Published:Updated:

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு - நெல்லையில் திடீர் `மெகந்தி’ போராட்டம்

தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் `நோ என்ஆர்சி’, `நோ சிஏஏ’ என மெகந்தி மூலம் கைகளில் எழுதி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் நூதன போராட்டத்தில் இஸ்லாமியப் பெண்கள் ஈடுபட்டனர்.

மெகந்தி போராட்டம்
மெகந்தி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றுக்கு இடையே, வீட்டின் முற்றத்தில் சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய கோலம் போடும் போராட்டம் நடந்துவருகிறது. வி.ஐ.பி வீடுகளின் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்தப் போராட்டம் கிராமங்கள் வரை பரவியிருக்கிறது.

மெகந்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்
மெகந்தி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி சார்பாக மெகந்தி வைத்துக்கொள்ளும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் தங்களின் கைகளில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான வாசகங்களை மெகந்தி மூலம் எழுதிக்கொண்டார்கள்.

விமன் இந்தியா மாவட்டச் செயலாளர் ரினோஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், தேசிய குடியுரிமைக் கணக்கெடுப்பின்போது அரசிடம் ஆவணங்கள் எதையும் கொடுக்க மாட்டோம் எனவும் உறுதியேற்றார்கள்.

நூதன போராட்டம்
நூதன போராட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் இந்த மெகந்தி போராட்டம் நடைபெற்றது. இதேபோன்று நெல்லை மாவட்டத்தின் மூலைக்கரைபட்டி, களக்காடு, ஏர்வாடி, துலுக்கர்பட்டி, வீரவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி சார்பாக மெகந்தி போராட்டம் நடைபெற்றது.