Published:Updated:

புதிய தொடர் - 1 - மனமே நலமா? - #LetsKeepCalm

யாமினி கண்ணப்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
யாமினி கண்ணப்பன்

மருத்துவர் யாமினி கண்ணப்பன்

“ஹலோ டாக்டர் யாமினி..!”

“ஹலோ மினி... வா வா... ஹவ் ஆர் யூ?”

“நான் நல்லாருக்கேன் டாக்டர். ஆனா நான் யார்ட்ட பேசினாலும் அப்படிச் சொல்ல மாட்டேங்கறாங்க. ‘2020 பாடா படுத்துது. வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தது மன இறுக்கமா இருக்கு, வெளியே வந்தா கொரோனாவை நினைச்சு பயமா இருக்கு. வேற வேற பிரச்னைகளில் பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு.’ இப்படித்தான் பெரும்பாலும் சொல்றாங்க. அதான் உங்கக்கிட்ட பேசிட்டுப் போக வந்தேன்.’’

புதிய தொடர் - 1 - மனமே நலமா? - #LetsKeepCalm

“ஹாப்பி டு ஹெல்ப் யூ. என்ன வேணும் சொல்லு?”

“நிறைய சந்தேகம் இருக்கு, எல்லாத்துக்கும் பதில் வேணும்.”

“அப்படியே ஆகட்டும். “

“மனநலம் அப்படின்னா என்ன டாக்டர்? பைத்தியம் பிடிச்சு செய்வதறியாம இருக்குறது மட்டும்தான் மனநலன் சார்ந்த பிரச்னையா?”

“உலகில் காய்ச்சல் வராதவன் இருக்க வாய்ப்பில்லைதானே மினி? அப்படி மனநலன் சார்ந்த பிரச்னைகளில் சிக்காத மனிதன் இருக்க முடியாது என்பதே அறிவியல். உடல்நலனுடன் நெருங்கிய தொடர்புடையது மனநலம். ரெண்டும் சரியா இருந்தாதான் ஆரோக்கியமான வாழ்வு சாத்தியம்.”

புதிய தொடர் - 1 - மனமே நலமா? - #LetsKeepCalm

“உடலும் மனமும் வேற வேறதான... நீங்க சொல்றது புரியலையே டாக்டர்?”

“ம்ம்ம்... சரி... சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் சொல்றேன். மொரிஷியஸ்ல இருந்து ஒரு பேஷன்ட். 12 வயசு அந்தப் பொண்ணுக்கு. கடந்த ஆறு மாசமா அந்தப் பொண்ணால கண்ணைத் திறக்கமுடியல. அதான் பிரச்னை. கையால இமைகளைப் பிடித்து உயர்த்திதான் பார்க்க முடியும். மொரிஷியஸ்ல தீர்வு கிடைக்காம சென்னைக்குக் கூட்டிட்டு வந்துட்டாங்க. இங்க பெரிய பெரிய ஹாஸ்பிடல்ல மருத்துவம் பார்த்தாச்சு. கண் மருத்துவர்களாலும் தீர்வு காண முடியல. அப்போதான் இது மனசு சம்பந்தப்பட்ட பிரச்னையா இருக்கலாம்னு என்கிட்டே வந்தாங்க.”

“அப்புறம்?”

“ ‘கன்வர்சன் டிஸ்ஆர்டர்’(Conversion Disorder) என்னும் மனநலன் சார்ந்த பிரச்னை அந்தப் பொண்ணுக்கு. ரொம்பவும் பிரச்னைக்குரிய குடும்பச் சூழல். அதுல அந்தச் சின்னப் பொண்ணு மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. அதனால வந்த சிக்கல் இது. கொஞ்ச நாள் சிகிச்சைக்கு அப்புறம் இப்போ உடம்பு சரியாகி அவங்க நாட்டுக்குத் திரும்பியிருக்காங்க. இப்போ புரியுதா மினி? உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. கொரோனா டைம் இது... நோய் எதிர்ப்பு சக்தி எவ்ளோ முக்கியம்னு தெரியும் நமக்கு. அதற்கும்கூட மனநலம் முக்கியம். ‘சைக்கோ நியூரோ இம்மியூனாலஜி’ அதோட பெயர்.’’

யாமினி கண்ணப்பன்
யாமினி கண்ணப்பன்

“என்ன டாக்டர் இது, முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுற மாதிரியில்ல இருக்கு? எனக்கொரு டவுட், இப்போ சமீபகாலங்களில்தான் மனநல மருத்துவத்தின் தேவை அதிகமாகியிருக்கிறதா நான் நினைக்குறேன். நீங்க என்ன சொல்றீங்க?’’

“ஒரு வகையில உண்மைதான் மினி. அதற்கு ஒரு காரணம் இருக்கு. உலகின் ஆதிமனிதன் வேட்டையாடி வாழ்ந்தவன். அப்போ அவனுடைய முதன்மை ஆபத்து வேட்டை மிருகங்கள் அல்லது இயற்கைச் சீற்றங்கள். ஆபத்து வரும்போது மனித மூளை இரண்டு விஷயங்களைத்தான் சிந்திக்கும். ஒன்று, அந்த மிருகத்தோடு சண்டையிடுவது. இரண்டு, அந்த இடத்தை விட்டு ஓடித் தப்பிப்பது. மரபணு வழியே நமக்கெல்லாம் ஊறிப்போயிருக்கும் எதிர்வினைகள் இதெல்லாம்.

ஆனால். இன்றைய மனிதனுக்கு வெறும் விலங்குகளும் இயற்கையும் மட்டுமே எதிரி இல்லையே. நவீன உலகில் நாற்திசைகளிலும் ஆபத்து நிறைஞ்சிருக்கு. அந்த ஆபத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது யோசனையும் ஆய்வும்தான். மன அழுத்தம், குழப்பம், விரக்தி, தற்கொலை எண்ணம், இப்படித் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் மனசு பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்ந்து புரிந்துகொள்ள வேண்டியது இன்று காலத்தின் கட்டாயம். அப்போதான் மனசு, உடல் இரண்டும் நலமாக ஆரோக்கியமாக இருக்க முடியும்.”

புதிய தொடர் - 1 - மனமே நலமா? - #LetsKeepCalm

“வாவ் டாக்டர். இப்படி நான் யோசிச்சதே இல்ல. ஆரோக்கியம் என்பது உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் சார்ந்தது. ஆனா ஆரோக்கியமான மனநிலைன்னா என்னங்கிற புரிதலே இதுவரை இல்லைதானே...’’

“ரொம்ப சரியா சொன்ன மினி. மனப்பிறழ்வு, மனச்சிதைவு மாதிரி அபாயகரமான மனநோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமே மன ஆரோக்கியம்னு ஒரு தவறான புரிதல் இருக்கு. கேன்சர் போன்ற உயிர்கொல்லும் நோய்கள் மட்டும்தான் உடல் நோயா என்ன, எப்பவும் தலைவலியோடு ஒருத்தர் இருந்தா அதுவும் உடல்நலக் குறைபாடுதானே? அப்படிதான், டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் எனத் தொடங்கி அதீதமாகக் கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பது வரை மனநலன் சார்ந்த பிரச்னைகள் ஆயிரம் இருக்கு.”

“சூப்பர் டாக்டர். அப்போ என் மனசு சரியா இருக்கா, என் மனநலன் ஆரோக்கியத்தோடு இருக்கான்னு எப்படிச் தெரிஞ்சுக்கறது?’’

“ ‘மனநலம் என்பது யாதெனில்’னு அறிவியல் ரீதியாக உலக சுகாதார நிறுவனம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கு மினி. அதைச் சொல்றேன், உன் மனநலன் எப்படியிருக்குன்னு நீயே எடை போட்டுப் பார்த்துக்கோ.

1. ஒருவர் தன்னுடைய கடமைகளைப் பொறுப்புடன் திறமையாகச் செய்வது.

2. சமூகத்தின் நியாயமான வரையறைகளைப் புரிந்துகொண்டு, சமூகத்தோடு இயைந்து வாழ்வது.

3. சமூக உறவுகளைச் சரியாகப் பேணிக் காப்பது.

4. தனிப்பட்ட முறையில் தனக்கு ஏற்படும் மன அழுத்தங்கள், பிரச்னைகள் ஆகியவற்றிற்குச் சரியான முறையில் தீர்வு காண முடிவது.

இவற்றையெல்லாம் சிரமமின்றிச் செய்ய முடிந்தால் மனம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறது என அர்த்தம்.’’

“இருக்கு, ஆனா இல்ல மாதிரி கொஞ்சம் கொழப்புதே டாக்டர்.”

“சரி, இன்னொரு குட்டி டெஸ்டும் தரேன் வீட்டுல போய் பொறுமையா அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லு. அப்ப புரியும். உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட சோதனை அது. ஒரு மகிழ்ச்சியான சமூகம் உருவாக மனநலன் முக்கியம்னுதான் உலக சுகாதார நிறுவனம் சொல்லுது. பக்கத்தில் இருக்கும் கட்டத்தில் அந்தக் கேள்விகள் இருக்கு. அதுக்கெல்லாம் பதிலளிச்சா உன் மனநலன் பற்றி உனக்கே தெரியும் மினி.”

“ஓகே டாக்டர். அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி: இந்த மனம் எனும் மாயாவி நம்ம உடலில் எங்க இருக்கு டாக்டர்?”

(மினி-மன உரையாடல் தொடரும்)

இந்த டெஸ்ட்டில் 2 மதிப்பெண்களுக்கு மேல்  பெற்றவர்கள், மனநலன் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவலை வேண்டாம். இந்த நிமிடம், எந்த ஒரு மனநலன் சார்ந்த பிரச்னையும் உங்களுக்கு இல்லை.
இந்த டெஸ்ட்டில் 2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள், மனநலன் மீது கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுக்க வேண்டும். அதற்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களுக்கு கவலை வேண்டாம். இந்த நிமிடம், எந்த ஒரு மனநலன் சார்ந்த பிரச்னையும் உங்களுக்கு இல்லை.

டாக்டர் யாமினி கண்ணப்பன் (MBBS, DPM, DNB) சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தவர். தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் மனநல மருத்துவராக இருக்கிறார். மனநலன் தொடர்புடைய பல ஆராய்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்தியன் கவுன்சில் ஆப் மெடிக்கல் ரிசர்ச் நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி அலுவலராகப் பணிபுரிந்திருக்கிறார். மனநல மருத்துவம் மட்டுமன்றி குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும் பல பணிகளை மேற்கொண்டுவருகிறார். 2011-ம் ஆண்டுக்கான ‘டாக்டர் சாரதா மேனன் கோல்டு மெடல்’ விருதைப் பெற்றிருக்கிறார்.