Published:Updated:

தாய் - சேய் மரணம்; மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியம்? - ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சர்ச்சை

முற்றுகைப் போராட்டம்
முற்றுகைப் போராட்டம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும், அவரது குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், பிரசவத்தின் போது தாயும் சேயும் உயிரிழந்தனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த இந்த சம்பவத்தைக் கண்டித்து பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

 கீர்த்திகா
கீர்த்திகா

ராமநாதபுரத்தை அடுத்துள்ள ராஜசூரியமடை பகுதியைச் சேர்ந்தவர், முருகேசன். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் முருகேசனுக்கும் சத்திரக்குடி அருகே உள்ள அரியக்குடி பகுதியைச் சேர்ந்த கீர்த்திகாவுக்கும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில், கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று பிரசவவலி எடுத்துள்ளது. இதையடுத்து, கீர்த்திகாவின் உறவினர்கள் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியத்தால் தாயும் சேயும் உயிரிழந்துள்ளனர்.
உறவினர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே கீர்த்திகாவும் அவரது ஆண் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து, கீர்த்திகா மற்றும் அவரது குழந்தையின் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை கீர்த்திகாவின் உறவினர்கள் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீர்த்திகாவின் பிரசவத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

முற்றுகை போராட்டம் நடத்தும் உறவினர்கள்.
முற்றுகை போராட்டம் நடத்தும் உறவினர்கள்.

ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள் முறையாகப் பணியாற்றுவதில்லை என்ற குற்றசாட்டு கூறப்பட்டுவருகிறது. கடந்த மே மாதத்திலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அப்போது, மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர், `மருத்துவர்கள், பணி நேரத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது' என எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனாலும், அரசு மருத்துவர்களின் அலட்சியப்போக்கு தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்கிறார்கள். எனவே, மாவட்ட மருத்துவமனையில் அலட்சியத்துடன் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு