Published:Updated:

ஹாங்காங் போராட்டம்... அன்று முதல் இன்றுவரை!

ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங் போராட்டம்

99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு நெருங்குவதற்கு முன்பே, 1980-களின் முற்பகுதியில், பிரிட்டனும் சீனாவும் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

ஆங்கிலேயர்கள், தேநீர்மீது அலாதி பிரியம்கொண்டவர்கள். அவர்களுக்குத் தேயிலை தேவைப்பட்டது. அந்தச் சமயத்தில், சீனா தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கியது. அப்போது, பணப் பரிவர்த்தனை இல்லாத காலம். சீனாவுக்கு மாற்றுப்பொருள் தர வேண்டிய கட்டாயத்தால் வெள்ளியைக் கொடுத்து தேயிலையை வாங்கினார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.

The Second Opium War between the British and Chinese
The Second Opium War between the British and Chinese
victorian-era.org

ஒருகட்டத்தில், அவர்களிடத்தில் உள்ள வெள்ளியின் அளவு குறைந்துபோனது. தேயிலையும் வேண்டும் வெள்ளியும் குறையக் கூடாது என்ற நிலையில் பிரிட்டன் தவித்தபோதுதான் கைகொடுத்தது யுத்தம். 1840-களின் பிற்பகுதிகளில் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போரைத் தொடங்கினர் சீனப் பெருங்குடிகள்.

1842-ம் ஆண்டில் போரை நிறுத்த வேண்டிய நெருக்கடியில் சீனா தவித்தபோது, சீனாவிடமிருந்து ஹாங்காங் பகுதிகளை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துக்கொள்வதாக ஓர் ஒப்பந்தத்தைப் போட்டது பிரிட்டன். ஹாங்காங், கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் காலனியாகவே இருந்து வந்தது.

99 ஆண்டு குத்தகைக்கான காலக்கெடு நெருங்குவதற்கு முன்பே, 1980-களின் முற்பகுதியில், பிரிட்டனும் சீனாவும் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு, 'ஹாங்காங் பகுதி அனைத்தையும் சீனாவுக்குத் திருப்பித் தர வேண்டும்' என்று வாதிட்டது. இருதரப்பினரும் 1984-ம் ஆண்டில் ஓர் ஒப்பந்தத்தை எட்டினர். இது, 1997-ம் ஆண்டு 'ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்' என்ற கொள்கைமூலம் வகுக்கப்பட்டது.

அதன்படி 1997-ல் ஹாங்காங், சீனாவின் ஒருபகுதியாகவே இணைந்தது. இந்த நிலையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஹாங்காங், "குடியிருப்பாளர்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்கும். தவிர, வெளிநாட்டு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்த்து, அதிக அளவில் சுயாட்சியை அனுபவிக்கும்" என்று அந்தக் கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளது.

சீன நிலப்பகுதிகளுக்குக் கிடைக்காத சுதந்திரம், ஹாங்காங்குக்குக் கிடைத்தது. அதாவது, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை, பத்திரிகைகளுக்கான கருத்துரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றோடு ஹாங்காங்குக்கு அதன் சொந்த ஜனநாயகத்தை வளர்த்துக்கொள்ளவும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.

இதனால் தொடர்ந்து இங்கிலாந்தின் பிடியிலேயே இருந்தது, ஹாங்காங். பின்னர், கடந்த 1997-ம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது. சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டிலிருந்தாலும், ஹாங்காங் நாட்டுக்கென தனி நாணயம், சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.

கிட்டத்தட்ட இந்தியாவில் காஷ்மீருக்கு எப்படிச் சில சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்ததோ, அதைப் போன்றதே இந்த அதிகாரங்களும்.

ஹாங்காங்கின் பெரும்பாலான மக்கள் சீனர்கள். ஆனால், அவர்கள் யாருமே தங்களைச் சீனர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்வதுமில்லை; அதை விரும்புவதுமில்லை. ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளின்படி, ஹாங்காங்கின் பெரும்பாலான மக்கள் தங்களை, 'ஹாங்காங்கர்கள்' என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். 11 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களைச் 'சீனர்கள்' என்று கூறிக்கொள்கின்றனர்.

சீனா, கடந்த 20 வருடங்களில் பலமுறை ஹாங்காங் கொடுத்துள்ள சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு, ஹாங்காங் முழுவதையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயன்று வருகிறது. அதிலும் கடந்த சில வருடங்களாகச் சிறப்புச் சட்ட மசோதாக்களைக் கொண்டுவர தீவிரமான முயற்சிகளை எடுத்திருக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்

இதன் ஒரு பகுதியாக, ஹாங்காங்கில் குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கும் நபர்களை நாடுகளுக்கிடையே பரிமாற்றம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவைச் சீன அரசின் நிர்ப்பந்தத்தின்பேரில் ஹாங்காங் நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டுவந்தது.

இந்த மசோதாவின் மூலம் ஹாங்காங்கில் உள்ள யாரை வேண்டுமானாலும் ஹாங்காங் ஆட்சியாளர், அனுமதியின்றி சீனா உள்ளிட்ட எங்கேயும் நாடு கடத்த முடியும். இந்த மசோதாவுக்கு எதிராகத்தான் இப்போது ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்

லட்சக்கணக்கான மக்கள் ரயில் நிலையம், விமான நிலையம், சாலைகள், அரசு அலுவலகங்கள் என்று அங்கேயே தூங்கி, சாப்பிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூன் இறுதியில் தொடங்கிய இந்தப் போராட்டம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஒப்படைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், ஹாங்காங் அரசு அந்த மசோதாவைத் தற்காலிகமாகக் கைவிட்டதாக அறிவித்துவிட்டது. ஆனால், மக்கள் அந்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும், சீனா ஆதரவாளராக இருக்கக்கூடிய ஹாங்காங் ஆட்சியாளர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கைவைத்து போராடி வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்

போராட்டக்காரர்கள் ஹாங்காங்கில் முக்கியமான விமான நிலையத்தைத் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்பே, இந்தப் போராட்டம் உலகளவில் கவனம் பெற்றது. இந்தப் போராட்டத்தையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள், 'சீனா, ஹாங்காங் மீதான தன் ஆதிக்கத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

காவல் துறையினர்
காவல் துறையினர்

2047-ம் ஆண்டுக்குப் பிறகு ஹாங்காங்கின் சுயாட்சி முடிவுக்கு வருமென்பதுதான் சர்வதேச அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது. அதுவரையாவது, அந்த மக்களை அவர்களின் சுயாட்சிக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்கிற வகையில் அவர்களின் போராட்டத்தைச் சர்வதேச சமூகமும் ஆதரிக்கிறது.

என்ன செய்யப்போகிறதோ சீனத்தின் சிவப்பு அரசு?

பின் செல்ல