Published:Updated:

மனமே நலமா? - 3 - #LetsKeepCalm

மனமே நலமா?
பிரீமியம் ஸ்டோரி
News
மனமே நலமா?

மருத்துவர் யாமினி கண்ணப்பன்

“சந்தோஷம்... சந்தோஷம்... வாழ்க்கையின் பாதிபலம்... சந்தோஷம் இல்லையென்றால் மனிதருக்கு ஏது பலம்...”

“வாவ் மினி, பாட்டெல்லாம் அசத்தலா இருக்கே. என்ன விசேஷம்?!”

“தீபாவளி முடிஞ்ச எெபக்ட்தான் டாக்டர். கொண்டாட சின்ன வாய்ப்பு கிடைச்சது, அதான் கொண்டாடித் தீர்த்துட்டேன்.”

“ரொம்ப சரியா சொன்னே மினி... ரொம்ப சவாலான இந்தக் காலகட்டத்துல இப்படித்தான் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கணும்.”

“ஆனா எல்லோராலயும் அது முடியிறதில்லை. எங்கே, யாரைப் பார்த்தாலும் ‘டிப்ரஷன்’னு சொல்றாங்க. அதைப் பத்திதான் இன்னைக்குப் பேசணும்னு வந்தேன் டாக்டர்.”

“பேசவேண்டிய விஷயம்தான் மினி. ‘டிப்ரஷன்’ அல்லது ‘டிப்ரெசிவ் டிசார்டர்’ (Depressive Disorder) எனப்படும் மனச்சோர்வு நோய் தான், உலகளவில் மனிதனை முடக்கும் முக்கியமான காரணமாக இருப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவுல சுமார் ஐந்து கோடி மக்கள், ‘டிப்ரஷன்’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், அதைக் கண்டுபிடிக்காம, சிகிச்சை எடுத்துக்காம இருப்பதா தரவுகள் சொல்லுது.உண்மையில், இந்த நோயைப் பற்றிய சரியான புரிதல் இருந்தாலே பாதி குணமான மாதிரிதான்.”

மனமே நலமா? - 3 - #LetsKeepCalm

“டிப்ரஷன் பத்தி விரிவாச் சொல்லுங்க டாக்டர்?”

“மனோதத்துவ அறிவியல், சாதாரணமா ஒரு மனிதனுக்கு ஏற்படும் கவலை, அழுத்தம், மனபாரம், சோகம் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மனநோய்தான் ‘டிப்ரஷன்’னு வகைப்படுத்துது. மனிதனின் இயல்பான உணர்ச்சிகள்தான் சோகம், கவலை எல்லாம். ஆனால் ‘டிப்ரஷன்’ இருக்கவங்களுக்கு அன்றாட வாழ்க்கையே சிக்கலாகத் தொடங்கி தற்கொலை எண்ணம் வருவது வரை பல பாதிப்புகள் ஏற்படும். தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி போல இதுவும் ஒரு வியாதிதான். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் எளிதாக இதற்குத் தீர்வு காண முடியும்.”

“ஓகே டாக்டர். ஆனா ஒருவருக்கு ‘டிப்ரஷன்’ இருக்கா இல்லையான்னு எந்த அறிகுறிகளை வெச்சுக் கண்டுபிடிக்கிறது?”

“பொதுவா, பாதிப்படைஞ்சவங்க மூன்று முக்கிய அறிகுறிகளை வெளிப்படுத்துவங்க. எதிலும் மகிழ்ச்சி அடையாமல் எப்பவும் கவலையா, அழுத்தமா உணர்வது, எந்தச் செயலிலும் ஆர்வம் காட்டாமல் இருப்பது, உடல் - மனம் இரண்டும் சோர்ந்து மிகவும் பலவீனமாக இருப்பது. அதிலும், இரண்டு வாரங்களுக்கு மேலா இதே மனநிலை தொடர்ந்து அன்றாட வாழ்க்கையை பாதிச்சதுன்னா அதுதான் ‘டிப்ரஷனு’க்கான அறிகுறி.”

“ம்ம்ம்ம்... புரியுது டாக்டர்”

“என்ன மினி ஆழ்ந்து சிந்திக்குற மாதிரி தெரியுது. நான் இன்னும் முடிக்கல. இந்த அறிகுறிகளோடு கூடுதலா, இரண்டாம் நிலை அறிகுறிகளும் இருக்கு”

“இரண்டாம் நிலை அறிகுறிகளா? சொல்லுங்க... நோட் பண்ணிக்கிறேன்.”

“1. கவனக் குறைவு

2. தன்னம்பிக்கை குறைதல்

3. குற்றவுணர்வு

4. எதிர்காலத்தில் நம்பிக்கையின்மை

5. தற்கொலை எண்ணம்

6. தூக்கமின்மை

7. பசியின்மை

இந்த அறிகுறிகளில் எல்லாமே ஒருத்தருக்கு இருக்கணும்னுகூட அவசியமில்லை. சில அறிகுறிகள், வாழ்க்கையின் தன்மை, செயல்பாடுகள்னு பல்வேறு அளவுகோல்களைக் கொண்டு, முழுவதுமா ஆராய்ந்தபிறகுதான் ஒருவருக்கு ‘டிப்ரஷன்’ இருப்பதை உறுதிசெய்ய முடியும் மினி.”

“ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியுது டாக்டர். ‘டிப்ரஷன்’ பற்றிய நிறைய தவறான எண்ணங்கள் எங்ககிட்ட இருக்கு.”

மனமே நலமா? - 3 - #LetsKeepCalm

“சாரி டு ஸே... பட் யூ ஆர் ரைட். ‘டிப்ரஷன்’ என்பது ஒருவரின் கட்டுப்பாட்டை மீறி ஏற்படும் மன உபாதைங்கிற அடிப்படையே நிறைய பேருக்குப் புரியலே. எந்தக்காலத்திலும் ஒருவர் தனக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களுக்குப் பொறுப்பாக முடியாது. உன்னைக் கேட்டுக்கிட்டா தலைவலி வருது? அப்படித்தான் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும். பொதுவா, மன உளைச்சலில் இருக்கவங்ககிட்ட ‘நீ இவ்வளவு பலவீனமான ஆளா’, ‘நான் பார்க்காத கஷ்டத்தையா நீ பார்த்துட்ட’, ‘வசதி வாய்ப்பு, நல்ல குடும்பம் எல்லாம் இருந்தும் உனக்கென்ன குறை’ - இப்படிப் பல கேள்விகள் கேட்கப்படுவதுண்டு. உண்மையில், இந்தக் கேள்விகள்தான் ரொம்பவும் ஆபத்தானவை. சிம்பிளா சொல்லணும்னா, ஆஸ்த்மா நோய் இருக்கவங்ககிட்ட ‘உன்னைச் சுற்றி இவ்வளவு காற்று இருக்கே, நீ ஏன் சுவாசிக்கக் கஷ்டப்படுறே’ன்னு கேக்கறது மாதிரி அபத்தமான, ஆபத்தான கேள்விகள் இதெல்லாம்.”

“இனி இந்தத் தப்பைப் பண்ண மாட்டேன் டாக்டர். அப்படியே இதுக்கும் பதில் சொல்லுங்க, ‘டிப்ரஷன்’ வருவதற்கான காரணங்கள் என்னென்ன?”

“ஒருவர் ‘டிப்ரஷன்’ நோயால் பாதிக்கப்படுவதற்கு உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த மூன்று காரணங்கள் இருக்கலாம். தலைவலிக்குன்னு உட்கொள்ளும் ஒரு மாத்திரை, மூளையில் சில வேதிமாற்றங்களை உருவாக்கி அதனால் மனச்சோர்வு உண்டாக்கலாம். அப்பா, அம்மாவுக்கு ‘டிப்ரஷன்’ இருந்தா குழந்தைக்கும் ஏற்படும் மரபியல் காரணங்கள், ஊட்டச்சத்துக் குறைவு, நரம்பியல் கோளாறு, தைராய்டு இப்படி நிறைய இருக்கு. இது உடல்ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தும் ‘டிப்ரஷன்’.

