வேலை செய்யாத லிஃப்ட்:
முதலில் சிந்தாதிரிப்பேட்டை மின்சார ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கினோம். அங்கிருந்தே நமக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 90-களில் தமிழ் சினிமாவில் 'க்ளைமாக்ஸ்' சண்டைக் காட்சிகள் எடுக்கப்படும் பாழடைந்த கட்டடம்போல் இருந்தது, அந்த ரயில் நிலையம். பின்புறமும், பக்கவாட்டுப் பகுதியிலும் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.
கண்ணாடிகள் உடைந்து தொங்கிக்கொண்டிருந்தன. பிறகு உள்ளே சென்றபோது லிஃப்ட் வேலை செய்யவில்லை. கழிவறைகள் மூடப்பட்டிருந்தன. இந்தத் தகவல்களைத் திரட்டிக்கொண்டு பிளாட்பாரத்துக்குச் சென்றபோது மணி 5:15 ஆனது. அப்போது கடற்கரையிலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில் வந்தது. அதில் நாம் ஏறினோம்...

மிரட்டும் இருட்டு:
அந்த ரயில் அடுத்ததாக திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் நின்றது. அங்கு இறங்கிய நமக்கு நிலைமை இன்னும் மோசமாக இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த கழிப்பிடங்கள் மூடப்பட்டு, பூட்டுப்போடப்பட்டிருந்தன. தரைத்தளம் மின் விளக்குகள் எரியாமல் முழுவதும் இருட்டாகக் காட்சியளித்தது. இங்கும் லிஃப்ட் வேலை செய்யவில்லை. ரயில் நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் பலர் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார்கள். இதேபோல் சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்கள் பலவற்றில் நிலைமை மோசமாக இருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமை தீர்வகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, "சென்னையில் இருக்கும் பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன. தற்போது மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் தரத்துக்கு கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டுவருகிறது. மெட்ரோ ரயில் தரத்துக்கு வந்துவிட்டால் பயனாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பாதுகாப்பு இல்லை!
மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களை மிகவும் நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண்கள் பாதுகாப்பாகப் பயணிக்க முடிகிறது. பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்களின் பாதுகாவலர்கள் இல்லை. தனியாகச் செல்வோருக்கு நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்ற நம்பிக்கை இல்லை. பராமரிப்புப் பணிகளைச் சுத்தமாக மேற்கொள்வது கிடையாது.
பல இடங்களில் லிஃப்ட், நகரும் படிக்கட்டு வேலை செய்வது கிடையாது. கீழ்ப்பகுதியில் மிகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. தனியாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போலீஸ் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம் உள்ளிட்ட ஸ்டேஷன்கள் தனியாக இருக்கின்றன.

விரைந்து சரிசெய்யப்படும்!
இதனால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதுபோல் உணர முடிவதில்லை. ரயில்வே ஸ்டேஷன்களில் காலியாக இருக்கும் இடங்களை உபயோகமானதாக மாற்றத் தெரியவில்லை. வணிக வளாகங்கள் அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபாடு காட்டவில்லை. அதேபோல் வசதிகள் இருந்தால்தான் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். பயணிகள் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும். இதைச் செய்வதற்கு தென்னக ரயில்வேயால் முடியுமா என்று தெரியவில்லை. மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இதைச் சிறப்பாகச் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கிறது" என்றார்.
இது குறித்து நம்மிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை, "அனைத்து ரயில் நிலையங்களிலும் இதுபோல் பிரச்னை இருக்காது. ஒருசில இடங்களில் மட்டும் இருக்கிறது. அதை விரைந்து சரிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும். மேலும், சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்கள்போல் மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அரசின் பரிசீலனையில் இருப்பதால், இது குறித்து விரிவாகப் பேச முடியாது" என்றார்.

பயணிகளின் எண்ணிக்கை சரிவு:
இது குறித்து நம்மிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் சித்திக், "மின்சார ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணியை சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) செய்துவருகிறது. இது குறித்து ஆலோசனை நடந்துவருகிறது. நாங்கள் இயக்குவதற்குத் தயாராக இருக்கிறோம். கூடுதல் விவரங்களை கும்டாவிடம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.
பின்னர் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்தின் சிறப்பு அதிகாரி ஜெயக்குமாரைத் தொடர்புகொண்டோம். "பறக்கும் ரயில்வே ஸ்டேஷன்களில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எனவே, இதை மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (கும்டா) தலையிட்டு ஆலோசனை நடத்தியது.

திட்ட அறிக்கை தயாரிப்பு:
இதன்படி இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த முடிவுசெய்திருக்கிறோம். ஸ்டேஜ் 1-ல் ரயில் தண்டவாளங்கள், ரயில்களை இயக்குதல், சிக்னல் இயக்கம் போன்றவற்றை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். ஸ்டேஜ் 2-ல் ரயில்வே ஸ்டேஷன்களை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) செயல்படுத்தும்.
இதில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எவ்வளவு இடம் காலியாக இருக்கிறது. அதில் என்னென்ன வசதிகளைக் கொண்டுவரலாம் என்றும், ஸ்டேஷன்களில் அறிவிப்புப் பலகை உள்ளிட்ட இதர வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துவருகிறோம். முன்னதாக ஸ்டேஜ் 1-க்கான திட்ட அறிக்கையை அரசுக்கு அனுப்பிவைத்திருக்கிறோம்.

புதிய ரயில் இன்ஜின்!
இதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் பணிகள் விரைவில் தொடங்கும். இது தவிர ஒவ்வொரு ஸ்டேஷனின் அருகிலும் 500 மீ தூரத்துக்குத் தரமான சாலைகள், தெருவிளக்கு வசதி போன்றவற்றையும் கொண்டுவர முடிவு செய்திருக்கிறோம். இது, சென்னை மாநகராட்சியின் உதவியுடன் மேற்கொள்ளப்படும்.
ஸ்டேஜ்-1 மற்றும் 2-க்கான பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு பறக்கும் ரயில்களை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் இயக்கும். மேலும் இதற்கு எவ்வளவு தொகை செலவிட வேண்டும், அனைத்துப் பெட்டிகளையும் ஏ.சி-யாக மாற்றம் செய்தல், புதிய ரயில் இன்ஜின் பயன்படுத்துதல் போன்றவற்றுக்குச் செய்யவேண்டியவை குறித்து விரைவில் ஆய்வுசெய்து அறிக்கை தயாரிக்கவிருக்கிறோம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து திட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 18-லிருந்து 24 மாதங்கள் ஆகிவிடும்" என்றார்.