Published:Updated:

புதுச்சேரி: `பாய்ந்து சென்ற தண்ணீர் பாட்டில்!’ - பா.ஜ.க-வினர் மீது லத்தியைச் சுழற்றிய போலீஸ்

புதுச்சேரி பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி
புதுச்சேரி பா.ஜ.க தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

புதுச்சேரி வேலைவாய்ப்புதுறைக்கு மலர்வளையம் வைக்க முயன்ற பா.ஜ.க-வினரைத் தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர்.

`புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சி, `வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், `நான்கு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் ஒருவருக்குக்கூட அரசு வேலை வழங்கவில்லை’ என்ற குற்றச்சாட்டை புதுச்சேரி பா.ஜ.க முன்வைத்துவருகிறது. இந்தநிலையில், பா.ஜ.க இளைஞரணியினர் இன்று வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

பா.ஜ.க-வினர் மீது தடியடி
பா.ஜ.க-வினர் மீது தடியடி

அதன்படி ராஜீவ் காந்தி மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டுச் சென்ற பா.ஜ.க-வினர் வேலைவாய்ப்புத்துறை அலுவலகத்துக்கு முன்பாகவே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், அதையும் மீறி பா.ஜ.க இளைஞரணித் தொண்டர்கள் அரசுக்கும், வேலைவாய்ப்புத்துறைக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது காவல் துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி முன்னேறிய பா.ஜ.க-வினர் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மலர்வளையம் வைக்க முயன்றனர்.

பேரிகார்டுகள் மீது ஏற முயன்ற அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. அதேசமயம் போலீஸை நோக்கி தண்ணீர் பாட்டிலை வீசினார்கள் போராட்டக்காரர்களில் சிலர். அதனால் மீண்டும் அவர்கள் மீது லேசான தடியடியை நடத்தியது போலீஸ். அதையடுத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தை நோக்கி முன்னேறும் முயற்சியைக் கைவிட்ட பா.ஜ.க-வினர், தங்களது கோரிக்கைகளை மட்டும் கோஷங்களாக எழுப்பினர்.

`தி.மு.க-வின் முகத்திரையைக் கிழித்தெறியும் யாத்திரை’ - எல்.முருகன்... தடுத்து நிறுத்திய போலீஸ்!

அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ``வேலை கேட்டு வந்தால் அடிப்பீர்களா?” என்று கேட்ட பா.ஜ.க-வினருக்கு, ``வேலை கேட்பதற்கு, அதற்கான வழிமுறைகளோடு வந்தால் நாங்கள் ஏன் உங்களை தடுக்கப் போகிறோம்” என்று பதிலளித்தது போலீஸ். அதையடுத்து சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அடுத்த கட்டுரைக்கு