Published:Updated:

ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்!

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

ஜவஹர்லால் நேரு (ஜே.என்.யூ) பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் ஒரு மாத காலமாக நாடு முழுவதும் வீரியம் குறையாமல் நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியதில் மாணவர்களின் போராட்டங்கள் பெரும் பங்காற்றின. பல பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

இந்த நிலையில், ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவந்த போராட்டங்களை காவல் துறை அடக்குமுறை கொண்டு ஒடுக்கியது. இந்தச் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. துணைவேந்தரின் அனுமதி இல்லாமலே பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த காவல் துறையினர் மாணவர்களின் விடுதிகள், நூலகங்கள் வரை சென்று சேதங்களை ஏற்படுத்திய காட்சிகள் வெளிவந்தன. காவல்துறையின் செயலை ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக துணைவேந்தர் வன்மையாகக் கண்டித்தார்.

அதற்கு முன்பிருந்தே கல்விக் கட்டண உயர்வுக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர்கள் போராடி வந்தனர். கல்விக் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகே கல்விக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை நிர்வாகம் கைவிட்டது.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜே.என்.யூ வளாகத்துக்குள் முகமூடி போர்த்திய கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்தது. பேராசிரியர் சங்க கூட்டத்தில் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தொடர்ந்து மாணவர்களையும் தாக்கத் தொடங்கியது. ஜே.என்.யூ மாணவர் சங்கத் தலைவர் ஆய்ஷி கோஷ் கடுமையாகத் தாக்கப்பட்டிருந்தார். இந்த வன்முறை தாக்குதலுக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.

ஜே.என்.யூ வன்முறைத் தாக்குதல்களைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த வரிசையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் மெழுகுவத்தி ஏந்திய போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது ஜே.என்.யூ-வில் ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஜே.என்.யூ
ஜே.என்.யூ

பாரதிய ஜனதா கட்சி, அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் டெல்லி காவல்துறையைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிக்கப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டம் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு நிறைவுற்றது.

அடுத்த கட்டுரைக்கு