Published:Updated:

`இதோ உங்கள் சுதந்திரம்..!' - மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு; வேடிக்கை பார்த்த போலீஸ்?

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

மாணவர்களின் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வகையில் மர்ம நபர் ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

`இதோ உங்கள் சுதந்திரம்’ எனச் சத்தமிட்டவாறே கையில் துப்பாக்கியுடன் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மர்மநபர் நுழைந்ததால் அமைதியான முறையில் நடந்த போராட்டத்தில் திடீரென சலனம் ஏற்பட்டது. சுற்றிலும் போலீஸார் பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்தனர். அந்த மர்ம நபர் கூச்சலிட்டவாறே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் போராட்டத்தில் பங்கெடுத்த மாணவர் ஒருவரின் கைகளைத் துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்தன. கைகளிலிருந்து ரத்தம் வழிந்த நிலையில் காயமடைந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த மாணவர்களில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் முதன்மையானவர்கள். நாடாளுமன்றத்தில் மசோதாவாகத் தாக்கலானபோதே மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடப் பேரணியாகச் சென்றனர். இதையடுத்து பல்வேறு வகையில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில்தான் கடந்தாண்டு டிசம்பர் 15-ம் தேதி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் நுழைந்து தடியடி நடத்தியது சர்ச்சைக்குள்ளானது. இது பெரும் விவாதத்துக்குள்ளானது. இந்நிலையில், டெல்லி போலீஸாரின் முன்னிலையில் மர்மநபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தியுள்ளார். அந்த நபரை தடுக்கத்தவறிய காவல்துறை அவர் சுடும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அதன்பின்னர் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`கலவரத்துக்குக் காரணமே, டெல்லி காவல்துறை மட்டும்தான்!' - கொதிக்கும் ஜாமியா பல்கலைக்கழக துணைவேந்தர்

இதுகுறித்துப் பேசிய பல்கலைக்கழக மாணவர்கள், ``போலீஸார் வைத்திருந்த பேரிகார்டுகளுக்கு அருகே நின்றிருந்தோம். அப்போது மர்ம நபர் ஒருவர் எங்கள் போராட்டத்தின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டார். கையில் துப்பாக்கியுடன் எங்களை நோக்கி வந்தார். அந்த நபர் யாரென்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அவரைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய முயன்றோம்.

டெல்லி போராட்டம்
டெல்லி போராட்டம்

போலீஸாரும் அங்குதான் நின்றிருந்தனர். நாங்கள் காவலர்களை அணுகி அந்த நபரைத் தடுத்து நிறுத்தக் கூறினோம். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த நபரின் கையில் இருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்தோம் ஆனால், முடியவில்லை. அந்த நபர் சுட்டதில் எங்கள் நண்பர் ஒருவர் காயமடைந்துள்ளார்” என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு