Published:Updated:

`மீத்தேன் ஆய்வுத் திட்டம் நிறுத்தம்; இது மக்களின் வெற்றி!’- பேராசிரியர் ஜெயராமன் நெகிழ்ச்சி

ஓ.என்.ஜி.சி மீத்தேன் ஆய்வுத் திட்டத்தைக் கைவிட்ட போதும், சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

``காவிரிப்படுகையில் மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை, திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, சாத்தியமில்லை என்று கருதி ஓ.என்.ஜி.சி நிறுத்தியுள்ளது. இது தமிழக மக்களின், குறிப்பாகக் காவிரிப் படுகை மக்களின் எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி" என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மீத்தேன் ஆய்வுத் திட்டம்
மீத்தேன் ஆய்வுத் திட்டம்

இதுபற்றி பேராசிரியர் ஜெயராமனிடம் பேசினோம், ``2013-ல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட மூன்று கட்டங்களாக, ஷேல் ஆய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் வழங்கியிருந்தது. இதில் முதல் கட்டமாக ஓ.என்.ஜி.சி ஐம்பது பிளாக்குகளிலும், ஆயில் இந்தியா லிமிடெட் ஐந்து பிளாக்குகளிலும் வீ ஷேல் எண்ணெய் -எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

முதற்கட்டமாக காவிரிப்படுகையில் 9 பிளாக்குகளை ஷேல் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றது. ஆனால் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, ஓ.என்.ஜி.சி யால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்குத் தமிழக அரசியல் கட்சிகளும் தலைவர்களும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

பேராசிரியர் ஜெயராமன்
பேராசிரியர் ஜெயராமன்

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புத் திட்டம் இடம்பெற்றது. கிருஷ்ணா - கோதாவரி, அஸ்ஸாம், ஆகிய பகுதிகளில் 26 கிணறுகளை அமைத்த ஓ.என்.ஜி.சியால் காவிரிப்படுகையில் ஒரு கிணற்றைக்கூட அமைக்க முடியவில்லை.

'நிலவியல் காரணமாகவும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும் கிணறுகளை அமைக்க முடியவில்லை' என்று ஓ.என்.ஜி.சி காரணம் கூறியுள்ளது. இது மக்கள் எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றி.

ஓ.என்.ஜி.சி மீத்தேன் ஆய்வுத் திட்டத்தைக் கைவிட்ட போதும், சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது.

மீத்தேன் ஆய்வுத் திட்டம்
மீத்தேன் ஆய்வுத் திட்டம்

மக்கள் போராட்டம் வெல்லும். மக்கள் தொடர்ந்து களத்தில் நிற்பதன் மூலம் தங்கள் மண்ணையும், நிலத்தையும், நீரையும் சுற்றுச்சூழலையும் நிச்சயமாகப் பாதுகாக்க முடியும்" என்றார் தீர்க்கமாக.