
- மருத்துவர் யாமினி கண்ணப்பன்
‘‘வணக்கம் டாக்டர். உள்ள வரலாமா?’’
“வா... வா... மினி. வணக்கம். உட்காரு. எப்படி இருக்க?”
“தெரியல டாக்டர். ரெண்டு நாளா ஒரே தலைவலி. எல்லா அறிகுறிகளையும் கூகுள் பண்ணிப் பாத்துட்டேன், அநேகமா மைக்ரேன் தலைவலியா இருக்கலாம்னு நினைக்குறேன்.”
“நோ... நோ... மினி! உடம்பு சரியில்லைன்னா டாக்டர்கிட்டதான் போகணும். இன்டர்நெட் கிட்ட இல்ல.”
“ எல்லோரும் பண்றதுதானே டாக்டர். இதுல என்ன தப்பு இருக்கு?”
“இருக்கு மினி. இந்த இன்டர்நெட் காலத்துல ஒரு மருத்துவப் பிரச்னைக்கு நீங்க டாக்டரைக் கேட்காம இன்டர்நெட்ல தேடுறதால தேவையில்லாத நிறைய தகவல்கள் உங்ககிட்ட சேருது. இது அதிகமாகும்போது ‘Illness Anxiety Disorder’ (இல்னஸ் ஆங்க்ஸைடி டிசார்டர்)ங்குற பிரச்னை வருது.”
“அப்படின்னா?”
“தனக்கு ஏதாவது உடல்நலக் கோளாறு ஏற்படுமோ, அல்லது தன்னோட உடல்ல ஏதாவது பிரச்னை இருக்குமோங்குற அதீத மனப்பதற்றத்துலேயே ஒருத்தர் இருக்கும் மனநிலை.”

“ஓஹோ. இந்தப் பிரச்னை இருக்கவங்க என்னவெல்லாம் செய்வாங்க டாக்டர்? அவங்கள எப்படி அடையாளம் கண்டுக்க முடியும்?”
“முதற்கட்டமா சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவங்க சொல்ற பதில்களை வச்சு இந்தப் பிரச்னையைக் கண்டுபிடிக்கலாம்.”
“அந்தக் கேள்விகளைச் சொல்லுங்க டாக்டர். அது தெரிஞ்சா எல்லாருக்கும் பயன்படுமே...”
“1. பலமுறை மருத்துவர்களை அணுகி பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்கிறீர்களா?
2. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி நீங்களே சென்று மருத்துவப் பரிசோதனை செய்து கொள்கிறீர்களா?
3. மருத்துவரின் பரிந்துரையின்றி நீங்களாகவே வீட்டில் பரிசோதனைக் கருவிகளை வாங்கி வைத்திருக்கிறீர்களா?
4. உங்கள் உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்களிடம் அதிக நேரம் உடல்நலன், ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகளைப் பேசிக்கொண்டிருக்கிறீர்களா?
5. ‘உங்களுக்கு ஒன்றும் ஆகாது’ என அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் ஆறுதல் வார்த்தைகள் எதிர்பார்க்கிறீர்களா?
6. இணையத்தில் நிறைய நேரம் நோய் அறிகுறிகளைப் பற்றிய தேடல்களுக்காகச் செலவிடுகிறீர்களா?
7. கடுமையான டயட் அல்லது தீவிர உடற்பயிற்சி மூலமே ஆரோக்கியமாக மாற முடியும் என நினைக்கிறீர்களா?’’
“இந்த எல்லாமே நிறைய பேர் சகஜமா பண்ற விஷயங்கள்தானே டாக்டர்?”
“உண்மைதான் மினி, இதெல்லாம் அறிகுறிகள் தான். இந்த ஏழு கேள்விகளுக்கு ‘ஆமாம்’ அப்படிங்குற பதிலை ஒருத்தர் எத்தனை முறை சொல்றாரோ, அவருக்கு ‘Illness Anxiety Disorder’ இருக்க அந்த அளவு வாய்ப்பிருக்கு. இது எல்லாமே இருந்தா ஒருத்தருடைய இயல்பு வாழ்க்கை பாதிப்படையும் இல்லையா?”
“கண்டிப்பா டாக்டர். இந்த ‘Illness Anxiety Disorder’ - க்கு ஒரு உதாரணம் சொல்லுங்களேன்.”
