தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி பகுதியில், பாரம்பர்யமாக நெசவாளர்களால் நெய்யப்படும் சக்கம்பட்டி சேலை மிகவும் பிரபலம். அதைத்தான் கவிஞர் வைரமுத்து `முதல் மரியாதை’ படத்தில், `சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை’ என்ற பாடல் வரிகளை எழுதியிருப்பார்.

இவ்வாறு புகழ்பெற்ற சக்கம்பட்டியில் 2,000 நெசவாளர்கள் நெசவுத் தொழில் செய்துவருகின்றனர். சக்கம்பட்டி பகுதியில் இந்த நெசவுத் தொழிலுக்கு அடுத்தபடியாக ஆயிரக்கணக்கானோர் சலவைத் தொழில் செய்துவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகள் மற்றும் ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வேட்டிகளை சலவை செய்து, அவற்றை அயர்ன் செய்து, பேக்கிங் செய்து சந்தைப்படுத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சலவை செய்யும் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். இதற்காக இந்தப் பகுதியில் 20 சலவைப் பட்டறைகள் உள்ளன. இந்த நிலையில், சலவைப் பட்டறைகளிலிருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுகிறது என நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், சலவைப் பட்டறைகளுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து சலவைப் பட்டறைகளில் உள்ள மின்சார இணைப்பைத் துண்டித்து பட்டறைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் சலவைப் பட்டறைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சலவைப் பட்டறைத் தொழிலாளர்கள் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து சக்கம்பட்டியைச் சேர்ந்த பரமேஸ்வரனிடம் பேசினோம். ``சாயப்பட்டறைகளால்தான் பாதிப்பு இருக்கிறதே தவிர சலவைப் பட்டறைகளால் பாதிப்பு ஏற்படப்போவதில்லை. சலவைப் பட்டறையிலிருந்து வெளிவரும் கழிவுநீரால் மாசு ஏற்படுவதில்லை. வீட்டில் துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சாதாரண வேதிப்பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது.

நீதிமன்றத்தில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக சக்கம்பட்டியில் சலவைத் தொழில் நடக்கவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, சலவைப் பட்டறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசு அலுவலங்களில் காத்திருப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.