சினிமா
கட்டுரைகள்
ஆனந்த விகடன் பொக்கிஷம்
Published:Updated:

பாதிப்பு குறைவு என்பதால் பயம் போகலாமா?

நிவர் புயல்
பிரீமியம் ஸ்டோரி
News
நிவர் புயல்

புயலைவிட, அந்த நேரத்தில் பெய்த மழையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

‘நிவர்னு பேர் வெச்சதுக்குப் பதிலா கேதார் ஜாதவ்னு வெச்சிருக்கலாம். அடிக்காமலேயே போயிடும்’ என மீம் போட்டவர்கள் தீர்க்கதரிசிகள். பயந்த அளவுக்கு பாதிப்புகள் இல்லை. நிம்மதி! கடந்த பத்தாண்டுகளில் தானே, நிலம், வர்தா, கஜா, ஒக்கி என அடுத்தடுத்துப் புயல்களை எதிர்கொண்ட மக்கள் ரொம்பவே பயந்துபோனார்கள். ஆனால், அதுவே ஒருவித எச்சரிக்கை மனநிலையை மக்களுக்குக் கொடுத்து, பாதுகாப்பாக இருக்க வைத்தது. அரசும் முன்பு போல மெத்தனமாக இல்லை.

சென்னை மக்களுக்கு 2015 பெருவெள்ள நினைவுகள் நிழலாடின. செம்பரம்பாக்கம் ஏரியை நினைத்து அவர்கள் தூக்கம் தொலைத்தனர். வடமாவட்ட மக்களுக்கு ‘தானே’ நினைவு வந்தது. கஜாவின் பாதிப்புகளிலிருந்து மீளாத டெல்டா மக்கள் மிகுந்த முன்னேற்பாடுகளைச் செய்தனர்.

பாதிப்பு குறைவு என்பதால் பயம் போகலாமா?

நிவர் அதி தீவிர புயலாகிக் கரையைக் கடந்த நவம்பர் 25-ம் தேதி... கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டுமொத்தமாக மூடிவிட்டது காவல்துறை. காற்றின் சீற்றமும் மழையின் வேகமும் அதிகரித்தபடி இருந்த அந்த இரவில் புதுச்சேரியிலிருந்து மரக்காணம் நோக்கிப் பயணித்தோம். அங்குதான் புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சாலையே தெரியாதபடி மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது. மின்தடையால் கும்மிருட்டு. ஆள் நடமாட்டமும் இல்லை. அரசு மற்றும் மீடியா வாகனங்கள் தவிர வேறு வாகனங்களும் இல்லை.

இரவு 10.30 மணிக்கு புயலின் விளிம்புப் பகுதி கரையைத் தொட்டபோது மழை அதிகரித்தது. புயலின் மையப் பகுதி கரையைக் கடந்தபோது காற்றுடன் கூடிய மழை தொடங்கியது. நள்ளிரவு 2.30 மணிக்கு புயல் கரையைக் கடந்ததும் வானம் பளிச்சென்று இருந்தது. புயல் கடந்த பிரதேசத்தில் உடனடியாகவே பயணம் செய்ய முடிகிற அளவுக்கு பாதிப்புகள் குறைவாகவே இருந்தன.

புயலைவிட, அந்த நேரத்தில் பெய்த மழையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ‘புயல் வேகமாகக் கடந்து சென்றதும், புயல் கடந்த பகுதியில் பெரிய அளவில் மரங்களோ கட்டமைப்புகளோ இல்லாததும், ஒரே நேரத்தில் அதிக மழை பெய்யாமல் மூன்று நாள்களில் பெய்ததுமே பாதிப்புகளைக் குறைத்தன’ என்கிறார்கள்.

பாதிப்பு குறைவு என்பதால் பயம் போகலாமா?

புயல் கடந்தபின்பு பல சர்ச்சைகள். புயல் கரையைத் தொடும் இடம் பற்றி வெவ்வேறுவிதமான கணிப்புகள் வந்ததும், புயலின் வீரியம் குறித்து சரியான தகவல்கள் தராததும் மக்களைப் பெரிதும் குழப்பின. ‘இதனால் எதிர்காலத்தில் புயல்களைப் பற்றிய பயம் இல்லாமல் போய்விடுமோ’ என்ற கவலையும் எழுந்திருக்கிறது.