“ம்ம்ம்... ஒருத்தருக்கு லேசா நெஞ்சு படபடப்பு இருக்குன்னு வெச்சுக்கோ. மத்தவங்க கொஞ்சம் ரிலாக்ஸாப் படுத்து, சரியாகிடுச்சான்னு பாப்பாங்க. ஆனா Illness Anxiety Disorder இருக்கவங்க, தங்களுக்கு மாரடைப்பு வரப்போகுதுன்னு பயப்படுவாங்க, சுருக்கமா சொல்லணும்னா, சின்ன விஷயத்துக்கே பெருசா பயப்படுவாங்க.”

“இது ஒரு மனநலன் சார்ந்த பிரச்னையா எப்போ மாறுது டாக்டர்?”
“ஒரு உடல்நலன் பிரச்னைய பத்தி ரொம்ப அதிகமா இன்டர்நெட்ல தேடுவாங்க. திரும்பத் திரும்ப பலமுறை மருத்துவரை சந்திப்பாங்க. ஒரு டாக்டர் ‘உங்களுக்கு ஒண்ணும் இல்லை’ன்னு சொன்னா திருப்தியடையாம இன்னொரு டாக்டரைப் பாப்பாங்க. ‘எதுவும் பிரச்னை இல்லை’ன்னு மருத்துவப் பரிசோதனை முடிவுகள் சொன்னாலும், நம்பாம திரும்பத் திரும்ப டெஸ்ட் எடுப்பாங்க. வீட்ல உபகரணங்கள் வாங்கி வெச்சு அவங்க BP, பல்ஸ், இப்படி உடல்நிலையை செக் பண்ணிட்டே இருப்பாங்க. அடிக்கடி கண்ணாடி முன்னாடி நின்னு, உடல்ல மாற்றம் தெரியுதான்னு பார்த்துட்டே இருப்பாங்க.”
“அச்சச்சோ! இது அவங்கள மட்டுமில்லாம சுத்தி இருக்க எல்லாரையும் பாதிக்குமே!’’
“சரியா சொன்ன மினி. என்கிட்டே ஒரு பேஷன்ட் வந்தாரு. தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துரும்னு அவருக்கு பயம். அதனால வெளிய போறது, பைக் ஓட்டுறதுன்னு எல்லாத்தையும் குறைச்சிட்டாரு. அவங்க மனைவி வந்து ரொம்ப வருத்தப்பட்டாங்க. ‘துறுதுறுனு எல்லா வேலைகளும் செஞ்சுட்டு இருப்பாரு. அடிக்கடி எங்களை வெளிய கூட்டிட்டுப் போற மனுஷன், இப்ப வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடக்கறாரு’ன்னு சொன்னாங்க. அவருக்கு இருந்தது Illness Anxiety Disorder. இந்தச் செயல்களை மனநல மருத்துவத்துல ‘avoidance behaviour’ னு சொல்லுவாங்க. அதாவது சாதாரண நடவடிக்கைகளையே தவிர்க்கிறது.”
“பாவம் இல்ல அவரோட மனைவி. வெளியவே கூப்பிட்டுப் போகலேன்னா எப்படி?”
“ஹ்ம்ம்... இதுல இன்னொரு எக்ஸ்ட்ரீமும் இருக்கு மினி. அதை ‘phobic companion’னு சொல்லுவோம். அதாவது, தனியாப் போக பயந்து, எல்லா இடத்துக்கும் கூட ஒருத்தரைக் கூப்பிட்டுப் போறது. தனியாப் போற இடத்துல தனக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படுறது. அதுமட்டும் இல்ல... ஒரு ஊருக்குப் போகணும்னா ‘பக்கத்துல என்ன ஹாஸ்பிடல் இருக்கு, எந்த டாக்டர பாக்கணும்’னு எல்லாமே பிளான் பண்ணுவாங்க. இவங்க முன்னெச்சரிக்கைகள் எல்லாம் ரொம்ப அதீதமா இருக்கும். இதை ‘safety behaviour’னு சொல்லுவோம்.”
“பயம் ஒருத்தரை என்னவெல்லாம் செய்ய வைக்குது இல்லையா டாக்டர்? இந்தப் பிரச்னை இருக்கவங்க, தங்களுக்கு நோய் அறிகுறி இருக்கிறதா உணருவாங்கன்னு சொன்னீங்க இல்லையா? அவங்க பொய் சொல்றாங்களா?”
