Published:Updated:

`உன்ன நினைச்சி நினைச்சி..!’ உதயநிதி நகல் கிழிக்கும் போராட்டத்தில் என்ன நடந்தது?

குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து தி.மு.க இளைஞரணியினர் சென்னையில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி
உதயநிதி

எப்போதும் பரபரப்பாக இருக்கும் சென்னை அண்ணாசாலை, டிசம்பர் 13-ம் தேதி காலை 9 மணியளவிலிருந்து வழக்கத்தைவிடவும் கூடுதல் பரபரப்பாக இருந்தது. குறிப்பாக, சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே காக்கி பட்டாளங்கள் குவிக்கப்பட்டிருக்க, 'இன்னைக்கு ஏதோ சம்பவம் இருக்குடோய்' என லோக்கல்வாசி வாண்டுகள் கலாய்த்தபடியே கடந்து சென்றனர். 'இன்டெலிஜென்ஸ்கிட்ட இருந்து ரிப்போர்ட் வந்திருக்கு. சோ, போராட்டக்காரர்கள் எந்தத் திட்டத்தோடு வந்தாலும் அதை உடைத்துவிட வேண்டும்' என உயரதிகாரிகள் உத்தரவிட்டபடியே இருக்க, 'என்னப்பா நடக்குது'? என ஆர்வமாக அந்த இடத்தை நெருங்கிப் போனோம்.

போராட்டம்
போராட்டம்

'உன்ன நினைச்சி நினைச்சி உருகிப் போனேன் மெழுகா...' என ஓரிரு கரைவேட்டிகள் பாடிக்கொண்டே இருக்கே, 'என்னண்ணே சங்கதி?' என்றேன். 'என்ன தம்பி இப்படிக் கேட்டுப்புட்டீங்க... குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பி.ஜே.பி கொண்டு வந்தாங்க இல்லையா... அதனுடைய நகல் கிழிக்கும் மாபெரும் போராட்டத்தை எங்க தி.மு.க இளைஞரணி நடத்துகிறோம். அண்ணன் உதயநிதிக்காகத்தான் காத்திருக்கிறோம்' என்றார்.

'மாபெரும் போராட்டம்ன்னு சொன்னீங்க... ஆனா, வந்த கூட்டத்தைப் பார்த்தா எண்ணிவிடலாம் போலயே' என்றேன் நான். 'அட! தம்பி இப்போ மணி 9.30-தானே... 10 மணிக்குத்தான் கூட்டம். அதுக்குள்ள வந்துருவாங்க' எனச் சமாளித்தபடியே, 'உன்ன நினைச்சி நினைச்சி...' என்று மீண்டும் தொடங்கினார்.

தி.மு.க இளைஞரணி
தி.மு.க இளைஞரணி

'ஓஹோ உதயநிதிக்காகத்தான் ஹம்மிங்கோ' என்றபடியே சைக்கிளில் வந்து தேநீர் விற்பவரிடம் ஒரு தேநீரை வாங்கிப் பருகினேன். தேநீர் இரண்டானது... மூன்றானது... மணியோ இப்போது 10.30. இப்போது கூட்டம் பரவாயில்லை. ஆனாலும் எண்ணிவிட முடிந்தது என்னால்... மீண்டும் பாடகர் உடன்பிறப்பையே தேடிச் சென்று 'என்னண்ணே உதயநிதியை நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவர்’னு எல்லாம் சொல்வாங்களே... இன்னும் உங்க இளைஞரணி செயலாளரை (உதயநிதி ) காணோமே' என்றதுதான், 'தம்பி போதும்ப்பா... நானே வேதனையில் இருக்கேன். காலையில 8.30 மணிக்கே ஏரியா பசங்கள இட்டாந்துட்டேன். ஆனா, எதிர்பார்த்த கூட்டம் வரல... கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும் அண்ணன் (உதயநிதி ) வருவார்னு தலைமை நிர்வாகிகள் சொல்றாங்க. இங்க நான் இட்டாந்த பசங்களுக்கு டீ, டிபன் வாங்கிக் கொடுத்தே என் சொத்து கரைஞ்சிடும்போல' எனப் புலம்பியபடியே 'உன்ன நினைச்சி...' எனத் தொடங்கினார். இந்த முறை அந்த சைக்கோ படத்தில் வரும் அந்த மெட்டு இன்னும் சோகமாக இருந்தது.

நான் இப்போது நான்காவது தேநீரைப் பருகத் தொடங்கினேன். திடீரென, 'அண்ணன் வர்றார்... அண்ணன் வர்றார்' எனச் சத்தம் கேட்க தூரத்திலிருந்து நடந்து வந்துகொண்டிருந்தார் உதயநிதி. 'பேரணியா வந்துதான் ஆர்ப்பாட்டம் செய்றோம் . அதான் நடந்து வர்றாரு' என்றார் ஒரு இளைஞரணி வான்டடாக வந்து...

