Published:Updated:

``உதவித்தொகையை உயர்த்துங்க..." - சென்னையில் தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

``உதவித்தொகையை உயர்த்துங்க..." - சென்னையில் தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Published:Updated:
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் திருப்பூரில் மாநாடு நடத்தியது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில் முக்கியக் கோரிக்கையாக மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை ரூ. மூவாயிரமாக உயர்த்த வேண்டும் என்றும், கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

இந்த நிலையில், தமிழகத்தில் வகைப்படுத்த ஐந்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்குவதற்கான அரசாணையைத் தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறப்பித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பல அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதற்காக சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் அனுமதி பெற்றிருந்தனர். அதன்படி, இன்று காலை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்
ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்

அப்போது, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கம் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த, சென்னை சேப்பாக்கத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டனர். அதையடுத்து, அனைவரையும் எழிலகம் முன்பே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களையும் தடுத்து நிறுத்தும் பணிகளில் போலீஸார் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், ``தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. மேலும், 18 வயது பூர்த்தியானால் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்கான தொகை வழங்கப்படுகிறது. எனவே, அதை மாற்றி அனைத்து வயதினருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.

தற்போது ஐந்து லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே அரசு கணக்கெடுப்பின்படி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் நாங்கள் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்" என்றனர்.

இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், அமைச்சர் உதவித்தொகையை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism