அலசல்
சமூகம்
Published:Updated:

புத்தகங்கள், ஆசிரியர்கள் இல்லை... சீருடைகளும் வழங்கப்படவில்லை...

மாணவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவர்கள்

அரசுப் பள்ளிகளை சிதைக்கிறதா புதுச்சேரி அரசு?

புதுச்சேரியில் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசுப் பள்ளிகளையும், அதில் படிக்கும் மாணவர்களையும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி அரசு திட்டமிட்டு ஒதுக்குவதாகப் புகார் எழுந்திருக்கிறது!

புதுச்சேரி, காரைக்காலில் மழலையர் பள்ளி தொடங்கி மேல்நிலைப்பள்ளி வரை மொத்தம் 642 அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றுக்கு நிகரான எண்ணிக்கையில் அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளும், நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளும் இருந்தாலும், இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தரமான மதிய உணவு போன்ற காரணங்களால் கணிசமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்துவருகின்றனர். கொரோனாவுக்குப் பிறகு மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது.

புத்தகங்கள், ஆசிரியர்கள் இல்லை... சீருடைகளும் வழங்கப்படவில்லை...

அதேசமயம் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த பெரும்பாலான சலுகைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சீருடைகள் வழங்கப்படாததால் நைந்து, கிழிந்துபோன சீருடைகளுடன் பள்ளிக்கு வருகிறார்கள் மாணவர்கள். எல்.கே.ஜி., யூ.கே.ஜி குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்றான ‘ஆக்டிவிட்டி’ புத்தகம்கூட இன்னும் வழங்கப்படவில்லை. “சீருடைகளையும் புத்தகங்களையும் எப்போது வழங்குவீர்கள்?” என்று அன்றாடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால், கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றனர் ஆசிரியர்கள்.

இது ஒருபுறமிருக்க, மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், காலையில் நகர்ப்புற பள்ளியில் பாடமெடுக்கும் ஒரு ஆசிரியர், அதன் பிறகு சுமார் 20 கிலோமீட்டர் பயணித்து கிராமப்புறத்தில் இருக்கும் மற்றொரு பள்ளியில் கற்பிக்கிறார். அதேபோல அரசுக்கு பதில், ‘அட்சய பாத்திரா’ என்ற தனியார் நிறுவனம் சத்துணவு வழங்குவதால், அதிலும் பல்வேறு புகார்கள் எழுந்திருக்கின்றன.

நாராயணசாமி
நாராயணசாமி

இந்தப் பிரச்னை பற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் பேசினோம். “தேர்தல் பிரசாரத்துக்கு வந்த மோடி, `புதுச்சேரியில் கல்வியைத் தரமாக்குவோம்’ என்றார். கல்வியாண்டே முடியப்போகிறது. ஆனால் இன்றுவரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடை என எதையும் வழங்கவில்லை. புத்தகங்களே இல்லாமல் மாணவர்கள் அரையாண்டுப் பரீட்சை வரை எழுதியிருக்கிறார்கள் என்றால், அவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். பள்ளிக்கூடம் திறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதுவும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்திய பிறகுதான் இலவசப் பேருந்து சலுகையும், முட்டையும் வழங்கினார்கள். ஆசிரியர் பற்றாக்குறையால் ஒரே ஆசிரியர் நான்கைந்து பாடங்களை எடுக்கிறார். மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் வழங்கவில்லை. மொத்தத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சியில் கல்வித்துறை முழுவதுமாகச் சீரழிந்துவிட்டது... சீரழித்துவிட்டார்கள்” என்றார் கோபமாக.

சிவா, நமச்சிவாயம்
சிவா, நமச்சிவாயம்

எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க எம்.எல்.ஏ-வுமான சிவா, “ `காமராஜர் ஆட்சி நடத்துகிறோம்’ என்று கூறிவரும் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசு, மாணவர்களுக்குத் தரமற்ற, மோசமான உணவை வழங்கிவருகிறது. இது குறித்து கட்சி பேதமின்றி அனைத்து எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்தில் புகார் தெரிவித்தும் பலனில்லை. ஏதோ ஒரு தனியார் நிறுவனம், ‘வெங்காயம், பூண்டு இல்லாமல்தான் நாங்கள் சமைப்போம்’ என்றால், அதை அப்படியே அரசு ஏற்றுக்கொள்வதா... இந்த உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால், மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எப்படிக் கிடைக்கும்... மாணவர்களின் நலனைச் சிந்திக்காமல் அந்த நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியவர்கள், தங்கள் வீட்டில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சாப்பிடுவார்களா... 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இன்னும் முழுமையாகப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. முக்கியமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சீருடை கொடுக்கவில்லை. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் போதிலும், புதிய கட்டடங்களுக்கான நிதி ஒதுக்கப்படாததால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கிறார்கள். மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்யாத இவர்கள், புதிய கல்விக் கொள்கையை அப்படியே அமல்படுத்தி குலக் கல்வியைத் திணிக்கத் துடிக்கிறார்கள். ஏழை மாணவர்கள் தரமான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தாத இந்த அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் விளக்கம் கேட்டோம். “சீருடைக்கு டெண்டர் முடிந்து, நிதித்துறையும் ஒப்புதல் அளித்துவிட்டது. தற்போது சீருடை தரப் பரிசோதனை கட்டத்தில் இருக்கிறது. விரைவில் வழங்கிவிடுவோம். ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். எங்கள் பிரதமர் மோடி அவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். புத்தகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால், தற்போது அனைவருக்கும் வழங்கி விட்டோம். `உணவு தரமில்லை’ என்ற புகார் எனக்கும் வந்தது. நானே நேரடியாக ஆய்வுசெய்து சரிசெய்யும்படி உத்தரவிட்டிருக்கிறேன். பூண்டு, வெங்காயம் நெகட்டிவ் சக்தியையும், சிந்தனையையும் கொடுப்பவை. அதனால்தான் சாமியார்கள் அதை உண்பதில்லை. அதையெல்லாம்விட இந்த உணவு முறைக்கும், இந்த நிறுவனத்துக்கும் ஒப்புதல் அளித்ததே கடந்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில்தான்” என்றார்.

பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள் என்ற குறுகிய பார்வையைக் கைவிட்டு, எதிர்கால புதுச்சேரிக்கான முதலீடு என்ற அடிப்படையில் இந்தத் திட்டங்களைப் பார்க்குமா புதுவை அரசு?