சேலம் மாநகர் மாமங்கம் அருகே உள்ள மலைகளை குடைந்து வெள்ளைக் கற்கள் வெட்டிக் கடத்தப்படுவது தொடர்பாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனையடுத்து கனிம வளத்துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டு கடத்தல் லாரிகளையும் கடத்தலுக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளைக் கற்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மீண்டும் வெள்ளைக் கற்கள் வெட்டிக் கடத்துவதற்காக கடத்தல் கும்பல் அங்கு சென்றிருக்கிறது. அப்போது வெள்ளைக் கற்கள் கடத்துவதில் இரு கும்பல்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. சண்டை போடும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று பார்த்திருக்கின்றனர்.

அப்போது கடத்தல் கும்பல்காரர்கள் தட்டிக்கேட்ட இளைஞர்களை கற்களால் சரமாரியாக தாக்கியதோடு, அவர்களின் இருசக்கர வாகனங்களையும் கடத்தல் லாரியைக் கொண்டு சேதப்படுத்தி, தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர்.
பின்னர் படுகாயமடைந்த அந்த இளைஞர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் மூலமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூரமங்கலம் போலீஸார் அந்தப் பகுதியில் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞர்கள் பிரசாத், ஸ்ரீனிவாசன் கார்த்திக், பூபதி ஆகியோர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் போலீசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட மாமங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைக் கற்கள் கொள்ளை பெருமளவு நடைபெற்று வருகிறது. நானும் சட்டமன்ற உறுப்பினராகிய நாள் முதல் இது தொடர்பாக கடுமையாக மனு மேல் மனு அளித்து வருகிறேன். ஆனால் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.

சேலத்தில் மேக்னசைட் ஆலைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்த ஆலைகள் பெரும்பாலும் விதிகளை முறையாகப் பின்பற்றுவதில்லை. வெள்ளைக் கற்களை முறையாக வாங்காமல், இரவோடு இரவாக லாரி வைத்து மலைகளை குடைந்து வெள்ளைக் கற்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மாவட்ட காவல்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பல முறை புகாரளித்திருக்கிறேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் நேற்றைய தினம் இரவு வெள்ளைக் கற்கள் எடுப்பதைத் தட்டிக்கேட்கச் சென்ற பொதுமக்களை தாக்கி, அவர்களுடைய இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து எரித்திருக்கின்றனர் மர்ம ஆசாமிகள். இந்தக் கும்பல் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதில் ஒரு மாஃபியா போன்று செயல்பட்டு வருகிறது" என்றார்.