“அவங்க பொய் சொல்லல மினி. உண்மையாவே அந்த அறிகுறிகளை அவங்க உணருவாங்க. ஆனா அதுக்கும் அவங்க பயமும், அந்த மனநிலையும்தான் காரணம்.”
“எப்படி டாக்டர்?”
“நீ மேகங்களைப் பார்த்திருக்கியா மினி. கொஞ்ச நேரம் கவனிச்சா, வித விதமான உருவங்களை மேகத்துல பார்க்கலாம் இல்லையா?”
“ஆமா டாக்டர். முயல், டிராகன், பறவை, ஏரோப்ளேன் இப்படி நிறைய பார்த்திருக்கேன்.”
“அதெல்லாம் மனதின் கற்பனையால் கண் பார்க்கற உருவங்கள் இல்லையா? நீ பார்க்குறது என்ன உருவமா இருந்தாலும், அது மேகம். அவ்வளவுதான். இந்த Illness Anxiety Disorder கூட அப்படித்தான். இந்த மனப்பதற்றத்தால பாதிக்கப்பட்டவங்க, எதையும் பயத்தோடவே எதிர்கொள்வாங்க. உதாரணமா, ஒரு மனுஷனோட ரத்த அழுத்தம் ஒரு நாளில் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு அளவுல இருக்கும். படிக்கட்டுல ஏறினா ஒரு மாதிரி, சாப்பிட்டதும் ஒரு மாதிரின்னு இருக்கும்.
ஆனா, Illness Anxiety Disorder இருக்கவங்க இதையெல்லாம் யோசிக்க மாட்டாங்க. வீட்டிலேயே பி.பி மெஷின் வாங்கிவெச்சு அடிக்கடி செக் பண்ணி பதற்றமாவாங்க. .”
“இந்த எல்லாத்துக்கும் இன்டர்நெட்தான் காரணமா டாக்டர்?”
“இன்டர்நெட் முக்கியமான காரணம்னு சொல்லலாம் மினி. ஆனா, அதுக்கு முன்னாடியும் கூட இந்தப் பிரச்னை இருந்தது. அப்போ திரைப்படங்களோட விளைவு காரணமா புற்றுநோய் பற்றிய பயம் அதிகம். ஆனா இப்போ சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட பயப்படுறாங்க. மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்துல ஒரு ஆய்வு நடத்தினாங்க. அதோட முடிவுகள் இதற்கு நல்ல விளக்கம். ஒரு நபர் முதல்முறை இன்டர்நெட்ல தலைவலி பத்தித் தேடுறார்னு வெச்சுக்கோங்க. அடுத்த முறை அதே நபர் பிரைன் ட்யூமர்னு தேடுறாராம். மூன்றாவது முறை பிரைன் ட்யூமர் அறிகுறிகள்னு தேடுவாராம். இன்டர்நெட் எப்படி நம் மனசுல பயத்தை விதைக்குதுன்னு இதுல இருந்தே தெரிஞ்சுக்கலாம். இதனால் அவங்க மனநிம்மதி, சந்தோஷம், நேரம், பணம்னு நிறைய இழக்குறாங்க. உடலை நினைச்சு பயந்து பயந்து மனநலப் பிரச்னைக்கு ஆளாகிடுறாங்க.”
“இது யாருக்கும் வேணும்னாலும் ஏற்படுமா டாக்டர்?”

“ஆமா மினி, இதனால யார் வேணும்னாலும் பாதிப்படையலாம். ஆனா என் அனுபவத்துல சொல்றேன். இந்தப் பிரச்னை அதிகம் முப்பதில் இருந்து 40 வயதுல இருக்கும் அதிகம் பதட்ட சுபாவமுள்ள ஆண்களையே பாதிக்குது. அதுக்குக் காரணமும் இருக்கு. பொதுவா அந்த வயது ஆண்களுக்குக் கல்யாணம் ஆகி, குழந்தை இருக்கும் இல்லையா. அவங்களைச் சார்ந்து மனைவி, குழந்தைகள் இருக்காங்க. தான் இல்லைனா தன் குடும்பத்தை யாரு பார்த்துப்பாங்க? இப்படி அவங்களுக்கு நிறைய பயம் இருக்கும். அந்த பயம் அதீதமாகும்போது, பிரச்னையாகுது.”
“இதற்குத் தீர்வுதான் என்ன டாக்டர்?”
“தினசரி நடவடிக்கைகளில் மாற்றத்தைப் பழக்கப்படுத்தணும். அதாவது ‘behavioural change.’ அதற்கு தொடர்ந்து தெரப்பி கொடுக்கணும். உடல்நிலை பற்றி கூகுளில் தேடுறதை அறவே நிறுத்தணும். இந்தப் பிரச்னைக்கான ப்ரிஸ்கிரிப்ஷனே அதான்.”
“ வாவ்! நம்ம சின்ன விஷயம்னு நினைக்குறதுக்குப் பின்னாடி எவ்வளவு விஷயங்கள் இருக்கு டாக்டர். இந்த வாரம் நீங்க சொன்ன நிறைய விஷயங்களை எனக்கு நானே பொருத்திப் பார்க்க முடிஞ்சது. நிறைய பேருக்கும் இப்படி இருந்திருக்கும்னு நினைக்குறேன். தேங்க்ஸ் டாக்டர். அடுத்த வாரம் சந்திப்போம்.”
“மை ப்ளஷர் மினி. பை பை!”
(மினி-மன உரையாடல் தொடரும்)
1.உங்களுக்கு ஏதேனும் பெரிய உடல் உபாதை இருப்பதாக நினைக்கிறீர்களா?
2. உடல்நலம் குறித்து அதிகம் கவலைப்படுகிறீர்களா?
3. ‘உங்களுக்குக் கவலைப்படும்படி ஏதுமில்லை’ என்று மருத்துவர்கள் சொன்னாலும் அதில் திருப்தியடைய மறுக்கிறீர்களா?
4. உங்களுக்கு ஏதேனும் பெரிய உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எண்ணி அடிக்கடி வருந்துகிறீர்களா?
5. பலவிதமான வலிகளால் அவதியுறுகிறீர்களா?
6. ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டால் (உதாரணமாக, தொலைக்காட்சி, செய்தித்தாள், வாட்ஸப் வழியாக) அது தனக்கும் வருமோ என்று எண்ணி வருந்துகிறீர்களா?
7. பல்வேறு உடல் உபாதை அறிகுறிகள் தென்பட்டு, அவை உங்களைக் கலக்கமுறச் செய்வதாக உணர்கிறீர்களா?
இந்தக் கேள்விகளில் மூன்றிற்கு அதிகமான முறை ‘ஆமாம்’ என்ற பதிலளிக்கிறீர்களா? உங்களுக்கு Illness anxiety Disorder இருக்கலாம். மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
உங்கள் அன்புக்குரியவர் எல்லா நேரமும் ‘உடல்நலக் கோளாறுகள்' பற்றி இணையத்தில் தேடித் தேடி படித்துக்கொண்டும், அதைப்பற்றியே நினைத்துக்கொண்டும் இருக்கிறாரா? அவருக்கு Illness Anxiety Disorder இருக்கலாம்...
தவறான அனுமானங்களுக்கானசில எடுத்துக்காட்டுகள்:
அறிகுறி - தலைவலி
தவறான அனுமானம் - மூளைக்குள் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதம் வந்துவிடுமோ?
அறிகுறி - தொண்டைக்குள் ஏதோ அடைபட்ட உணர்வு
தவறான அனுமானம் - தொண்டைக்குள் கட்டி இருக்குமோ?
அறிகுறி - வயிற்றுப்பகுதியில் வலி
தவறான அனுமானம் -சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கலாமோ?
அறிகுறி - மூட்டு வலி
தவறான அனுமானம் - ஆர்த்ரைட்டீஸ் போல இருக்குமோ?
அறிகுறி - வாய்ப்புண் (அல்சர்)
தவறான அனுமானம் - இதுவே கேன்சராக மாறி விடுமோ?
அறிகுறி - உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் கூசுவது
தவறான அனுமானம் - பக்கவாதமாக இருக்குமோ?
அறிகுறி - வேகமாக இதயம் துடிப்பது
தவறான அனுமானம் - மாரடைப்பாக இருக்குமோ?
அறிகுறி - மலச்சிக்கல், பேதி, எடை குறைவது
தவறான அனுமானம் - குடல் பகுதியில் புற்றுநோய் இருக்கலாமோ?