Published:Updated:

`3 அடிக்குதான் அனுமதி; தண்ணீர் வர்ற வரை தோண்டுறாங்க!’ - மணல் கொள்ளையால் கொதித்த இளைஞர்கள்

சவடு மணல் குவாரி
சவடு மணல் குவாரி ( உ.பாண்டி )

குவாரியில் மணல் எடுப்பவர்கள் மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும் என்ற விதிகளுக்குப் புறம்பாக, நிலத்தடி நீரே சுரக்கும் வரை சுமார் 18 அடி வரை குழிபறித்து மணல் அள்ளிவந்திருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், பாரனூர் கிராமத்தில் ஆற்றுப்படுகை அருகே 20 அடி ஆழத்தில் சவடு மண் அள்ளியதால் இளைஞர்கள் லாரிகளை மறித்து, போராட்டம் நடத்தினர். விவசாயத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மணல் கொள்ளையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

விதிகளை மீறி தோண்டப்பட்ட மணல் குவாரி
விதிகளை மீறி தோண்டப்பட்ட மணல் குவாரி
உ.பாண்டி

வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வான் மழையையும், எப்போதாவது நிறைந்து வழிந்து வரும் வைகை ஆற்றுத் தண்ணீரையும் மட்டுமே நம்பியிருக்கிறார்கள். விவசாயப் பணிகளுக்கு மட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும்கூட இதுதான் நிலை. பல ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆண்டு போதுமான மழை பொழிந்தது. இந்த ஆண்டு அது தொடருமா எனத் தெரியவில்லை. இந்தநிலையில், வழிந்து வரும் ஆற்று நீரை கடைமடைப் பகுதிக்கு வந்துசேர விடாமல் ஆற்றுப்படுகைதோறும் மணல் கொள்ளை நடந்துவருகிறது. `சவடு மண்’ என்ற பெயரில் விவசாய நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்பிடிப்புப் பகுதிகள், ஆற்றுப் படுகைகள் என எல்லா இடங்களிலும் மணல் எடுப்பதற்கு மாவட்ட அதிகாரிகள் அனுமதி வழங்கிவருகின்றனர். `தீவுப் பகுதிகளில் மணல் எடுக்கக் கூடாது’ என்ற விதியையும் மீறி ராமேஸ்வரம் தீவுப் பகுதியிலும் சவுடு மண் எடுக்க அதிகாரிகள் முறைகேடாக அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாரனூர் கிராமத்தின் ஆற்றுப்பகுதியில் சவடு மண் என்ற பெயரில் நடைபெறும் மணல் குவாரிக்கு அந்தக் கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். பாரனூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் நிலையில், பெரும்பாலான குடும்பத்தினர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆற்றுப்படுகைக்கு அருகே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சவுடு மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு மணல் எடுக்கப்பட்டுவருகிறது.

மணல் குவாரியில் பீறிடும் நிலத்தடி நீர்
மணல் குவாரியில் பீறிடும் நிலத்தடி நீர்
உ.பாண்டி

ஆனால், குவாரியில் மணல் எடுப்பவர்கள் `மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும்’ என்ற விதிக்குப் புறம்பாக நிலத்தடி நீரே சுரக்கும் வரை சுமார் 18 அடி வரை குழிபறித்து மணல் அள்ளி வந்திருப்பதாகக் கொதிக்கிறார்கள் அந்தப் பகுதி இளைஞர்கள். இதை பாரனூர் கிராம இளைஞர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்த வட்டாட்சியரும், அரசு அதிகாரிகளும் `இதுபோல இனி நடக்காது’ என உறுதி அளித்ததின் பேரில், மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. ஆனால், கடந்த இரு நாள்களாக 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் சவுடு மண் எடுக்கத் தொடங்கினர்.

பாரனூர் மணல் குவாரி
பாரனூர் மணல் குவாரி
உ.பாண்டி

இதையடுத்து அங்கு திரண்ட இளைஞர்கள், குவாரியில் மணல் எடுப்பவர்களைத் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், சவுடு மண் எடுக்க வந்த லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கிருந்த லாரிகள் மணல் எடுக்காமல் திரும்பிச் சென்றன. ``விதிகளை மீறி மணல் எடுப்பதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வரும் காலங்களில் விவசாய நிலங்களுக்குத் தேவையான நிலத்தடி நீர் மணல் அள்ளுவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வருங்கால சந்ததியினரின் வாழ்வாதார நிலையைக் கருத்தில்கொண்டு இந்தப் பகுதியில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்’’ என அரசுக்கு அந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு