Published:Updated:

ஓய்ந்த ஆசிரியர் போராட்டம்... தொடரும் செவிலியர்கள் போராட்டம்... என்ன நடக்கிறது?!

செவிலியர்கள் போராட்டம்

``செவிலியர்களைச் சாகும்வரை ஒப்பந்தப் பணியாளர்களாகவே வைத்திருக்க அரசு முயல்கிறது. எப்போது வேண்டுமோ அப்போது வெளியேற்றிவிடலாம் என்னும் அரசின் மனநிலை தொழிலாளர் சட்டத்துக்கே எதிரானது.”

ஓய்ந்த ஆசிரியர் போராட்டம்... தொடரும் செவிலியர்கள் போராட்டம்... என்ன நடக்கிறது?!

``செவிலியர்களைச் சாகும்வரை ஒப்பந்தப் பணியாளர்களாகவே வைத்திருக்க அரசு முயல்கிறது. எப்போது வேண்டுமோ அப்போது வெளியேற்றிவிடலாம் என்னும் அரசின் மனநிலை தொழிலாளர் சட்டத்துக்கே எதிரானது.”

Published:Updated:
செவிலியர்கள் போராட்டம்

சற்றே ஓய்ந்த ஆசிரியர் போராட்டம்!

கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒரு ஊதியமும், அடுத்த மாதம் முதல் நியமிக்கப்பட்டவர்களுக்கு வேறு ஊதியமும் வழங்கப்படுகின்றன. இதனால் 20,000-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதைக்  கண்டித்து ஆசிரியர்கள் ஆறு நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவந்தனர். இதனால் உடல்நலக்குறைவால் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வுசெய்ய, குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிடுவதாக ஆசிரியர்கள் அறிவித்தனர்.

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்

தொடங்கும் செவிலியர்கள் போராட்டம்!

தமிழகத்தில் கொரோனாகாலச்சூழலில் செவிலியர்களைத் தமிழக அரசு நியமித்தது. எம்.ஆர்.பி (Medical Services Recruitment Board) தேர்வில் தேர்ச்சிபெற்ற 6,000-க்கும் அதிகமான  செவிலியர்களைத் தற்காலிகமாகப் பணி நியமனம் செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்னும் உறுதி அளிக்கப்பட்டே இவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி 'டிசம்பர் 31' அன்று ஒப்பந்த காலம் முடிவடைந்தாக அரசு அறிவித்தது. இது செவிலியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்
படம்: பெ.ராகேஷ்

இது குறித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``2020-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் விண்ணப்பித்திருந்த 5,236 பேரையும் பணியில் சேர்க்க அழைப்பு விடுத்தபோது, 2,366 பேர் பணியில் சேர்ந்தனர். இவர்களைப் பணியில் சேர்க்கும்போது சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற எந்த நிர்வாகரீதியான செயல்பாடும் இல்லாமல் பணியமர்த்தப்பட்டனர். இவ்வாறு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு சிபாரிசுக் கடிதங்கள் கொடுத்து அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி வழங்கப்பட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் விதிமுறைகளை மீறி பணியிலுள்ள செவிலியர்களைப் பணியில் நீட்டிக்கவைக்கக் கூடாது என்று கூறுகிறது. இருப்பினும், கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களைப் பணி நீக்கம் செய்துவிடக் கூடாது என அரசு முடிவெடுத்தது. ஆனாலும், நீதிமன்றத்தின் உத்தரவால் அவர்களுக்குச் சம்பளம் வழங்குவதிலும் சிக்கல் நீடித்தது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்துவிட வேண்டும் என்பதே அரசின் விருப்பம். அதனால் பொது சுகாதாரத்துறையில் 2,200 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மக்களைத் தேடி மருத்துவத்தில் சுகாதார சேவைக்காக 270 பேர் தேவை. இதுபோல் துறையிலுள்ள மற்ற காலிப் பணியிடங்களுக்குச் செவிலியர்கள் நிச்சயம் நியமிக்கப்படுவர். ஒருசில மருத்துவ சங்கங்கள் தங்களுக்கு ஆட்களைச் சேர்க்க வேண்டும் என்று சிலரைத் தூண்டிவிடுகிறார்கள். கொரோனா காலத்தில் செவிலியர்கள் சென்னை போன்ற முக்கிய இடங்களில் பணிக்காக வந்தனர். தற்போது அவர்கள் சொந்த ஊர்களிலேயே பணி வழங்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் சம்பள உயர்வுடன் சொந்த ஊரில் வேலை என இரட்டிப்பு சந்தோஷம் அவர்களுக்குக் கிடைக்கும்” என்றார்.

