விருதுநகர் மாவட்டம், புலியூரான் ஊராட்சிக்குட்பட்டது பன்னிக்குண்டு கிராமம். இந்தக் கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் இருக்கிறது. பருவக்காலங்களில் இந்தக் கண்மாய் நீர்பாசனத்தை நம்பியே கோணப்பனயேந்தல், பன்னிக்குண்டு விவசாயிகள் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்துவருகின்றனர்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி நிறுவனம் போக்குவரத்துக்காக கண்மாயின் உள்பகுதி, கரைப்பகுதி, வடபுறத்திலுள்ள நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமித்து மண் சாலை அமைத்து கனரக வாகனங்களை இயக்கிவருவதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கக் கோரியும், ஆக்கிரமிப்புகளை மீட்கக் கோரியும் விவசாயிகள், கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்திருக்கின்றனர்.
ஆனால், பொதுமக்களின் புகார் மனுக்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதனால் விரக்தியடைந்த விவசாயிகள், `கண்மாய் கரைவழியாக கல்குவாரிக்கு லாரிகளை இயக்கக் கூடாது’ என வலியுறுத்தி கண்மாய் வழித்தடத்தில் திடீரென மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன.

தொடர்ந்து, போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த திருச்சுழி போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, `புகார் மனுவின்மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதிகாரிகள் வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.