Published:Updated:

நகராத பெண்கள்... நகருக்கு ஒரு ‘ஷாஹீன் பாக்’

போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
போராட்டம்

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து தலைநகர் டெல்லியில் ‘ஷாஹீன் பாக்’ பகுதியில் தன்னிச்சையாக பெண்கள் தொடங்கிய போராட்டம் இன்னும் தொடர்ந்துவருகிறது;

கலவரம், உயிரிழப்புக்குப் பிறகும் நூறாவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதைப் பின்பற்றி, தமிழகத் திலும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ‘ஷாஹீன் பாக்’ மாதிரியான போராட்டங்கள் வலுத்துவருகின்றன. அவை எப்படி தொடர் கின்றன என்பது பற்றிய ஒரு தொகுப்பு...

சென்னை

சென்னை வண்ணாரப்பேட்டை யில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், பிப்ரவரி 14 அன்று ‘சென்னையின் ஷாஹீன் பாக்’ போராட் டத்தைத் தொடக்கினர். காவல்துறை அனுமதி மறுத்ததோடு, போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்த முயன்றது. எனினும், தாக்குதலையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் பெண்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டனர்; பெண்கள் பலர் கைதுசெய்யப் பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்குப் பிறகே தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் தீவிர போராட்டங்களில் இறங்கினர்.

முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பல போராட்டங்கள் கைவிடப்பட்டபோதும், வண்ணாரப் பேட்டையில் போராட்டம் தொடர்கிறது. போராட்டக் களத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.

நிஷா சலாம் - சாய்ராபானு - சாகுல்ஹமீது உஸ்மானி - நிஜாம் அலிகான்
நிஷா சலாம் - சாய்ராபானு - சாகுல்ஹமீது உஸ்மானி - நிஜாம் அலிகான்

மத ஒற்றுமை, இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மையைக் காப்பாற்றக்கோரும் வாசகங்கள், இந்துத்துவ எதிர்ப்பு வாசகங்கள் போன்றவை, போராட்டம் நடைபெறும் இடம் நெடுகத் தென்படுகின்றன. ‘வண்ணாரப் பேட்டை அனைத்து ஜமாத், இஸ்லாமியக் கூட்டமைப்பு’ என்ற குழுவின்கீழ் இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்டவர் களுக்கு மெழுகுவத்தி ஏந்தி நினைவஞ்சலி, கருஞ்சட்டைப் போராட்டம், கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு... என, போராட்டம் தினமும் ஒரு வடிவமெடுக்கிறது. போராட்ட மேடையில் இஸ்லாமிய ஜோடிக்கு திருமணம்; இந்துப்பெண் ஒருவருக்கு போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துதல் உள்ளிட்ட நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்தன.

பிப்ரவரி 27 அன்று, வண்ணாரப்பேட்டையின் போராட்டக் குழுவினரைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போராட்டத்தை முடித்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். எனினும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் போராட்டத்தை முடித்துக்கொள்ளப்போவதில்லை என்று வண்ணாரப்பேட்டை பெண்கள் தரப்பில் கூறிவிட்டனர். வண்ணாரப்பேட்டையின் முழக்கம் வானை முட்டுகிறது.

திருச்சி

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்திய நாளிலிருந்து, திருச்சி பாலக்கரைப் பகுதியில் போராட்டம் தொடர்கிறது. மார்ச் 11-ம் தேதி தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தொடரில், `இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு இங்கும் போராட்டம் தொடர்கிறது.

திருச்சி பாலக்கரை பகுதியில்...
திருச்சி பாலக்கரை பகுதியில்...

திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த நிஷா சலாம், ‘‘தொடர்ச்சியாக போராட்டம் நடத்தினாலும் நாங்கள் எந்தவிதத்திலும் சோர்ந்துபோகவில்லை. போராட்டத்தில் கலந்துகொள்ளும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. தமிழக முதல்வர், ‘இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை’ என்கிறார். அவருக்கே இந்தச் சட்டம்குறித்த சரியான தெளிவு இல்லை என்றுதான் தோன்றுகிறது. தமிழக ஆட்சியாளர்கள் சுயமாக முடிவு எடுக்க முடியாமல் பெரும் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள்” என்றார்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையத்தில்...
நெல்லை மேலப்பாளையத்தில்...

மேலப்பாளையம் பகுதியில் ஒரு மாதத்தைக் கடந்து போராட்டம் நடைபெறுகிறது. போராட்டக் களத்தில் இருந்த சாகுல்ஹமீது உஸ்மானி நம்மிடம், ‘‘சி.ஏ.ஏ-வைத் தனியாகப் பார்த்தால் நல்ல சட்டம் என்றுதான் தோன்றும். அதன் தொடர்ச்சியான என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை சேர்த்துப் பார்த்தால்தான் அந்தச் சட்டங்களின் ஆபத்தையும் மத்திய அரசின் உள்நோக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும். இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் நோக்கம் மட்டுமே இதில் இருக்கிறது. இதை எதிர்த்தே நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்துகிறோம். இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம். பாசிச அரசாங்கத்திடமிருந்து மீண்டும் சுதந்திரம் கோரிப் போராடுகிறோம். எங்கள் போராட்டம் நிச்சயம் ஜெயிக்கும்’’ என்றார்.

மதுரை

மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில், பெண்களின் போராட்டம் ஒரு மாத காலமாகத் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தை மகபூப்பாளையம் ஜமாத் நிர்வாகம் ஒருங்கிணைத்தாலும், எந்த இஸ்லாமிய அமைப்பையும் முன்னிலைப்படுத்தப்படாமல் மக்கள் போராட்டமாகவே நடந்துவருகிறது. போராட்டத்தில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்லாமிய மக்கள் தினமும் வந்து கலந்துகொள்கிறார்கள். அவர்களோடு மற்ற மதத்தைச் சார்ந்த மக்களும் பங்கேற்கிறார்கள்.

மதுரை ஜின்னா திடலில்...
மதுரை ஜின்னா திடலில்...

அரசியல் கட்சித் தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, தொல். திருமாவளவன், சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி யிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க காவல்துறை கடும் முயற்சி மேற்கொண்டும், ஒரு பலனுமில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுக்கு, ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஹென்றி டிபேன், வழக்கறிஞர் அஜ்மல் கான் உட்பட பல வழக்கறிஞர்கள் சட்டரீதியாக உதவிவருகின்றனர்.

போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான மகபூப்பாளையம் ஜமாத் தலைவர் நிஜாம் அலிகான், ‘‘தமிழக அரசு ‘இந்தச் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடர்வோம். இந்து, கிறிஸ்துவ சகோதரிகளும் கலந்துகொள்கிறார்கள். பல்வேறு கட்சித் தலைவர்களும், மாற்றுமதத்தைச் சார்ந்த சகோதரர்களும் வருகை தந்து எங்களுக்கு நம்பிக்கையளிக்கின்றனர். எத்தனை நாள்களானாலும் எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

சேலம்

சேலம் கோட்டைப் பகுதியில்...
சேலம் கோட்டைப் பகுதியில்...

சேலம் மாவட்டம் கோட்டை பகுதியில் பிப்ரவரி 17-ம் தேதியிலிருந்து போராட்டம் நடந்துவருகிறது. தினமும் எழுச்சியோடு பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொள்கிறார்கள். போராட்டக் களத்தில் இருந்த சாய்ராபானு, ‘`சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றை நன்றாக அறிந்த 30 பெண்கள் சேர்ந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தோம். இன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்தச் சட்டங்கள் குறித்த தெளிவை உருவாக்கி இருக்கிறோம். இந்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்குமே பாதிப்பு ஏற்படும். காந்திய தேசத்தில் அகிம்சை வழியில் போராடுகிறோம். நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்துவந்தாலும், ஆத்துப்பாலம் பகுதியில் நடந்துவரும் போராட்டமே பெரும் எழுச்சியோடு நடந்துவருகிறது. போராட்டக் களத்தில் நடத்தப்படும் திருமணங்கள், கிறிஸ்துவர்களின் ஆதரவு, கறுப்பு பலூன்களைப் பறக்கவிடுவது என தினமும் கவனம் ஈர்க்கப்படுகிறது.

கோவை ஆத்துப்பாலத்தில்...
கோவை ஆத்துப்பாலத்தில்...

போராட்டக் களத்தில் இருந்த ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’ அமைப்பின் கோவை மாவட்டச் செயலாளர் சபீர் அலி நம்மிடம், ‘‘பாகிஸ்தான் பிரிந்தபோது `இந்தியா எங்கள் நாடு’ என்ற எண்ணத்தில் இங்கேயே தங்கியவர்கள்தான் இங்கு உள்ள இஸ்லாமியர்கள். எங்களைத் துரத்திவிட்டு ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது மோடி அரசு. இஸ்லாமியர்களைக் குறிவைத்து குடியுரிமை இழக்கச் செய்வதற்கான முயற்சி நடக்கிறது. காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. எங்கள் குடியுரிமையை நிலைநிறுத்துவதற்காக நாங்கள் போராடி மடிவதற்கும் தயாராக இருக்கிறோம். தமிழக சட்டமன்றத்தில் இந்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் வரை தமிழக அரசை நோக்கி எங்களது போராட்டம் இருக்கும். தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக எங்களது போராட்ட வடிவத்தை மாற்றுவோம்” என்றார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மணமேல்குடியில்...
புதுக்கோட்டை மணமேல்குடியில்...

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பிப்ரவரி 16-ம் தேதியில் இருந்து போராட்டம் நடந்துவருகிறது. போராட்டக் களத்தில் இருந்த ஜலீல் அப்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஆகியோரிடம் பேசினோம். “ஓர் ஊரில் ஒரு திருட்டுச் சம்பவம் நடந்து, யார் திருடியது என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்காத சூழ்நிலையில், ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து, ‘நீங்கள் திருடவில்லை’ என்று நிரூபியுங்கள் என்று சொன்னால் எப்படி யிருக்கும்? அப்படி அபத்தமான சட்டமாகத்தான் இருக்கிறது, குடியுரிமைத் திருத்தச் சட்டம். இந்தச் சட்டத்தால் நாட்டு மக்கள் அனைவருமே பாதிப்புக்குள்ளாக வாய்ப்புண்டு. எங்கள் பகுதியில் உள்ள மீனவ சகோதரர்களும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். மக்கள் போராட்டம் நிச்சயம் வெல்லும்’’ என்றார்.

போராட்டங்கள் தொடர்கின்றன... என்ன செய்யப்போகிறது எடப்பாடி அரசு?