வானிலையைத் தெளிவாக அறிந்துகொள்ள டாப்ளர் வெதர் ரேடார்களை இப்போது பயன்படுத்துகிறோம். இந்தியக் கடற்கரைப் பரப்பை 27 ரேடார்கள் கண்காணிக்கின்றன. புயல்களின் அளவையும் வேகத்தையும் அறிய இவையே உதவுகின்றன. இதுதவிர, கடல் தட்பவெப்பம் குறித்து ஜப்பான், அமெரிக்கா போன்ற பல நாடுகளும் நமக்குத் தகவல் பகிர்கின்றன. இவற்றையும் வைத்தே கணிப்புகள் செய்யப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தைத் தாண்டி தனி மனிதர்கள் பலரும் வானிலை முன்னறிவிப்புகள் தருகிறார்கள். ஒரே புயலைக் கணிப்பதிலேயே இவர்களுக்கு இடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. ஏன் இந்த முரண்பாடுகள்?

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணனிடம் பேசினேன். ‘`இந்தியாவில் வானிலையைக் கண்காணிக்க ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மென்பொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றில் பல தகவல்களைச் செலுத்துவதன் மூலம் பல முடிவுகள் நமக்குக் கிடைக்கின்றன. கூடுதலாக செயற்கைக்கோள்கள் மற்றும் ரேடார் அடிப்படையில் வானிலை கண்காணிக்கப்படுகிறது. மற்ற நாடுகளிலிருந்தும் தகவல்கள் தொடர்ந்து பகிரப்படுகின்றன. இவற்றில் பல விஷயங்கள் மாறுபடும். அவற்றில் கருத்தொற்றுமை அடிப்படையில் வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இந்திய வானிலை ஆய்வானது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது எந்த விதத்திலும் குறைவானது இல்லை. இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வானிலையைக் கணிப்பது ரொம்பவே சவாலானது. அதை இந்தியா சிறப்பாகவே செய்துவருகிறது’’ என்கிறார் அவர்.

புயலின் வேகம் குறைந்தது தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் பேசினேன். ‘`ஒரு புயல் நகர்வதும், திடீரென நிற்பதும், திசைமாறுவதும் இயல்பான விஷயங்கள்தான். அவற்றைக் கணிக்கவே முடியாது. புயல் ஓர் இடத்தில் நிற்கும்போதுதான் அதன் சக்தி அதிகமாகும். புயல்கள் உருவான பின்னர் நிலம், நீர், காற்றுக்கு இடையே சக்திப் பரிமாற்றம் நடந்துகொண்டே இருக்கும். அதனால் பல மாற்றங்கள் நிகழும். அவையெல்லாம் ஒரு சிக்கலான அமைப்பு. பாதிப்புகள் அதிகம் இருந்தால்தான் புயல் என்பது இல்லை. ஒவ்வொரு புயலும் ஏதாவது ஒரு விஷயத்தை நமக்குச் சொல்லிவிட்டுச் செல்லும்’’ என்றார் அவர்.

வெதர்மேன் பிரதீப் ஜானிடம் பேசினேன். ‘`நிவர் கடந்தபோது காற்றின் வேகம் குறைவாக இருந்ததாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள். நிவர் புயலைப் போன்று சமீப ஆண்டுகளில் ஜல், நிலம், நாடா போன்ற புயல்கள் பெரிய அளவிலான பாதிப்புகளைத் தராமல் கடந்துள்ளன. நிவர் கடந்தபோது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று அடித்திருக்கிறது. அது சாதாரண விஷயம் அல்ல. சமீபத்திய புயல்களில் நல்ல மழையை இந்த நிவர் தந்து சென்றிருக்கிறது. உயிரிழப்புகள் குறைவாக இருப்பதால் மட்டும் புயலின் தாக்கம் குறைவாக இருந்தது என்று கூறமுடியாது’’ என்றார் அவர்.

‘பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால், இனி வரக்கூடிய காலகட்டங்களில் புயல்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்பதே வானிலை அறிவியல் குறித்து அறிந்தவர்களின் கருத்து.