பஜார் ரோட்டில் இருந்து வந்த உதயநிதி, நிறுத்தி வைக்கப்பட்ட சிறு ஆட்டோ மேடையில் ஏறி சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக முழங்கத் தொடங்கினார். எல்லோரும் கோரஸ் பாட, அடுத்து, நகல் கிழிக்கும் வைபவம் அரங்கேறியது. 'அண்ணா, நான் கொண்டு வந்த ஜெராக்ஸை கிழிங்க' என ஒரு இளம் பட்டாளம் முண்டியடிக்க, உதயநிதி அதையும் கிழித்தபின், சந்தோஷமடைந்தது இளம் பட்டாளம்.

உதயநிதி
உதயநிதி

அவர்களிடம் எதற்காக நகல் கிழிப்புப் போராட்டம் என நான் கேட்க, 'இத்த (மசோதா நகல்) ஜெராக்ஸ் எடுத்து கிழிக்கணும்னு சொன்னாங்க. அதான் கொண்டாந்தோம்' என்று ஒருவர் சொல்ல, 'என்னப்பா இதுகூடத் தெரியலையா?' எனக் குறுக்கிட்டார் ஒரு மூத்த உடன்பிறப்பு.

'வெளிநாட்டிலிருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியா வருபவர்கள் இங்கே 5 ஆண்டுகள் வசித்தால் இந்திய குடியுரிமை பெறலாம். இதில் இஸ்லாமியர்கள் தவிர்த்து ஏனைய ஆறு மதத்தினருக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது மத்திய பி.ஜே.பி. இது மதசார்பற்ற நம் அடையாளத்தைப் பிளவுபடுத்துவதுபோல உள்ளது. மேலும், இலங்கையிலிருந்து இங்கு அகதிகளாக இருக்கும் நம் ஈழத்தமிழர்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இப்படிப் பல விஷயங்களைக் கண்டித்துதான் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா கிழிப்புப் போராட்டம் செய்கிறோம்' என மூச்சுவிடாமல் முழங்கினார்.

இப்படியான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்க, தி.மு.க–வினரை கைது செய்ய பேருந்துகளை ஸ்டார்ட் செய்தனர் காவல்துறையினர். உதயநிதியைக் கைது செய்து பேருந்துக்குள் ஏற்றும் சமயம், சட்டெனெ அண்ணா சாலை மத்திய பகுதிக்கு சென்றவர், சாலை மறியலில் இறங்கினார். கூட்டமும் சாலைமறியலில் குதிக்க, 'ஓ நோ எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சோமோ அதுவே நடந்துடுச்சி' எனத் தலையில் அடித்தபடியே காக்கி உயரதிகாரிகள் ஃபோர்ஸை தீவிரப்படுத்தினர். சில நேர தள்ளுமுள்ளுவுக்குப் பிறகு இறுதியாக உதயநிதியைக் கைது செய்து கூட்டிச் சென்றது காவல்துறை.

உதயநிதி
உதயநிதி

'உதயநிதியைக் கட்சிக்குள் முக்கிய பொறுப்புக்குள் கொண்டு வந்ததை தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் சிலரே விரும்பவில்லை. சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறிய பழ.கருப்பையா நேரடியாகவே, உதயநிதியை விமர்சனம் செய்திருந்தார்.

எந்தவித போராட்ட அனுபவங்களும் இல்லாமல் எடுத்த உடனே தலைமை பொறுப்புக்கு வருவதா என்று கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புகள் இருக்கின்றன. இதைச் சரிக்கட்ட வேண்டுமென்றால் தீவிரமான போராட்டங்களில் உதயநிதி முகம் காட்ட வேண்டும். அதுமட்டுமல்லாது சிறை செல்ல வேண்டும். போராட்டங்களில் தன் மீது கவனத்தைத் திருப்ப வேண்டும் என்றெல்லாம் தனியார் ஏஜென்சிஸ் நோட் போட்டு கொடுத்திருந்தார்கள். அதையொட்டித்தான் இந்தச் சாலைமறியல் எல்லாமே.

`இனி பல போராட்டங்களில் உதயநிதி வலம் வரலாம். இதை எல்லாம் யூகிச்சுத்தான் காவல்துறை அதிகாரிகளுக்கு நோட் பண்ணிக் கொடுத்தோம். ஆனா, அவங்க சொதப்பிட்டாங்க. இவங்களும் சாலை மறியல் செஞ்சுட்டாங்க' என்றனர் இன்டெலிஜென்ஸ் போலீஸ். இறுதியாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நந்தனம் மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றனர் இளைஞரணியினர்.

``மறுபடியும் இந்தியாவை `மனுநீதி’க்குள் இழுக்கிறது பா.ஜ.க!’’ - கொதிக்கும் ஜோதிமணி