உதயகுமார், துணைத் தலைவர்,
எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம்
உதயகுமார், துணைத் தலைவர், எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய 'எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் துணைத் தலைவர் உதயகுமார், "கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற சூழல் இருந்தது. ஆனால், தன் சேவையைத் தொடர செவிலியர்களை அரசு மருத்துவமனையில் கட்டாயம் சேர வேண்டும். இல்லையென்றால் அரசு வேலையே கிடைக்காது என பயமுறுத்தி பணியவைத்தது. அப்படிச் சேர்ந்தவர்களில் 3,000 பேருக்கு ஒரு நீதியும், மற்ற 3,000 பேருக்கு வேறு நீதியும் வழங்குவது எந்த வகையில் நியாயம்... அப்படி தற்காலிகப் பணியில் இருப்பவர்களை திடீரென நீக்கிவிட்டு, மாவட்டத்தில் பணியில் அமர்த்த நினைப்பது நியாயமல்ல. இவ்வாறு மாவட்டத்தில் பணி வழங்கினால் ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுமே அன்றி பணி நிரந்தரம் செய்யப்படாது. இதனால் உறுதியற்ற தன்மையில் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் திருப்பி அனுப்படுவோம் என்ற அச்சம் எழுகிறது.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

அதேபோல், வெளியூரிலிருந்து இங்கு வந்து வாடகைக்குக் குடியிருப்பவர்களுக்கு ஆறு மாதங்களாகச் சம்பளம் இல்லாமல் வஞ்சிக்கிறது.

இதில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் சொல்வது தவறானது. கடந்த 2021-ம் ஆண்டு இது இட ஒதுக்கீடு அடிப்படையில்தான் நடந்திருக்கிறது என அரசாணை பிறப்பித்தது. ஆனால், அதை மாற்றிப் பேச வேண்டிய தேவை என்ன... அரசு அதிகாரிகள் தவறாகச் சொல்லும் தகவல்களை அமைச்சர் பேசுகிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமூகநீதி அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கு ஏன் பணி வழங்கப்படவில்லை... இந்த நிரந்தரமில்லாத ஒப்பந்தப் பணியில் பிற துறைகளில் ஆட்கள் அமர்த்தப்பட்டதுபோல், மருத்துவத்துறையிலும் செய்யத் தொடங்கியிருக்கிறது அரசு. இதனால் பல ஆயிரம் குடும்பம் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு அரசு உடனடியாக செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

மாவட்டத்துக்கு மாற்றப்படுவதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துப் பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர்.ரவீந்திரநாத், ”கடந்த செப்டம்பரில் எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சிபெற்று டி.எம்.எஸ் (Directorate of Medical Services) வாயிலாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை டி.ஹெச்.எஸ் (District Health Service) வாயிலாக இடமாறுதல் செய்யப்படும் அறிக்கை வெளியானது. அவ்வாறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டால் தொடர்ந்து ஒப்பந்தப் பணியார்களாக மட்டுமே செவிலியர்களால் பணிசெய்ய முடியும்.  அப்போது இதை எதிர்த்து செவிலியர்களால் இயக்குநரகத்தில்  உள்ளிருப்புப் போரராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

தற்போது, வேலை நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மாவட்ட சுகாதாரப் பணியில் விருப்பப்பட்டால் இணைந்துகொள்ளுங்கள் என அன்று சொன்னதையே இன்றும் கூறுகிறார்கள். அதை அமைச்சர் மிகவும் சாதுர்யமாகக் கையாள்கிறார். சென்னையில் பிற மாவட்டங்களிலிருந்து வேலைக்கு வருகிறார்கள். இவர்களுக்குச் சொந்த மாவட்டத்தில் வேலை வழங்கப்பட்டால் ரூ.14,000-ஆக வழங்கப்படும் ஊதியம் ரூ.18,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என்னும் வாதத்தை முன்வைக்கிறார். ஆனால் டி.எம்.எஸ் சார்பாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள்  டி.ஹெச்.எஸ்-ன் (District Health Service) கீழ் வேலைக்கு அமர்த்தப்பட்டால், செவிலியர்களைப் பணி  நிரந்தரம் செய்ய முடியாது. இதனால், அரசு வேலை என்பது செவிலியர்களுக்கு வெறும் கனவாகவே போய்விடும். இதற்கு முன்பு டி.ஹெச்.எஸ் வாயிலாக மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு நடமாடும் மருத்துவம் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்பட்டது.  ஆனால் அந்த வேலை 11 மாதங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டும் அல்லது அவர்களை நீக்கி வேறு ஒருவரை நியமித்தும் அரசு, பணியாளர்களுக்கு அநீதி இழைத்தது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்
சித்தரிப்பு படம்

அதைத்தான் தற்போது செவிலியர்களுக்கும் நடத்த முயல்கிறார்கள். அரசு மிகக் குறைந்த விலையில் வேலை வாங்கிவிட்டு அவர்களைத் தூக்கி வீசவே இப்படியான நடவடிக்கைகளை எடுக்கிறது. இது சமூகநீதிக்கும், தொழிலாளர் நலனுக்கும் எதிரானது. அதைக் கடந்து பெண்கள் 99% பணியாற்றும் இந்தத் துறையில் அரசு எடுக்கும் நடவடிக்கை பெண்கள் உரிமையை பாதிக்கும். எனவே, பணிநீக்க நடவடிக்கையை ரத்துசெய்துவிட்டு அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பை வழங்க வேண்டும்.

செவிலியர்கள்
செவிலியர்கள்
Representational Image2

அரசின் நடவடிக்கையை எதிர்த்து செவிலியர்கள் தமிழகம் முழுவதிலும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள். சேலத்தில் கைதுசெய்த செவிலியர்களைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டித்து வரும் 5-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள். இதற்கு எங்கள் சங்கத்தின் சார்பாக ஆதரவு தெரிவிக்கிறோம்” என்றார்.