
மருத்துவர் யாமினி கண்ணப்பன்
மனம் நம்ம உடல்ல எங்க இருக்குன்னுதான மினி கேட்ட? காலங்காலமா எல்லாரும் கேக்குற கேள்விதான் இது.”
“ஆனா இன்னும் பதில் கிடைக்கலையே டாக்டர்!”
“காரணம் இருக்கு மினி. அதிசயங்களால் நிறைந்தது உலகம், இல்லையா? உலகின் ஆழமான பள்ளமோ, உயரமான சிகரமோ, உலகைத் தாண்டிய நிலவோ, அண்டமோ அனைத்தையும் அறிவியல் கொண்டு கற்றறிந்த மனிதனால் புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மம் இருக்குன்னா அதான் மனம். ‘மனதை ஆளும் சூட்சுமம் அறிந்தவன் கடவுளாகிறான், மனதை ஆள இயலாதவன் மனநோயாளி ஆகிறான்’னு ஒரு பிரபலமான வாசகம் இருக்கு. மருத்துவ அறிவியல் இப்போ நிறையவே வளர்ந்திருக்கு. மனிதனின் மனதைப் பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் அதை ஆள்வதற்கான சூட்சுமத்தை நமக்குச் சொல்லிக்கொடுத்திருக்கு. ஒண்ணு புரிஞ்சிக்கணும் மினி. மனம் அப்படிங்குறது உடற்கூறியல் செய்து விளங்கிக்கொள்ள இயலும் உறுப்பு இல்லை. எல்லோரும் நினைத்திருப்பது போல அது இதயமும் இல்லை.”

“ மனசு அப்படின்னாலே இதயத்துக்கிட்ட கை போயிடுதே டாக்டர். மனசு இதயம் இல்லைன்னா அப்போ அது எங்க இருக்கு?”
“மனம் அப்படிங்குறது மூளையின் செயல்பாடுகளால் அறியப்படுவதுதான் மினி. நம் மூளையின் நடுப்பகுதியில் உள்ள ‘limbic system’ நம் உணர்ச்சிகளுக்குக் காரணமாக இருக்கிறது. அதேபோல, மூளையின் முன்பகுதியில் உள்ள ‘prefrontal cortex’ நம் எண்ணங்களுக்குக் காரணமாக இருக்கிறது. இந்த எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பொறுத்தே ஒரு மனிதனின் செயல்பாடுகள் மாறுகின்றன. இந்த இரண்டு காரணிகளும் மூளையின் அமைப்பு மற்றும் வேதியியல் நிகழ்வுகளைச் சார்ந்து மாற்றமடையும். இதற்கு உதாரணமா ஒரு கதை இருக்கு மினி. இருபதாம் நூற்றாண்டில், மருத்துவ உலகின் உளவியல் சார்ந்த உரையாடல்களில் முக்கிய இடம் பெற்ற கதை இது.”
“ஒவ்வொரு வரியிலும் ஆச்சர்யம் சேர்க்குறீங்க டாக்டர். கதையைச் சொல்லுங்க... ஐ ஆம் வெயிட்டிங்!’’
“அமெரிக்காவின் ரயில்வேயில் ஊழியராக இருந்த பினியஸ் கேஜ் அப்படிங்குறவரோட கதை இது. 1848ஆம் ஆண்டு, ஒரு விபத்தில் பெரிய கம்பி அவர் தலைக்குள் இறங்கிடுச்சு. பெரிய மருத்து வர்கள் குழு, போராடி அறுவை சிகிச்சை மூலமா அதை நீக்குறாங்க, அவர் பிழைச்சாலும், பழைய பினியஸ் கேஜ்-ஆ அவர் இல்ல. விபத்தில் அவரது மூளையின் அமைப்பு மாறினதால அவரோட முழு குணாதிசயமும் மாறிடுச்சு. கேஜ் முற்றிலும் வேறு ஒரு மனிதராக இருந்தார். சிரிச்சுக்கிட்டு, நண்பர்களோடு கலகலப்பா பழகுற மனுஷன். எப்பவும் உம்முனு இறுக் கமானவரா மாறிட்டாரு. அதற்குப் பிறகு அவர் வாழ்ந்த பன்னிரண்டு வருஷமும், அவர் வேறு ஒரு மனிதரா கத்தான் இருந்தார். சிரிச்சுக் கிட்டே இருந்த மனுஷன் அதுக்கப்புறம் சிரிக்கவே இல்ல. இதுல இருந்து மனிதனின் மூளை அவனது குணத்தைத் தீர்மானிக்கும்னு நாம புரிஞ்சுக்கலாம் மினி. மூளையின் வேதியியல் மாற்றங்கள், ஒரு மனிதனின் எண்ணங்களிலும், உணர்ச்சிகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். மாத்திரைகள் மூலமா ஒரு மனித உடலில் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்தலாம் இல்லையா? அந்த அறிவியலின் அடிப்படையில் தான் `மனநல மருத்துவம்’னு ஒரு அறிவியல் பிரிவே இயங்குது.”

“சூப்பர் டாக்டர்... வெரி இன்டரெஸ்டிங்! ஒரு தனிமனிதனின் வாழ்க்கைல உளவியல் நலம் எவ்ளோ முக்கியம்னு புரியுது.”
“மனநலன் அப்படிங்குறது தனிப்பட்ட வாழ்க்கையை மட்டும் தீர்மானிக்குறது இல்ல மினி, சமூகத்தின் நலனையும் தீர்மானிக்கும்.”
“தனிப்பட்ட மனிதனின் மனநலனில் சமூக நலனும் அடங்குமா எப்படி?”
“சொல்றேன் கேளு... மனநலம் என்பது தனி மனிதனின் ஆரோக்கியம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், ஆரோக்கியமான சமூகம் உருவாகவும் அவசியமானதுதான் மினி. ஆரோக்கியமான சமூக மனநிலை இருந்தா குடும்ப வன்முறை முதல் சமூகக் குற்றங்கள் வரை பல நிகழ்வுகளைக் கணிசமா குறைக்க முடியும். ஏன்னா, இன்றைய சூழலில் திட்டமிட்ட குற்றங்களுக்கு (planned crimes) சமமாக உணர்ச்சிவசப்படுவதால் நிகழும் குற்றங்கள் (emotional crimes) நிகழ்கிறது இல்லையா?”

“என் மனநிலை மாறுனா எல்லாம் மாறுமா டாக்டர்?”
“இதை உனக்கு ப்ராக்டிகலா புரியவைக்குறேன் மினி. இந்த வாரம் உனக்கு குட்டி டாஸ்க் ஷீட் கொடுக்குறேன். அதுல இருக்கிற ஏழு விஷயங்களை, ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினம் செய்யணும். உன் மனநிலையும், உன்னைச் சுற்றி இருக்கிற சூழலையும் அது எவ்ளோ நேர்மறையா மாத்துதுன்னு உன்னால உணர முடியும்.”
“கண்டிப்பா தவறாம இந்த டாஸ்க்கைச் செய்றேன் டாக்டர். பட்... ஒரு சந்தேகம்... உடல்நலன்மீது நாம காட்டும் அக்கறையில் பாதியளவுகூட இந்த மாதிரி மனநலன்மீது பலர் காட்டுறதில்லை. அதற்கு காரணம் மனநலன் பற்றிய பல தவறான புரிதல்கள்தான் இல்லையா?”
“கரெக்ட். ‘படிக்கவே முடியலம்மா’ எனச் சொல்லும் குழந்தையிடம், ‘எப்பப்பாரு டிவி பார்த்தா அப்படித்தான்’ என அதட்டி புத்தகங்களோடு கட்டிப்போடும் பெற்றோர்கள் பலர் உண்டு. அந்தக் குழந்தைக்குப் படிக்க முடியாமல் இருப்பதற்கு வேறு உளவியல் காரணங்கள் இருக்கலாம் அல்லவா? ‘கவனக்குறைவு’ இருப்பதற்கு ஒரு குழந்தையையே முழுப் பொறுப்பாக்கி, ‘எண்ணங்களைக் கட்டுப் படுத்துன்னு’ அவங்களுக்குப் பாடம் எடுக்கிறோம். ஆனால், அது அக்குழந்தையின் மன ஆரோக்கியத்திற்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்துது என்பதே கசப்பான உண்மை. எல்லா உளவியல் சிக்கல்களுக்கும் நாமே பொறுப்பெடுத்துக் கொள்ள முடியாது என்பதே இங்கு நாம் கற்கவேண்டிய பாலபாடம்.
தலைவலிக்கும், காய்ச்ச லுக்கும் மருத்துவரை அணுக முடியுற இடத்தில், அதே தைரியத்தோடு நம் உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வு காண மருத்துவரை அணுக முடியுறதில்ல. மனநல சிக்கல் என்றாலே பைத்தியம் எனப் பட்டம் கட்டுறதுதான் நம் சமூகத்தின் சாபம்.”
“வருத்தமாத்தான் இருக்கு டாக்டர். இந்தப் பாழாப்போன மனச புரிஞ்சுக்கிறதுலதான் எத்தனை குழப்பங்கள். பட், தேங்க்யூ வெரி மச். நீங்க சொன்னதுல ஒண்ணு நல்லாப் புரிஞ்சது. வாசிக்கத் தெரிஞ்சாதான் வீணை இசை வழங்கும். அந்தமாதிரிதான் மனிதனின் மனம் எனும் மூளை. அது ஒரு அழகிய கருவி. இசை கேட்கணும்னா நாம் அதைத் திறம்பட மீட்டுவதற்குக் கத்துக்கணும், இல்லையா? இனி நிறைய கத்துக்கணும் டாக்டர்... நிறைய பேசுவோம். அடுத்த வாரம் உங்களை சந்திக்கிறேன். எந்தப் பக்கம் போனாலும், யாரைப் பாத்தாலும் ‘டிப்ரஷன்’ அப்டிங்கிறாங்க, அதைப் பற்றி நிறைய கேள்விகளோட வரேன். பை டாக்டர்.”
“ஷ்யூர்... பை பை மினி.”
(மினி-மன உரையாடல் தொடரும்)
மினி டாஸ்க்




1) எது நன்றாக நடந்தது?
தினமும், நேரம் ஒதுக்கி அன்று நடந்தவற்றுள் சிறியதோ, பெரியதோ… மூன்று நல்ல விஷயங்களைப் பட்டியிலிடுங்கள். மனித இயல்பே தீயவற்றை உற்று நோக்குவதுதான் என்பதால் இந்தச் செயல் அந்த இயல்பைத் தாண்டிவர உதவும்.
2) செய்நன்றி மறவாதீர்!
நமக்கு நல்லது செய்தவர்களுக்கு நன்றியுடன் இருப்பதும், அதை நேரில் சென்று அவர்களுக்குச் சொல்வதும் முக்கியம். நேரில் இல்லாவிட்டால் ஒரு ஈமெயிலாவது அவர்களுக்கு எழுதுங்கள். அதில் விரிவாக அவர் என்னவெல்லாம் செய்தார், அல்லது, அவர் செய்த உதவியால் உங்கள் வாழ்வில் என்னவெல்லாம் நல்லது நடந்தது என்பதைக் குறிப்பிடுங்கள்.
3) கற்பனை செய்யுங்கள்!
உங்கள் இலக்குகளை நீங்கள் அடைந்த பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென நீங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் இலக்கை நீங்கள் அடைய இந்தக் கற்பனை வாழ்க்கையே உந்து சக்தியாக மாறக்கூடும்.
4) பாசிட்டிவ் அனுபவங்கள்!
உங்கள் அன்றாட வேலைகளைச் செய்துகொண்டே சுற்றி இருக்கும் காட்சிகள், வாசனை போன்றவற்றில் கவனம் செலுத்திப் பாருங்கள். நம் வாழ்வில் இருக்கும் சின்னச் சின்ன மகிழ்ச்சிகளை நம் மனம் கொண்டாட இது ஒரு வாய்ப்பாக அமையலாம்.
5) உங்கள் நேரத்தைப் பரிசளியுங்கள்!
நேரம்தான் பொன் என்பார்கள். ஒவ்வொரு வாரமும் மூன்று பேருக்கு உங்கள் நேரத்தைப் பரிசளியுங்கள். தனிமையில் இருப்பவர்களுடன் உணவருந்துவதோ, உதவி செய்வதோ, அல்லது, சும்மாவே அவர்களுடன் இருப்பதோ என எப்படியும் இருக்கலாம்.
6) கனிவாக இருங்கள்!
முன் பின் தெரியாதவர்களிடம் கனிவாக இருங்கள். ஒருவருக்காகக் கதவைத் திறந்துவிடுதல், ஒருவரைப் பார்த்துப் புன்னகைத்தல்போல சின்னச் சின்ன விஷயங்களாகக்கூட இருக்கலாம்.
7) இவை இல்லாமல்போனால்?
எந்த விஷயத்துக்காக ஒருவர் நன்றியுடன் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களோ அப்படி மூன்று விஷயங்களை வாரம் ஒரு முறை எழுதிப் பாருங்கள். அவை எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரிதான். அவை நம் வாழ்வில் இல்லாமல்போனால் என்னவாகுமென யோசித்துப் பாருங்கள்.“நாங்க எவ்ளோ கஷ்டத்தைப் பாத்துட்டோம்… எங்க கிட்ட பேசு…”“ஏன்... உனக்கு பைத்தியமா?” “மனசுதான் எல்லாத்துக்கும் காரணம், நீ நினைச்சா அதை மாத்தலாம்.”“அப்புறம் நீ பைத்தியம்னு எல்லாரும் முடிவு கட்டிடுவாங்க… பாத்துக்கோ.”“ காலைல எழுந்து தியானம் பண்ணு போதும்.”