“பொதுவுடைமையை தனியுடைமை ஆக்கிவிட்டார்!” - ஆக்கிரமிப்பு புகாரில் கம்யூனிஸ்ட் துணை மேயர்!

2018-ல் வீடு கட்டினேன். அப்போது நான் கவுன்சிலரோ, துணை மேயரோ கிடையாது. என் வீடு முட்டுச்சந்தில் கடைசியாக இருக்கிறது. எங்களுக்கான தனிப்பாதையை எங்கள் இடத்துக்குள் உருவாக்கிக்கொண்டோம்.
ஆக்கிரமிப்புக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயரே, ‘பொதுப்பாதையை ஆக்கிரமித்துவிட்டார்’ என்ற புகார் மதுரையில் கிளம்பியிருக்கிறது.
கே.பி.ஜானகியம்மாள், பி.ராமமூர்த்தி, சங்கரய்யா, பி.மோகன், என்.நன்மாறன் போன்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களாலும், லீலாவதியின் உயிர்த் தியாகத்தாலும் மதுரை மக்கள் மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தனி செல்வாக்கு உண்டு. அதனால்தான் மாநகராட்சிக்கு நான்கு கவுன்சிலர்களையும், மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு.வெங்கடேசனையும் தேர்ந்தெடுத்தனர் மதுரை மாநகர மக்கள். அந்த அடிப்படையிலேயே மதுரை மாநகராட்சியில் துணை மேயர் பதவியும் தோழர்களுக்குக் கிடைத்தது.

இந்த நிலையில்தான் மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மீது, ஆக்கிரமிப்பு புகார் எழுப்பியிருக்கிறார் பா.ஜ.க பட்டியல் அணி மாநிலச் செயலாளரான சிவாஜி. அவரிடம் பேசினோம். “மேடைகளில் பொதுவுடைமைக்காக குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்காரரான நாகராஜன், பொதுப்பாதையைத் தனியுடைமை ஆக்கிவிட்டார். அதாவது, மதுரை ஜெய்ஹிந்த்புரம் எம்.ஜி.ஆர் கிழக்கு தெருவில் சர்வே எண் 69/3-ல், 2,176 சதுரஅடி நிலத்தை கிரையம் வாங்கியிருக்கிறார் துணை மேயர் நாகராஜன். இந்த இடத்தை நான்கு பிளாட்டுகளாகப் பிரித்து, மூன்றை விற்பனை செய்துவிட்டு, ஒன்றை மட்டும் தன் மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்திருக்கிறார். அதில், பொதுப்பாதையை ஆக்கிரமித்து மூன்று மாடி வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார். இதனால், 20 அடிப் பாதை, 7 அடியாகச் சுருங்கிவிட்டது.
இது குறித்து கலெக்டர், கார்ப்பரேஷன் கமிஷனரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ‘தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்துக்கு’ (Tamilnadu Local Bodies Ombudsman) மேல்முறையீடு செய்தேன். இது குறித்து விசாரித்த நடுவம், ‘மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ள இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஆக்கிரமிப்பின் மீது நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் துணைபோயுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மீது மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கடந்த நவம்பர் 2-ம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன் பிறகும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே பொதுப்பாதையைத் தங்கள் இடம்போல் காட்டி, சீர்திருத்தப் பத்திரம் பதிவுசெய்ய, துணை மேயர் முயல்வது தெரியவந்தது. எனவே, மாவட்டப் பதிவாளருக்கும் புகார் அனுப்பியிருக்கிறேன்’’ என்றார்.

83-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் எஸ்.எம்.டி.ரவி, ‘‘ஏற்கெனவே வீரகாளியம்மன் தெருவில் நத்தம் புறம்போக்கு நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி 2012-ல் நாகராஜன்தான் போராட்டம் நடத்தினார். பின்னர் 2014-ல் அவரே அந்த இடத்தைத் தன் பெயரில் பட்டா போட்டுக்கொண்டார். இது குறித்தும் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கியிருப்பது, அவர் தொடர்ந்து இதே வேலையாக இருப்பதைக் காட்டுகிறது’’ என்றார்.
புகார்கள் குறித்து துணை மேயர் நாகராஜனிடம் விளக்கம் கேட்டுப் பேசினோம். ‘‘இவை எல்லாமே அவதூறுகள். எதுவுமே உண்மை இல்லை. பா.ஜ.க பட்டியல் அணி மாநிலச் செயலாளர் சிவாஜி, தொடர்ந்து என்மீது அவதூறு பரப்பிவருகிறார். எனவே, அவர்மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து என்னிடம் நடுவம் சார்பாகவோ, மாநகராட்சி சார்பாகவோ எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. ஆனாலும்கூட என்னுடைய விளக்கத்தைக் கடந்த அக்டோபர் 5-ம் தேதியே மாநகராட்சி அதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டேன்.

2018-ல் வீடு கட்டினேன். அப்போது நான் கவுன்சிலரோ, துணை மேயரோ கிடையாது. என் வீடு முட்டுச்சந்தில் கடைசியாக இருக்கிறது. எங்களுக்கான தனிப்பாதையை எங்கள் இடத்துக்குள் உருவாக்கிக்கொண்டோம். மற்றபடி எந்தப் பாதையையும் ஆக்கிரமிக்கவில்லை. பதிவுத்துறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நான்கு மால்-ஐ மட்டும் வைத்து எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது. வருவாய்த்துறை, மாநகராட்சி ஆவணங்கள் மூலம்தான் சரிபார்க்க வேண்டும். என்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்கின்றன. எனவே, இந்தப் புகாரைச் சட்டரீதியாகச் சந்திப்பேன்’’ என்றார்.
பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?!