Published:Updated:

கடும் வானிலையிலும் தொடரும் டெல்லி விவசாயிகள் போராட்டம்! - மம்தா அரசின் ஆதரவு முடிவு

மம்தா
மம்தா

ஒரு மாதத்துக்கு மேலாக நடந்துவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி முதல் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு நடத்திவரும் போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும் நீடிக்கிறது.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

தோல்வியில் முடிந்த எழாம்கட்ட பேச்சுவார்த்தை

ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்துவரும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளிலும் முடிவு எட்டப்படவில்லை.

இறுதியாக நேற்று நடைபெற்ற ஏழாம்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது விவசாயிகளின் கோரிக்கைகளை தவிர்த்துவிட்டு, மத்திய அரசு வேளாண் சட்டங்கள் குறித்த நன்மைகளை மீண்டும் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது. அதற்கு உடன்பட மறுத்த விவசாயிகள், இறுதி முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினர்.

விவசாயிகளுக்குத் துணை நிற்போம்!

சமீபத்தில், டெல்லி, கேரளா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேறின. அதைத் தொடர்ந்து, தற்போது மேற்கு வங்கத்திலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ``நாங்கள் வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறோம். நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் எதிர்காலத்துக்காகவும் இவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் இன்னும் ஓரிரு நாள்களில் மேற்கு வங்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார். விவசாயிகளின் போராட்டம் தொடங்கிய நாள் முதல் மம்தா பானர்ஜி அதற்கு ஆதரவு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் போராட்டம், கடும் மழைக்கு நடுவிலும் தொடர்ந்துவருகிறது. மத்திய அரசு - விவசாயிகள் இடையிலான அடுத்தகட்டப் பேச்சுவாரத்தை வரும் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு