Published:Updated:

`தரக்குறைவாக நடத்துகிறார்!’ - ராமநாதபுரம் டி.ஆர்.ஓ-வுக்கு எதிராகக் கொந்தளித்த ஊழியர்கள்

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை. இதையடுத்து தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அழைப்பு விடுத்தார். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் இதை ஏற்கவில்லை.

உண்ணாவிரதம் இருந்த வருவாய்த் துறை ஊழியர்கள்
உண்ணாவிரதம் இருந்த வருவாய்த் துறை ஊழியர்கள் ( உ.பாண்டி )

ஊழியர் விரோதப் போக்கினைக் கடைப்பிடிக்கும் மாவட்ட வருவாய் அலுவலரை இடம் மாற்றம் செய்யக்கோரி வருவாய்த் துறையினர் கொட்டும் மழையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வருவாய்த் துறை அலுவலர்கள்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வருவாய்த் துறை அலுவலர்கள்
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வருபவர் முத்துமாரி. கடந்த 3 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் இவர் தனக்குக் கீழ் உள்ள வருவாய்த் துறை ஊழியர்களை ஒருமையில் பேசுவதாகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருவாய்த்துறை ஊழியர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரியை இடம் மாற்றம் செய்யக் கோரி முதல்வர், துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நேற்று பணி புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் மாவட்ட தலைவர் பழனிக்குமார், செயலாளர் தமீம்ராஜா ஆகியோர் தலைமையில் கொட்டும் மழையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் நடத்திய வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.

வருவாய்த் துறை அலுவலர் போராட்டம் குறித்து விளக்கும் ஆட்சியர்.
வருவாய்த் துறை அலுவலர் போராட்டம் குறித்து விளக்கும் ஆட்சியர்.
உ.பாண்டி

இதனால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அழைப்பு விடுத்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் இதை ஏற்கவில்லை. இதையடுத்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத சமூகநலத் திட்ட வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என எச்சரித்தார்.

வருவாய்த் துறை அலுவலர் போராட்டத்தினால் காலியாக உள்ள இருக்கைகள்.
வருவாய்த் துறை அலுவலர் போராட்டத்தினால் காலியாக உள்ள இருக்கைகள்.
உ.பாண்டி

இதனால் வருவாய்த் துறை அலுவலர்களின்றி நடந்த குறைதீர் கூட்டம் விரைவாகவே முடிந்தது. இதன் பின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாகக் கூறி பணிக்குத் திரும்பினர்.