Published:Updated:

`பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை!’ - சொந்த ஊருக்குத் திரும்பும் டெல்லி மாணவிகள்

மாணவர்கள் கையை உயரே தூக்கியவாறு செல்லும் காட்சி
மாணவர்கள் கையை உயரே தூக்கியவாறு செல்லும் காட்சி

பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கு போலீஸார் தீ வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறக்கோரி, கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. அரசியல் கட்சிகள் முதல் மாணவர்கள் வரை பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். பேரணியைத் தடுக்க முயன்றதால், போலீஸாருக்கும் மாணவர்களுக்கும் மோதல் வெடித்தது.

ஜாமியா பல்கலைக்கழத்தில் பேருந்துக்குத் தீ வைக்கும் போலீஸ்
ஜாமியா பல்கலைக்கழத்தில் பேருந்துக்குத் தீ வைக்கும் போலீஸ்

இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியும் மாணவர்களைக் கலைத்தனர். பின்னர், ஜாமியா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தும் காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர். மாணவர்களை போலீஸார் தாக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. போலீஸார்தான் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை முதன்முதலில் தாக்கினர். இதனால், வன்முறை வெடித்தது என்று குற்றச்சாட்டுகளை மாணவர்கள் கூறி வருகின்றனர்.

அதோடு, பல்கலைக்கழக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துக்கும் போலீஸார்தான் தீ வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நின்றுகொண்டிருந்த பேருந்தின் மீது இரண்டு போலீஸார் கேன்களில் இருந்த பெட்ரோலை ஊற்றித் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன. பலர் முன்னிலையில் போலீஸார் பேருந்துக்குத் தீ வைத்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பேருந்துக்கு போலீஸார் தீ வைக்கும் வீடியோவை பலரும் பரப்பி வருகின்றனர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளும் எங்களுக்குப் பாதுகாப்பில்லை.
ஜாமியா பல்கலைக்கழக மாணவிகள்

இதற்கிடையே, மாணவிகளை சொந்த ஊருக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மாணவிகள் கூறுகின்றனர். தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 5-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் நடத்திய கல்வீச்சில் 6 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு