தமிழகத்தில், பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்கள் பலர் எதிர்கொள்ளும் பெரிய சிக்கல் தேர்வு எழுதும் மையங்களின் தூரம்தான். தாங்கள் இருக்கும் வசிப்பிடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் இருக்கும்போது, உரிய நேரத்திற்கு அந்த மையத்திற்கு செல்வத்திலும், பயணப் பதற்றம் இல்லாமல் தேர்வு எழுதுவதிலும் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்வதுண்டு.

அந்தப் பதற்றம் மற்றும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், தொலைதூர இடங்களிலும் தேர்வு மையங்களை அமைக்கவும், தேர்வு மையங்களுக்கான பயண தூரத்தை குறைக்கவும், அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் மாணவர்கள், இனி தேர்வு மையங்களுக்கு அலைந்து திரிய வேண்டியதில்லை. 7 கி. மீ தொலைவிற்குள்ளாகவே அவர்களுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் தேர்வு மையங்களின் தூரம் 10 கிலோ மீட்டராக இருந்தது. கூடுதலாக 500 தேர்வு மையங்கள் கடந்த மூன்று வருடங்களில் அதிகரிக்கப்பட்டது. தற்போது மாணவர்களுக்காக 7 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்க உள்ளன. 8.8 லட்சம் மாணவர்களுக்கு, சுமார் 3,200 தேர்வு மையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வுகளை, சுமார் 4,000 தேர்வு மையங்களில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.