Published:Updated:

ஹைட்ரோ கார்பன், காவிரி... திருச்சியில் தொடரும் போராட்டங்கள்!

சி.ய.ஆனந்தகுமார்
தே.தீட்ஷித்

ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடர்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் காவிரி விவகாரம் தொடர்பாக திருச்சியில் அடுத்தடுத்துப் போராட்டங்கள் தொடர்கிறது. ஆனாலும் விவசாயிகளின் உணர்வுகளை அரசும், ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் விவசாயிகளை வேதனையடையச் செய்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் விவசாயிகள் கையில் திருவோடு ஏந்தி திரண்டு வந்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
'அமைச்சர்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை; தண்ணீர்ப் பற்றாக்குறை' என்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் கொடுத்த அடியை மறந்துவிட்டு அமைச்சர்கள் பேசுவது நல்லதல்ல. தைரியம் இருந்தால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தட்டும்.
விவசாயிகள்

"டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அனுமதிக்கயிருப்பதனால்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிட மறுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது" என அவர்கள் குற்றம்சாட்டினர். புதைந்து போராடிய விவசாயிகள்!இதேபோல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்துகொண்டு போராடிய விவசாயிகள், சிறுநீர் குடித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

போராட்டம்
போராட்டம்

முக்கொம்பில் போராட்டம்!

காவிரி மீட்புக் குழு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திருச்சி மேலணை தெற்குப் பகுதியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் பேசிய விவசாயச் சங்கத் தலைவர் சின்னதுரை, “காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூ என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் பாசன ஆதாரங்கள் மற்றும் குடிநீர் ஆதாரங்களை அளித்து காவிரிப்படுகையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனைக் கைவிட்டு காவிரிப் பாசன மாவட்டங்களில் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஆனால், 'அமைச்சர்கள் தண்ணீர்ப் பஞ்சம் இல்லை; தண்ணீர்ப் பற்றாக்குறை' என்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அவர்களுக்குக் கொடுத்த அடியை மறந்துவிட்டு அமைச்சர்கள் பேசுவது நல்லதல்ல. அவர்களுக்குத் தைரியம் இருந்தால், துணிச்சல் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தட்டும். அப்போது மக்கள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் தக்க பாடம் கொடுப்பார்கள்” என்றார் ஆவேசமாக.

விவசாயிகள்
விவசாயிகள்

கொள்ளிடத்தில் யாகம்!

விவசாயிகள் ஒருபக்கம் போராடிக்கொண்டிருக்க... மறுபக்கம், கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் யாகம் நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரியும், டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரியும் திருச்சியில் போராட்டங்கள் நடைபெறுவது அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.