மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் அகில இந்திய தொழிற் சங்கங்கள் சார்பில் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஊழியர்கள் யாரும் இன்று பணிக்குச் செல்லவில்லை. நேற்று பணிக்குச் சென்ற ஊழியர்கள் மட்டுமே தற்போது துறைமுகத்தில் உள்ளனர்.

துறைமுகத்தில் இன்று காற்றாலை இறகுகள், சரக்குக் கப்பலில் ஏற்றப்பட்டு அமெரிக்காவுக்கு செல்லத் தயாராக இருந்த நிலையில், துறைமுக நுழைவு வாயில் வரை சரக்குக் கப்பலுக்கு வழிகாட்டும் வழிகாட்டியான, ’மரைன் பைலட்’ கப்பல் வழிகாட்டியாகச் செல்லத் தயாராக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், சரக்குக் கப்பலை துறைமுகத்தின் கடல்தளத்தில் கட்டப்பட்டிருந்த இரும்புக் கயிற்றை எடுத்து விடுமாறு அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆனால், ``இன்று வேலைநிறுத்தம் என்பதால் எந்த வேலையும் செய்ய மாட்டோம்" எனக் கூறி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து துறைமுக கடல்தளத்துக்கு விரைந்து வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கனகராஜ், மாரிச்சாமி, சரவணன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் யாரும் எதிர்பாராத வகையில் தீடீரென கடலில் குதித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ரோந்துப் படகின் மூலம் மூன்று பேரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.