Published:Updated:

நீலகிரி: `ஒரு வருஷமா ஒரு பொழப்பும் இல்லை..!’ - சுற்றுலாப்பயணிகள் வரத் தடையால் கலங்கும் வணிகர்கள்

மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்
மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்

நீலகிரி மாவட்டத்துக்குச் சுற்றுலாப்பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து சிறு, குறு வணிகர்கள் ஒன்றாகத் திரண்டு ஊட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவலின் இரண்டாம் அலை தற்போது வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாட்டுகளை அமல்படுத்தியுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலாகவிருக்கின்றன.

மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்
மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்

நீலகிரி மாவட்டத்தில் இந்த நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைப் சந்தித்து பேசுகையில், "நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்படும். சுற்றுலா நோக்கில் நீலகிரிக்கு வரும் பயணிகள் யாரையும் அனுமதிக்க முடியாது. இ-ரிஜிஸ்ட்ரேஷன் முறை அமலில் இருக்கும். சுற்றுலாப்பயணிகள் யாரும் நீலகிரிக்கு வர வேண்டாம்" என அரசின் உத்தரவுகளைத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை அறிந்து அதிருப்தியடைந்த ஊட்டியிலுள்ள சிறு, குறு வணிகர்கள் ஒன்றாகச் சாலையில் திரண்டு அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து ஊர்வலமாக நடந்துவந்து சேரிங்கிராஸ் பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்
மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்

மறியலில் ஈடுபட்ட சிறு வணிகர் ஒருவர் நம்மிடம் பேசுகையில், ``சுற்றுலாப்பயணிகள நம்பியே எங்க வாழ்வாதாரம் இருக்கு. சுற்றுலாப்பயணிகள் வந்தா மட்டுமே எங்க பொழப்பு ஓடும். கோடை சீஸனான ஏப்ரல், மே மாசத்துல ஊட்டிக்கு அதிகம் டூரிஸ்ட் வருவது வழக்கம். போன வருசம் மார்ச்ல இருந்து செப்டம்பர் வரை சுற்றுலாப்பயணிகள் வர தடை விதிச்சாங்க. ஒரு வருஷமா ஒரு பொழப்பும் இல்லாம இருந்தோம்.

இந்த மார்ச் மாசம் சுற்றுலாப்பயணிகள் வருகை கொஞ்சம் கூடுச்சு. இப்போ மறுபடியும் லாக்டௌன் பண்றாங்க.கோடை சீஸனை நம்பி எல்லாரும் முதல் போட்டுட்டோம். எங்களுக்குச் சாப்பாட்டுக்கே வழி இல்லை. பாதிக்குப் பாதி டூரிஸ்ட்டையாவது அனுமதிக்கணும்" என வேதனையுடன் தெரிவித்தார்.

மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்
மறியலில் ஈடுபட்ட வணிகர்கள்

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசினோம். "இவர்கள் தரப்பு கோரிக்கை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்" எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு