகள் 1,200 பேரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பப்போவதாக மலேசியக் குடிநுழைவு இலாகா அறிவித்திருந்த வேளையில், அதை எதிர்த்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா (Amnesty International Malaysia) மற்றும் அசைலம் அக்சஸ் மலேசியா (Asylum Access Malaysia) எனும் இரு மனித உரிமைக்குழுக்கள் வழக்கு தொடுத்தனர். மியான்மர் அகதிகளை நாடு கடத்தும் குடிநுழைவு துறையின் எண்ணத்துக்கு உயர் நீதிமன்றம் தற்காலிகமாகத் தடைவிதித்தது. ஆனால், அன்றைய தினமே (பிப்ரவரி 23-ம் தேதி) அகதிகள் 1,086 பேரை நாடு கடத்தியது மலேசிய அரசு.

மியன்மார் போராட்டம்
மியன்மார் போராட்டம்

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஆட்சேபத்தைத் தெரிவிக்கவும், நாடுகடத்தப்பட்ட 1,086 அகதிகளுக்கு ஆதரவாகவும் வித்தியாசமான முறையில் அறப்போராட்டத்தை முன்னெடுத்தன மனித உரிமைக்குழுக்கள். முகம் தெரியாத அகதிகளுக்காக 1,086 காலணிகளை வரிசைப்படுத்தி, ஒவ்வொரு ஜோடி காலணியும் ஒவ்வொரு அகதிக்கானது என்ற அடைப்பிடையில் 1,086 காலணிகள் கொண்ட போராட்டம் அமைதியான முறையில் செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மியான்மர் ராணுவம்

பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி.) அரசாங்கத்திடமிருந்து, மியான்மர் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இதனால் அங்கு கிளர்ச்சி வெடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இதுவரை 50-க்கும் அதிகமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன.

மியான்மர்: 50 பேர் பலி; தவிக்கும் பர்மா தமிழர்கள்; வைரலாகும் நம்பிக்கைப் பெண் - என்ன நடக்கிறது?

சரியான அரசியல் சூழல் இல்லாத இந்தநிலையில் அகதியாகத் தஞ்சமடைந்திருக்கும் மக்களை நாடு கடத்தியது எந்த வகையில் நியாயம் என்றும், இதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும் என்றும் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணை மார்ச் 9-ம் தேதி நடைபெறப்போகும் நிலையில், குடிநுழைவுத்துறை அதிகாரி கைருல் டிசைமி தாவுத், ``அகதிகள் யாரையும் கட்டாயப்படுத்தி அனுப்பவில்லை. இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில்தான் அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதோடு ரோஹிங்கியா அகதிகள், யு.என்.ஹெச்.சி.ஆர் அட்டைதாரர்கள் அரசியல் புகலிடம் கோரியவர்கள் ஆகியோரை அனுப்பவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும், திருப்பி அனுப்பப்பட்டவர்களில் அரசியல் புகலிடம் வேண்டியவர்கள் இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

மியான்மர் போராட்டம்
மியான்மர் போராட்டம்

இதற்கிடையில், கொரானா அச்சம் காரணத்தால்ல் மலேசியாவில் இன்னும் கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால், விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்தக் காலணி அறப்போராட்டம் செய்யப்பட்டிருக்கிறது. Challenger Malaysia, MISI Solidariti, மலேசிய சோசலிஷக் கட்சி இளைஞர் அணி, மலேசிய சோசலிஷக் கட்சி, சுவாராம் ஆகிய அமைப்புகள் இந்த அறப்போராட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டன.

- விகடன் இணையதளத்துக்காக மலேசியாவிலிருந்து யோகி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு