Published:Updated:

`இணைய சேவை துண்டிப்பு; ராணுவம் அழைப்பு! அஸ்ஸாம், திரிபுராவில் தொடரும் போராட்டம் #CAB

அஸ்ஸாம் CAB
அஸ்ஸாம் CAB

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு (CAB) எதிராக வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அஸ்ஸாமில் கடுமையான போராட்டங்கள் நடந்துவருகின்றன.

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைக் (CAB) கடந்த ஆட்சிக்காலத்திலே பா.ஜ.க அறிமுகப்படுத்த முயன்றபோது வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற, இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலே குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை மீண்டும் நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த திங்களன்று மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடகிழக்குப் போராட்டம்
வடகிழக்குப் போராட்டம்

குடியுரிமைச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்ததாகவும் போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் 48 மணி நேரத்திற்கு திரிபுரா மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்திலும் தொடர் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன.

அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பைச் சேர்ந்த உட்பல் சர்மாவிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``அஸ்ஸாம் மாநிலத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. இரவு ஏழு மணி முதல் இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மக்கள் அனைவரும் தாமாக தெருக்களில் வந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதை எந்தவோர் இயக்கமும் முன்னெடுத்துச் செல்லவில்லை. இது பெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்து வருகிறது. 1980-களில் நடைபெற்ற போராட்டங்களில் அஸ்ஸாம் கண பரிஷத் அமைப்பு முன்னணி வகித்தது.

utpal sharma
utpal sharma

இன்று மக்களுக்கு எந்த இயக்கத்தின் மீதும் நம்பிக்கையில்லை. அவர்களாகவே தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். போராட்டங்களை ஒடுக்க அரசு கண்ணீர் புகைக்குண்டுகளைப் பயன்படுத்துகிறது. மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகிறது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு ராணுவம் அழைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. அஸ்ஸாமின் பூர்வகுடி மக்கள் அவர்களுடைய அடையாளத்தை இழந்துவிடக்கூடிய அச்சத்தில் உள்ளனர். எந்த அரசியல் கட்சியின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிலும் குறிப்பாக ஆளும் பா.ஜ.க மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. இது 1980-களில் நிலவிய அதே கொந்தளிப்பான காலகட்டத்தைத் தான் நினைவுபடுத்துகிறது. அஸ்ஸாமை மீண்டும் பற்றவைத்து அரசு வேடிக்கை பார்க்கிறது" என்றார்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு நிலவிவருகிறது. இந்த நிலையில் தற்போது மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதால் போராட்டங்கள் மிகவும் தீவிரமடைந்துவருகின்றன. அஸ்ஸாமின் லகிமாபூர், டினுசுக்யா, தீமாஜி, திப்ரூகர்க், சராய்டியோ, சிவசாகர், ஜோர்ஹட், கோலாகர், காம்ரூப் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் 24 மணிநேரத்துக்கு இணைய சேவை துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கௌஹாத்தியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தை அடுத்து திரிபுரா மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் பாதுகாப்புக்காக ராணுவத்தின் உதவியை மாநில அரசுகள் நாடியுள்ளன. கௌஹாத்தியில் மாலை 6.15 மணி முதல் தடை உத்தரவு அமலில் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு