Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: ‘ஹரியானா துஷ்யந்த் சௌதாலாவின் நிலைதான் ரங்கசாமிக்கும்!’ - எச்சரிக்கும் நாராயணசாமி

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

``டெபாசிட் இழந்த கட்சியான பா.ஜ.க-வில் சேர்பவர்கள் இந்தத் தேர்தலில் காணாமல்போவார்கள். மானம்கெட்டுப்போய் ஆட்சியைக் கவிழ்த்திருக்கும் பா.ஜ.க-வினர் வியாபாரிகளையும் பொதுமக்களையும் மிரட்டுகின்றனர்.” - முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

புதுச்சேரி காங்கிரஸ்-தி.மு.க ஆட்சியைத் திட்டமிட்டுக் கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்ததாக பி.ஜே.பி மீது குற்றம்சுமத்தி மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி, ``மத்தியிலிருக்கும் பாசிச மதவாத சக்தியான பா.ஜ.க., புதுவை மாநிலத்தில் காங்கிரஸ், தி.மு.க மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்திருப்பதைக் கண்டித்து 21 கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இந்த ஜனநாயகப் படுகொலையை இங்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ.க அரங்கேற்றியிருக்கிறது. அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் குதிரைப் பேரம் செய்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பு செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி
முன்னாள் முதல்வர் நாராயணசாமி

கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் பேரம் பேசி, ஆட்சி மாற்றத்தைச் செய்தனர். ஆனால், ராஜஸ்தானில் அவர்களின் வேலை பலிக்கவில்லை. புதுவையில் ஐந்து ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் 10 நாள்கள்தான் இருக்கின்றன. ஆனால், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க மூன்றும் இணைந்து ஆட்சியைக் கவிழ்க்கும் மானம்கெட்ட செயலைச் செய்திருக்கிறார்கள். இதற்கு அவசியம் என்ன? அதிகார பலம், பண பலத்தைப் பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியிலிருந்த சில துரோகிகள் மூலமும் ஆட்சியைக் கவிழ்த்தனர். ஆனால், புதிதாக ஆட்சி அமைக்க முடியவில்லை. நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்கலாம் என நீதிமன்றம் கூறவில்லை. அதனால் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது.

புதுவை அரசுக்குத் தொல்லை கொடுக்க திட்டமிட்டுத்தான் கவர்னர் கிரண் பேடியை அனுப்பிவைத்தார்கள். எங்களை நிம்மதியாக ஆட்சி செய்யவிடவில்லை. காரைக்கால் புறவழிச்சாலையை ஏற்கெனவே திறந்துவிட்டோம். ஆனால், தற்போது மீண்டும் அதைத் திறக்கவிருக்கிறார்கள். மேரி கட்டிடத் திறப்புவிழாவுக்கு ஏற்பாடு செய்தோம்; அதையும் தடுத்து நிறுத்தினர்.

முன்னாள் முதல்வர் ரங்கசாமி
முன்னாள் முதல்வர் ரங்கசாமி

பல திட்டங்களை நாம் செயல்படுத்தியிருக்கிறோம். கடந்த தேர்தலில் 18 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட்டது. அதில் எத்தனை தொகுதிகளில் டெபாசிட் பெற்றார்கள்? பா.ஜ.க-வில் சேர்பவர்களும் இந்தத் தேர்தலில் காணாமல்போவார்கள். பா.ஜ.க டெபாசிட் இழந்த கட்சி. மானம்கெட்டுப்போய் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள். வியாபாரிகளை, பொதுமக்களை பா.ஜ.க கட்சியினர் மிரட்டுகின்றனர்.

ரௌடிகளைக் கட்சியில் சேர்த்திருக்கிறார்கள். பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கூட்டணிக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். வரும் தேர்தலில் மக்கள் உங்களுக்கு பூஜ்யத்தைத்தான் கொடுப்பார்கள். ஹரியானா மாநிலத்தில் சௌதாலாவின் பேரன் துஷ்யந்த் சௌதாலா கட்சியில் 10 எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றனர். அவர்களை வளைத்து கூட்டணி ஆட்சி அமைத்தது பா.ஜ.க.

புதுச்சேரி: `யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசியிருக்கிறார்!’ ஜெ.பி.நட்டாவை விளாசிய முதல்வர் நாராயணசாமி

அதன் பிறகு சௌதாலா கட்சியைச் சேர்ந்த ஒன்பது எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில் வசப்படுத்தினர். நாளை ரங்கசாமிக்கும் இதேநிலைதான் ஏற்படும். யார், யாரையோ மிரட்டுகின்றனர். என்னை மிரட்டிப் பாருங்கள். கொள்கையும், கோட்பாடும் இல்லாதவர்கள்தான் மிரட்டலுக்கு அடிபணிவார்கள்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு