
- மருத்துவர் யாமினி கண்ணப்பன்
“ஹலோ மினி ! வா வா... உனக்காகத்தான் வெயிட்டிங். ஊர்ல இருந்து பாட்டியோட ஸ்பெஷல் கைமுறுக்கு வந்திருக்கு. சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”
“வாவ். பட், இருங்க டாக்டர், நல்லா கை கழுவிட்டு வரேன். கை கழுவாம சாப்பாட்டுல கைவைக்கவே மாட்டேன். OCD எனக்கு.”
“OCD யா..?”
“ஆமா டாக்டர், பிக்பாஸ்-ல சுரேஷ் தாத்தாகூட சொல்வாரே, அதேதான். அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ்ஆர்டர் (Obsessive Compulsive Disorder). எனக்கு எப்பவும் எல்லாம் சுத்தமா இருக்கணும், அடுக்கி வைக்கணும், கை கழுவாம சாப்பிடக் கூடாது இதெல்லாம் OCD தான, உங்களுக்குத் தெரியாததா டாக்டர். நீங்க சொல்லுங்க.”
“அப்பாடா இப்போவாவது டாக்டர்கிட்ட கேட்கணும்னு உனக்கு தோணுச்சே. உனக்கு OCD எல்லாம் இல்ல மினி. நீ பர்மிஷன் கொடுத்தா OCD பத்தி விளக்கமா சொல்றேன்”
“என்ன டாக்டர் கிண்டல் பண்றீங்க? ஏதோ எல்லாரும் சொல்ற மாதிரி சொல்லிட்டேன். சரி நீங்க தெளிவுபடுத்துங்க, OCD அப்படினா என்ன?”
“OCD அப்படிங்குற வார்த்தைய இப்போ நிறைய பேர் பரவலா பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. OCD இருக்குனு அதை பெருமையா சிலர் சொல்றதையும் பார்க்க முடியுது. இது தப்பு மினி. OCD அப்படிங்குறது ரொம்பவும் சிக்கலைத் தரக்கூடிய, வலி மிகுந்த மனநோய். எல்லோரும் இதுதான் OCD-ன்னு உருவாக்கி வச்சிருக்கிற புரிதலுக்கும், உண்மையான அந்த மனச்சிக்கலுக்கும் நிறையவே வேறுபாடு இருக்கு.
OCD அப்படிங்குறத தமிழில் எண்ணம் மற்றும் செயல் சுழற்சின்னு சொல்லலாம். எல்லோருக்குமே, நம்ம சிந்தனைகள், எண்ணங்கள் மேல ஒரு கன்ட்ரோல் இருக்கும். ஆனால் ஒரு தேவையற்ற எண்ணம், அந்த நபரின் கட்டுப்பாட்டையும் மீறி, தொடர்ந்து ஒருத்தருக்கு திரும்பத்திரும்ப வந்து, அந்த எண்ணத்தினால் அவங்க வாழ்க்கை பாதிப்படையுறதுதான் OCD’’

“ஒரு சின்ன உதாரணம் சொல்லுங்களேன் டாக்டர்.”
“இந்தக் கொரோனா காலத்துல எல்லாருக்குமே நோய்த்தொற்று, பர்சனல் சுத்தம் மேல அதிக கவனம் இருக்கு இல்லையா. OCD இருக்கவங்களுக்கு இந்த எண்ணமே ரொம்ப அதீதமா இருக்கும்.
ஒரு இடத்தைத் தொட்டுட்டாங்கன்னா நோய் பரவுதல் இருக்கும்னு அவங்க மனசு ரொம்பப் படபடக்கும், அளவுக்கு அதிகமா பயப்படுவாங்க, அதைத் தவிர வேற எதுவும் பல மணிநேரத்துக்கு அவங்களால யோசிக்கவே முடியாது, இதுக்குப் பேர்தான் எண்ண சுழற்சி(Obsessive thoughts), இந்த எண்ணங்களால் திரும்பத் திரும்ப கையைக் கழுவிட்டே இருப்பாங்க. நமக்கு ஒரு நிமிஷம் கை கழுவினா திருப்தி அடைஞ்சு அடுத்த வேலைக்குப் போயிடுவோம் இல்லையா? ஆனா OCD இருக்கவங்களுக்கு அது முடியாது, பல மணிநேரம்கூட வாஷ் பேசின் முன்னாடி நின்னு கையைக் கழுவிட்டே இருப்பாங்க, தோலெல்லாம் உறிஞ்சு ரத்தம் வர அளவுக்குக்கூட சமயங்களில் நடக்கும். இதுதான் செயல்சுழற்சி அதாவது Compulsive behaviour.”
“அச்சச்சோ. டாக்டர், இது இவ்ளோ சீரியசான விஷயமா?, OCD -ல முக்கியமா என்னென்ன வகைகள் இருக்குன்னு சொல்லுங்க?”
“மனநல மருத்துவத்துல OCD பிரச்னை இருக்கவங்களை ஐந்து வகைகளா பிரிக்கிறோம். முதல் வகையில் இருக்கிறவங்க, முன்னாடி சொன்ன உதாரணம் மாதிரி கிளீன் பண்ணிட்டே இருக்கிறவங்க, நோய்த்தொற்று, மாசுபாடு ஏற்படும்னு அதீத பயத்துலயே இருப்பாங்க. அந்த பயத்தினால் ஒரு செயலைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட முறையில் பலமுறை செய்வாங்க.”
“புரியுது டாக்டர்.”
“இரண்டாவது வகையில இருக்கிறவங்க, செக் பண்ணிட்டே இருப்பாங்க மினி. கதவு பூட்டியிருக்கான்னு ஒண்ணுக்கு ரெண்டு முறை செக் பண்றதுல தப்பு இல்ல, OCD இருக்கிறவங்க பலமுறை செக் பண்ணுவாங்க. கேஸ் ஆப்-ல இருக்கான்னு ஒரு முறையில்லை, அன்றாடச் செயல்கள் பாதிக்கும் அளவுக்கு பலமுறை செக் பண்ணுவாங்க. அப்படிச் செய்யலைனா அவங்களுக்கோ, மத்தவங்களுக்கோ ஆபத்து ஏற்படும்னு பயப்படுவாங்க.”
“ப்ச்... கேக்கவே கஷ்டமா இருக்கு டாக்டர் . மூணாவது வகை சொல்லுங்க?”
“அடுத்தது Symmetry-ன்னு சொல்லுவோம். அடுக்கி வெச்சுக்கிட்டே இருப்பாங்க, இந்த கலர் பென்சில் இந்த இடத்துலதான் இருக்கணும், எல்லாமே ஒரு விதத்துல Arrange பண்ணியிருக்கணும்னு நினைப்பாங்க. என்னோட ஷூவ இந்தக் குறிப்பிட்ட முறையில அடுக்கலைன்னா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமப் போகும்கிற மாதிரி சம்பந்தமே இல்லாததைத் தொடர்புபடுத்தி பயப்படுவாங்க. ஒரு குறிப்பிட்ட பொருளை, குறிப்பிட்ட எண்ணிக்கையில் சீராக வரிசைப்படுத்தி வைக்கணும்னு நினைப்பாங்க.
அடுத்து, நான்காவது. தேவையற்ற பொருள்களைச் சேர்த்து வைக்குறவங்க. எந்த ஒரு பொருளையும் அவங்களால தூக்கிப்போட முடியாது. கிழிஞ்ச கவர்ல இருந்து, அட்டை, பழைய பேப்பர்னு வீடு முழுக்க பொருள் சேத்துட்டே இருப்பாங்க. இது பின்னாடி பயன்படும்னு முறையா எடுத்துவைக்குறது சரிதான். ஆனா OCD இருக்கிறவங்க இப்படி எடுத்துவைக்குற பொருள்களை அவங்களால கூட பின்னாடி தேடி எடுத்துப் பயன்படுத்த முடியாது.”
“ஐயோ ஆமா டாக்டர். ஊர்ல எங்க மாமா கூட இப்படித்தான், வீடுமுழுக்க பொருளா இருக்கும். கால் வைக்கக்கூட இடமில்லாம ஒரு ரூம் முழுக்க அவர் பொருள் அடைச்சு வெச்சிருப்பாங்க, இதனால எங்க அத்தையோட பெரிய சண்டையெல்லாம் வந்திருக்கு.”
“ம்ம்... பாத்தியா மினி. இதுதான் OCD இருக்கிறவங்களோட பெரிய சிக்கலே, இதனால அவங்க மட்டும் இல்லாம அவங்களைச் சுத்தி இருக்கிறவங்களும் நிறைய கஷ்டப்படுவாங்க. இந்த நாலு வகையும்கூட சுலபமா நம்மால கண்டுபிடிச்சிட முடியும் மினி. ஆனா இன்னொரு வகை இருக்கு. OCD பிரச்னைக்கு ‘சைலன்ட் டிசீஸ்’னு பேர் வரக் காரணமா இருக்கிற ஐந்தாவது முக்கியமான வகைப்பாடு அது. வெளியவே தெரியாம ஒருத்தர் மனசுக்குள்ள இருந்து அவங்கள பாடாப்படுத்துற வகை.”
“என்ன டாக்டர் பயமுறுத்துறீங்க, இவ்ளோ பெரிய சிக்கலை மனசுக்குள்ளேயே வெச்சிருந்தா அது எவ்ளோ கஷ்டம் இல்ல.”
“ஆமா மினி. ஒரு மனுஷனோட மனசு எப்பவும் அவனுடைய கட்டுப்பாட்டுலேயே இருக்குறதில்லை. தப்புன்னு தெரிஞ்சும் நம்ம எல்லோரோட மனசிலேயும் சில கெட்ட எண்ணங்கள் வரும். ஆனா அதை நாம ஒதுக்கித் தள்ளிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். ஆனா இது OCD-ங்கிற நோயா ஒருத்தரை பாதிக்கும்போது. அப்படியான எண்ணங்களை அவங்களால ஒதுக்கவே முடியாது. அவங்களையும் மீறி அந்த எண்ணம் அவங்களுக்கு திரும்பத் திரும்ப வரும். அது அவங்களை ரொம்பவும் குற்ற உணர்வுக்குள்ள தள்ளி அவங்களைக் காயப்படுத்தும்,”

“என்ன மாதிரியான எண்ணங்கள் டாக்டர்?”
“எப்படியான எண்ணங்களாகவும் அது இருக்கலாம் மினி. சில உதாரணங்கள் மட்டும் சொல்றேன். ஒரு திருமணமான பெண் என்னைப் பார்க்க வந்திருந்தாங்க, அவங்களுக்கு காரணமே இல்லாம, அவங்க கணவரோட உறவினர் ஒருத்தரைப் பார்க்கும்பொழுது கட்டி யணைக்கணும் போல எண்ணம் இருந்திருக்கு. இது ரொம்பவும் தவறுன்னு அவங்களுக்குத் தெரியுது, அவர்மீது எந்தப் பாலியல் ஈர்ப்பும் இந்தப் பொண்ணுக்குக் கிடையாது. தன்னுடைய எண்ணம் அப்படி இருக்குறதுல அவங்க மேலேயே அவங்களுக்கு அருவருப்பு, கோபம் எல்லாம் இருக்கு. தன்னை மீறி அப்படியொரு எண்ணம் வரதுக்கு தண்டனையா அவங்களே அவங்களுக்கு சூடு வெச்சிக்கிட்டாங்க. இதை யார்கிட்டேயும் சொல்லவும் முடியாம, இந்த எண்ணத்தைப் போக்கவும் முடியாம, எல்லோர்கிட்ட இருந்தும் தன்னைத் தனிமைப்படுத்திக்கிட்டாங்க, ரூமுக்குள்ளேயே பல நாள் அடைஞ்சுகிடந்து, குடும்பத்துல இதனால பல சிக்கல். அவங்களுக்கு இருந்ததும் தீவிரமான OCD பிரச்னைதான். இன்னொரு பேஷன்ட் ஒரு எட்டு வயசுப் பையன், அவனுக்கு அம்மா, பாட்டின்னு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் முத்தம் கொடுக்கணும்னு தோணுது, பயந்து, அழுது, அந்தச் சின்னப் பையன் நான் ரொம்பக் கெட்டவன், நான் சாகணும்னு எல்லாம் அவனோட நோட்ல எழுதி வெச்சிருந்தான். அவனுக்கும் OCD-க்கான சிகிச்சைதான் தீர்வு.”
“டாக்டர்... இந்த எண்ணங்கள்...”
“மினி, நீ என்ன கேட்க வரேன்னு புரியுது. இந்த எண்ணங்கள் பாலியல் எண்ணங்களாத்தான் இருக்குமான்னுதானே? இல்லவே இல்ல. ஒரு நபர், தான் மிகவும் நேசிக்குற கடவுளைக் கும்பிட கோயிலுக்குப் போகும்போது எல்லாம், அந்த சாமிய செருப்பால அடிக்குற மாதிரியும், கெட்ட வார்த்தைகளும், மனசுல தோணுதுன்னு என்கிட்ட வந்தாரு. இதுவும் OCDதான். இப்படி அந்த எண்ணங்கள் எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஆனா, அந்த எண்ணம் அவங்களை ரொம்பவும் காயப்படுத்தும், குற்றவுணர்வைக் கொடுக்கும், அந்த எண்ணங்களை அவங்க செயல்படுத்தாம இருக்க எல்லா முயற்சிகளும் எடுப்பாங்க.”
“புரியுது டாக்டர். இந்த மாதிரி பிரச்னைகளை யாருகிட்டயும் அவங்களால சொல்லக்கூட முடியாது இல்ல. அவங்க எண்ணங்களுக்கு அவங்க பொறுப்பும் இல்ல. இப்போ நீங்க சொன்னது நிறைய பேருக்கு நிச்சயம் உதவும் டாக்டர். தங்களுக்கு இருக்கும் பிரச்னைக்கு அவங்க காரணம் இல்லன்னு ஒரு புரிதலும், அதற்காக ஒரு மனநல மருத்துவரைச் சந்திக்கும் தைரியமும் நிச்சயம் வரும்.”
“யெஸ் மினி. முறையான சிகிச்சைகளின் மூலம் நிச்சயம் அவங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.”
“தேங்க் யூ டாக்டர். அந்த சிகிச்சைகள் பத்தி அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் பேசணும். என்னைப் போலவே இந்த சப்ஜெக்ட்ல, நிறைய சந்தேகங்கள் இருக்கும். என் நண்பர்களும் இருப்பாங்க. அவங்களுக்கும் உங்க உதவி வேணும்.”
“கண்டிப்பா மினி.”
“ஓகே டாக்டர். அப்போ கிளம்புறேன். என் நண்பர்களின் கேள்விகளோடு அடுத்த வாரம் உங்களைச் சந்திக்குறேன்.”
(மினி-மன உரையாடல் தொடரும்)
***
நண்பர்களே... மனநலம் தொடர்பாக உங்கள் கேள்விகள், சந்தேகங்களை manam@vikatan.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.
OCD இருப்பவர்
1. ஒரு நாளில், கைகள் சிவக்கும் அளவுக்கு 100 முறை கைகளைக் கழுவுபவர்.
2. தினமும் அலுவலகம் செல்லும் முன் மீண்டும் மீண்டும் வீட்டுக்கதவை மூடி, திறந்து மறுபடியும் மூடுபவர்.
3. எப்போதாவது தேவைப்படும் என்ற எண்ணத்தில் பல ஆண்டு செய்தித்தாள்களை வரிசைகூடப்படுத்தாமல் சேகரித்து வைப்பவர். (பின்னால் அது தேவைப்பட்டாலும் தேடி எடுக்கவியலாது)

OCD இல்லாதவர்
1. ஒவ்வொரு முறையும் சாப்பிடுவதற்கு முன் கைகளைத் தவறாமல் கழுவுபவர்.
2. இரவு தூங்குவதற்கு முன் கதவுகளும் ஜன்னல்களும் சரியாக மூடப்பட்டிருக்கின்றனவா என ஒன்றுக்கு இரண்டு முறை சோதிப்பவர்.
3. அனைத்து ஓய்வு நேரத்தையும், கூடுதலாக கையில் இருக்கும் பணத்தையும் தனக்கு மிகப்பிடித்த பொருள்களைச் சேகரித்து அதை பயனுள்ளதாக மாற்றும் நபர்.