Published:Updated:

``இது மக்கள் ஒற்றுமைக்கான போராட்டம்!" - டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஈரோட்டில் கூடிய விவசாயிகள்

வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு ஈரோட்டில் தொடங்கப்பட்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஓராண்டாக டெல்லியில் போராடி வருகின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி என்ற கூட்டமைப்பு நடத்தும் இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் ஆதரவளித்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் இப்போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கூட்டமைப்பின்கீழ் செயல்படும் வகையில் தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாக `ஐக்கிய விவசாயிகள் முன்னணி - தமிழ்நாடு’ என்ற அமைப்பு ஈரோட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற மாநாடு
ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற மாநாடு
வேளாண் சட்டம்: `அறிக்கை மீது நம்பிக்கை இல்லை; வாபஸ் பெறுவதே தீர்வு!' - விவசாயிகள் தொடர் போராட்டம்

இந்த அமைப்பின் சார்பில் செப்டம்பர் 21-ம் தேதி ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா தலைமை செயல்பாட்டு குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ``விவசாயிகளுக்கு எதிரான இந்த 3 வேளாண் சட்டங்களையும் எதிர்க்க வேண்டுமென்றால், இந்தியா முழுவதிலும் உள்ள விவசாய பெருமக்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும். கடந்த ஓராண்டாக கடும் குளிர், வெயில், மழை என எதையும் பார்க்காமல் விவசாயிகள் போராடி வரும்போதிலும், பிரதமர் மோடி கொஞ்சம் கூட இறங்கி வரவில்லை. என்ன நடந்தாலும், இன்னும் எத்தனை மாதங்கள் ஆனாலும் நாம் இந்தப் போராட்டத்தை கைவிடப் போவதில்லை. தற்போது இருப்பதை விட, இந்தப் போராட்டத்தின் வடிவத்தை பெரிதாக்கப் உள்ளோம். அந்தவகையில், எல்லா மாநிலங்களிலும் இந்தக் சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்னும் கூட்டமைப்பை உருவாக்கி, டெல்லியைப் போன்று இந்தியா முழுக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது வெறும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல, மக்கள் ஒற்றுமைக்கான போராட்டம். விவசாயிகள் இப்படி ஒன்றுபட்டு நின்றால்தான், மோடி அரசினுடைய கொடூர கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையை நாம் முறியடிக்க முடியும். அதற்கான ஒற்றுமையாக வலிமையாக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” எனப் பேசினார்.

மாநாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ``மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளை வழி நடத்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பின் வேண்டுகோள்படி இன்று ஐக்கிய விவசாயிகள் முன்னனி தமிழ்நாடு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி சிங்கு எல்லையில் நடைபெற்ற மாநாட்டில், ஐக்கிய விவசாயிகள் முன்னனியின் கிளைகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் உருவாக்குவது என முடிவெடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் 64 விவசாய அமைப்புகள் சேர்ந்துள்ளன. வரும் செப்டம்பர் 27-ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு தமிழ்நாடு அமைப்பு முழு ஒத்துழைப்பு தர இருக்கிறது. தமிழகம் முழுவதும் கடையடைப்பு, ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை டெல்லியில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெறும்” என்றார்.

ஈரோடு மாநாடு
ஈரோடு மாநாடு
`வீட்டுக்கொரு விவசாயி போராட்டக் களத்தில்!' - டெல்லி விவசாயிகள் போராட்டம் சாத்தியமானது எப்படி?

இதனிடையே மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை செயல்பாட்டுக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா, வேளாண் சட்டங்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மேடையிலேயே மயக்கமடைந்து விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மாநாடு மேடைக்கே மருத்துவர்கள் வரவைக்கப்பட்டு ஹன்னன் முல்லாவிற்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் சோர்வாக இருந்ததுதான் ஹன்னன் முல்லாவின் திடீர் மயக்கத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு