Published:Updated:

``பொள்ளாச்சி வழக்கில் சரியான ஆதாரங்கள் இருந்தும் அரசு சமர்ப்பிக்கவில்லை!'' - மாணவர்கள் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி வழக்கில் நீதிகேட்டுப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்து அச்சுறுத்தி வருகிறது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று பலரையும் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது ஒரு கும்பல். பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அக்கும்பலுக்கு எதிராகத் துணிச்சலாக வழக்கு பதிவு செய்தார். ஒட்டுமொத்த தமிழகமும் இச்சம்பவத்துக்குப் பின் கொதித்துப்போனது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேரையும் கைதுசெய்து ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை கலெக்டர் உத்தரவிட்டார். பின் சி.பி.சி.ஐ.டி-யிடம் இருந்த இவ்வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. பல நாள் விசாரணைக்குப் பிறகு அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த திருநாவுக்கரசு தொடுத்திருந்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

கடந்த நவம்பர் 1-ம் தேதி நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அடங்கிய அமர்வு கோவை கலெக்டர் பிறப்பித்திருந்த குண்டர் சட்டத்தை ஆவணங்கள் தெளிவில்லாததாலும் குறைபாடுடன் இருந்ததாலும் ரத்து செய்தது. இது கோவை வாசிகளையும் கல்லூரி மாணவர்களையும் கடும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

பலரும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்திருந்த வேளையில், மற்றமொரு சோகமும் அரங்கேறியுள்ளது. இக்குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்களின் மீதான வழக்கு இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியா? பொள்ளாச்சி பாலியல் குற்ற விவகாரம், சில விளக்கங்கள்!

இச்சம்பவம் வெளிவந்த நாள்களில் பல அமைப்புகளும் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வந்தன. அதில் கடந்த மார்ச் 14-ம் தேதி அனைத்திந்திய மாணவர் பெருமன்றமும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் காந்திபுரத்தில் உள்ள நஞ்சப்பா சாலையில் மறியல் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது. பாலியல் வன்முறைக்குக் காரணமானவர்களைப் பாரபட்சமின்றி கைது செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

பின்னர், அங்கு வந்த காட்டூர் C1 காவல்நிலைய அதிகாரிகள் தக்க அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தனர். அதில், 36 பேரைக் கைது செய்து, இந்திய தண்டனைச் சட்டம் 143 மற்றும் 341-ம் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கு இன்றளவும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் 22 மாணவர்களும் 7 பெண்களும் அடக்கம்.

இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் குணசேகர் பேசுகையில், ``முன்பெல்லாம் இது போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அன்றிரவே விடுதலை செய்துவிடுவார்கள். சட்டப் பிரிவுகளின் கீழெல்லாம் வழக்கு பதிவு செய்யமாட்டார்கள். முதல்முறையாக இப்போது அப்படிச் செய்துள்ளனர்.

நீதிமன்ற அழைப்பை மூன்று நாள் முன்பாக போலீஸாரிடம் இருந்துதான் நாங்கள் தெரிந்துகொண்டோம். இதில் முதல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது என் பெயரைத்தான். யாருக்கு எதிராக நாங்கள் போராடினோமோ அவர்களே குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளபோது, நீதி கேட்டுப் போராடிய எங்கள் மீது தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது நீதித்துறையையே கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 3 முறை நீதிமன்றம் சென்றுள்ளேன்.

என் அன்றாட அலுவல்களும் இதனால் தடைபடுகிறது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினாலும் நீதிமன்றம் செல்லத் தயாராக இருக்கிறேன். இதுவரை 12 பேருக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 24 பேரும் சம்மன் பெற்ற பிறகுதான் தீர்ப்பை எதிர்பார்க்க முடியும். இது அநீதிகளுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதை நிச்சயம் ஜனநாயகப் படுகொலை என்றுதான் சொல்வேன்" என்றார்.

குணசேகர்
குணசேகர்

``போதிய ஆதாரங்கள் இருந்தும், அரசு சார்பில் சரிவர ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறிவிட்டனர். சமீப காலங்களில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குத் தாங்கள் படிக்கும் கல்லூரியின் மூலமாக அழுத்தம் கொடுக்கின்றனர். இதற்கு நந்தனம் கல்லூரியைச் சார்ந்த மணிகண்டன் ஒரு நல்ல உதாரணம்.

`போராட்டங்களில் ஈடுபடுவது ஒழுங்கீனம்!' - நந்தனம் அரசுக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்ட மாணவர்!

சட்டக் கல்லூரி மாணவர்களாக இருந்தால், பார் கவுன்சிலில் நுழைய முடியாதபடி செய்துவிடுவோம் என்று போலீஸாரே அச்சுறுத்துகின்றனர். தமிழ்நாட்டில் மீண்டும் மாணவர் பேரவைத் தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் கல்லூரி மாணவி ஒருவர்.