இரண்டாவது, மனரீதியான காரணங்கள். சாதாரணமாவே மிகவும் எதிர்மறை எண்ணம் கொண்டவர், ஏதேனும் பெரிய பாதிப்பினால் ஏற்பட்ட பின்விளைவு ஆகியவற்றைச் சொல்லலாம்.

மூன்றாவது, இப்போ கொரோனாச் சூழலில் ஏற்பட்ட அழுத்தம், வேலையிழப்பு போன்றவை சமூக ரீதியான காரணங்களாக இருக்கலாம். எந்தவிதக் குறிப்பிடத்தக்க காரணமும் வரையறுக்க இயலாத போதும்கூட, ‘டிப்ரஷனா’ல் ஒருவர் பாதிப்படைய முடியும் என்பதே அறிவியல். இந்தக் காரணங்களின் கலவையால், ஒருத்தரோட மூளையில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும். அதுதான் ‘டிப்ரஷன்’ ஏற்படக் காரணம்.”

மனமே நலமா? - 3 - #LetsKeepCalm

“என்னது காரணமே இல்லாம கூட ‘டிப்ரஷன்’ வருமா?”

“யெஸ். நான் சந்திச்ச ஒரு பேஷன்ட் பத்திச் சொல்றேன் கேளு. அவருக்கு வயசு 60. பிரச்னையில்லாத ரிட்டையர் மன்ட் வாழ்க்கை. பணரீதியா எந்தப் பிரச்னையும் இல்ல. பிள்ளைங்க எல்லாம் வெளிநாடுகளில் செட்டிலா கிட்டாங்க. குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி அவருக்கு எந்தச் சிக்கலும் வாழ்க்கையில் இல்ல. ஆனா, திடீர்னு அவரு சோர்ந்து போயிட்டாரு. ஷேவ் பண்ணிக்கூட பலநாள் ஆகுது, உடல் எடை ரொம்பக் குறைஞ்சிடுச்சு. தூக்கமில்லை, எதுலயும் ஆர்வம் இல்ல. ஆறு மாசம் கஷ்டப்பட்டிருக்காரு. தலையிலிருந்து கால் வரை முழு செக்-அப் பண்ணியிருக்காங்க. உடல் சிக்கலும் இல்ல. யோகா, மெடிட்டேஷன் எல்லாம் ட்ரை பண்ணியாச்சு. அப்பவும் அவருக்குத் தீர்வு கிடைக்கல. கடைசியா என்கிட்ட வந்தாங்க. ‘அவரு ரொம்ப ஸ்ட்ராங்கான ஆளு, மனசுல எல்லாம் பிரச்னை இருக்காது’ன்னு தயங்கிகிட்டே தான் வந்தாங்க. நிறைய கன்வின்ஸ் பண்ணிதான் மருந்து கொடுக்க வேண்டியிருந்தது. அவ்வளவுதான், அப்படியே மூடுபனி விலகின மாதிரி சில நாளில் பளிச்சுனு, சந்தோஷமா ஆளே மாறிட்டாரு. கிரிக்கெட் மேட்ச் பார்க்க லண்டன் போற அளவு வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாரு. அவருக்கு எந்தக் காரணமும் இல்லாமதான் ‘டிப்ரஷன்’ வந்தது. சரியான மாத்திரைகளால்தான் குணமாச்சு. மனசு ஒரு மனுஷன என்ன பண்ணும், மாத்திரை அந்த மனச எப்படிச் சரிபண்ணும்னு இப்போ புரியுதில்ல மினி?”

“புரியுது டாக்டர், ஆனா இது புரியாமத்தான் ஒவ்வொருத்தரும் மனசுக்குள்ள நிறைய அழுத்தங்களை ஒளிச்சுவெச்சிருக்காங்க இல்ல?”

“ஒளிச்சுதான் வெச்சிருக்காங்க. இப்போ எல்லோரும் முகத்துக்கு மாஸ்க் போட்டுப் பழகிட்டோம், அப்படி மனதுக்கு மாஸ்க் போடுபவர்களும் உண்டு மினி. அதுக்குப் பேருதான் ‘ஸ்மைலிங் டிப்ரஷன்.’ ரொம்பத் துறுதுறுனு, எப்பவும் சிரிச்சமுகமா இருப்பவர்கள்கூட இந்தப் பிரச்னையால் அவதிப்படலாம். தற்கொலைகள் நிகழ்ந்தபிறகு, ‘எதிர்பார்க்கவே இல்ல, சிரிச்சுட்டு சாதாரணமாதான் இருந்தாங்க’ என நெருக்கமானவர்கள் கலங்குவதைப் பார்த்திருப்போம் இல்லையா. ஒருவேளை அவங்க ‘டிப்ரஷன்’ நோயால பாதிக்கப்பட்டிருக்கலாம்.”

“தற்கொலை வரைக்கும் யோசிக்க வைக்கிற டிப்ரஷன் ஒருத்தரோட மனச என்னதான் பண்ணும் டாக்டர்?”

“பெரும்பாலும் ‘டிப்ரஷன்’ நோயால் அவதிப்படுபவர்கள் ‘Negative cognitive triad’ எனும் முக்கோண எண்ணச் சுழற்சியில் சிக்கிக்கொள்வதுண்டு. அதாவது, ஒருவர் தன்னைப் பற்றி, உலகத்தைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி நிறைய எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பது. இந்த மனநிலை ரொம்ப அதிகமாகும்போதுதான் தற்கொலை எண்ணமெல்லாம் வருது.”

“டாக்டர், டிப்ரஷனுக்கான சிகிச்சைகள் என்ன?”

“காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். சிலருக்கு மருந்துகள் மூலமா குணமடையும். சிலருக்கு மனோதத்துவ ஆலோசனை தேவைப்படும். ஒரு சிலருக்கு தொடர்ந்து அவர்களின் நடவடிக்கைகளை மாற்றுவதற்குப் பயிற்சிகள் தரணும். பொதுவா எட்டு, ஒன்பது மாதம் வரை டிப்ரஷனுக்கு சிகிச்சை அளிக்கவேண்டியிருக்கும். பலர் பாதிப்படையும் ஒரு பொதுவான உளச்சிக்கல் ‘டிப்ரஷன்.’ மிக எளிதாக சரிசெய்யக்கூடிய இந்த மன நோயைப் பற்றிய புரிதல் இல்லாமல்தான் பலர் வாழ்க்கையை வீணடிக்குறாங்க. ஸ்ட்ரெஸ் வேற டிப்ரஷன் / டிப்ரெசிவ் டிசார்டர் வேறங்கிற அடிப்படைப் புரிதலில் இருந்துதான் இதற்கான தீர்வு ஆரம்பிக்குது.”

“அப்போ கண்டிப்பா ஒருநாள் இந்த ஸ்ட்ரெஸ் பத்தியும் புரியும்படி விளக்கிடுங்க டாக்டர்.”

“நிச்சயமா மினி. பட், இப்போ கிளம்பணும். திரும்ப அடுத்த வாரம் சந்திப்போமா?”

(மினி-மன உரையாடல் தொடரும்)

டந்த இரண்டு வாரங்களைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்...

1) என்ன செய்தாலும் அதில் ஆர்வம் குறைந்து, மகிழ்ச்சியற்று இருக்கிறீர்களா?

அப்படி இல்லவே இல்லை - 0

பல நாள்கள் - 1

பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் - 2

கிட்டத்தட்ட எல்லா நாள்களுமே - 3

2) சோர்வாக, மன அழுத்தத்துடன் நம்பிக்கையற்று இருக்கிறீர்களா?

அப்படி இல்லவே இல்லை - 0

பல நாள்கள் - 1

பாதிக்கும் மேற்பட்ட நாள்கள் - 2

கிட்டத்தட்ட எல்லா நாள்களுமே - 3

உங்கள் விடைகளின் மொத்த மதிப்பெண் 3-க்கு மேல் இருந்தால், உங்கள் மனநலன் மீது கூடுதல் அக்கறை கொண்டு உரிய மருத்துவ ஆலோசனை பெறவும்.