`வண்ணாரப்பேட்டையில் போலீஸ் தடியடி' - தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்த இஸ்லாமியர்கள்

வண்ணாரபேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது போலிசார் நடத்திய தடியடியைக் கண்டித்துதமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் இன்று(பிப்14) ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்து அவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது முதியவர் ஒருவரின் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்து நீக்கப்பட்டதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த முதியவரின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 120 பேரை விடுவிக்கக் கோரி சென்னை வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் திடீரென இஸ்லாமியர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதேபோல் தமிழகத்தின் சில பகுதிகளிலும் அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடர் பற்றிக்கொண்டது. கம்பம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, கோவை, ஊட்டி என பல இடங்களில் இஸ்லாமியர்கள் திரளாக வந்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே சென்னையில் போராட்டக்காரர்களுடன் சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறை தரப்பில் முதியவர் யாரும் இறக்கவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் கூறியுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சென்னை மாநகர கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஒப்புக்கொண்டதையடுத்து, வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர். தமிழகமெங்கும் இஸ்லாமியர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருவது இரவுநேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.