Published:Updated:

`போராட்டத்தை இழிவுபடுத்தவே வன்முறை; இந்த வீதிகள் உங்களுடையது!' -டெல்லி மாணவர்களின் குரல்

மாணவர்கள்
மாணவர்கள்

அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

`நாடாளுமன்றம் அவர்களுடையதாக இருக்கலாம்; ஆனால் இந்த வீதிகள் உங்களுடையது’ - ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் குரல்கள் இவை. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதி நேற்று மாலை முதல் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி, மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது பேசிய மாணவர்கள், ``அரசியலமைப்பு காக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் நாங்கள் இல்லை. இந்தப் பேரணியின் நோக்கமே குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான எங்கள் நிலைப்பாட்டை ஆட்சியாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதே” என்றனர்.

கண்ணீர்ப் புகைக்குண்டு
கண்ணீர்ப் புகைக்குண்டு

நாடாளுமன்றம் செல்லும் வழியிலே போலீஸாரால் மாணவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். மாணவர்கள் - போலீஸார் இடையே மோதல் வெடித்தது. லத்திகளைக் கொண்டு தாக்கியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் மாணவர்களை போலீஸார் விரட்டினர். முதல்நாள் போராட்டத்தில் மாணவர்களுடன் அந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களும் பங்கேற்றிருந்தனர். போலீஸார் தாக்குதல் நடத்தியபோது மாணவர்களும் கற்களை வீசியதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவத் தொடங்கியது. இது மாணவர்களின் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது. ``யாரோ சிலர் கற்களை வீசியதாகப் புகைப்படங்களைப் பகிர்கின்றனர். அவர்களுக்கு எங்கள் ரத்தமும் காயமும் கண்களுக்குத் தெரியவில்லையா” என மாணவர்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள்

மாணவர்களின் முதல்நாள் போராட்டம் விவாதத்துக்குள்ளானது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தனர். உள்ளூர் மக்களுடன் போராட்டத்தில் இணைய வேண்டாம் என மாணவர் தலைவர் மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டது. மீண்டும் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மாணவர்கள் ஒன்றிணைந்தனர். கல்லூரி வளாகம் அமைந்துள்ள பகுதியில் மட்டுமே போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என மாணவர்களுக்குக் கண்டிப்புடன் கூறப்பட்டது. அதேபோல் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவோ, ஆதரவாகவோ முழக்கங்களை இட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. டிசம்பர் 14-ம் தேதி முதல் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். டெல்லி போக்குவரத்து துறைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேற்று மாலை தீவைத்துக்கொளுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இதைச் செய்ததாகக் கூறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸ் அதிரடியாக நுழைந்தது.

ஜே.எம்.இ பல்கலைக்கழக மாணவர்கள்
ஜே.எம்.இ பல்கலைக்கழக மாணவர்கள்

பல்கலைக்கழகத்தை போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். நுழைவு வாயிலில் குவிந்த காவலர்கள் உள்ளிருந்து யாரும் வெளியில் செல்லாதபடி பார்த்துக் கொண்டனர். பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தினர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். போலீஸாரின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் விளக்குகளை அணைத்துள்ளனர்.

நூலகம், உணவு உண்ணும் பகுதிக்குள் சென்று காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளனர். பெண்கள் விடுதிக்குள் நுழைந்த காவலர்கள் அத்துமீறியதாக, மாணவிகள் குற்றம்சாட்டுகின்றனர். காவலர் சீருடையில் இல்லாத ஒருவர், லத்தியைக்கொண்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீஸாரே பேருந்துக்குத் தீ வைப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பேருந்துகளுக்குக் காவலர்களே தீ வைத்தனர் என்பதில் உண்மையில்லை என டெல்லி போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

`பா.ஜ.க அரசியலுக்கு இந்தப் புகைப்படங்களே சாட்சி!’ - சிசோடியா குற்றச்சாட்டும் காவல்துறை மறுப்பும்

நிலைமை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்கலைக்கழகத்துக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். ``போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நான்கு பேருந்து, இரண்டு போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். பல்கலைக்கழகத்துக்குள் இருந்து மாணவர்கள் போலீஸார் மீது கற்களைக்கொண்டு வீசினர். இதன்காரணமாகவே உள்ளே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது'' என்கின்றனர் போலீஸார்.

மாணவர்கள் தரப்பில், ``காவல்துறையினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைத் தாக்கினர். அப்போதும் நாங்கள் அமைதியாகவே இருந்தோம். எங்களின் உண்மையான போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் வன்முறையில் ஈடுபடுகின்றனர்”என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு