சமூகம்
அலசல்
Published:Updated:

“இன்னொரு லட்சுமி வேண்டாம்...” - புதிய யானைக்கு ‘நோ’ சொல்லும் புதுவை பக்தர்கள்!

யானை லட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
யானை லட்சுமி

அந்த இழப்பின் வலி எனக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக மீண்டும் ஒரு யானையை அழைத்து வந்து, அதைக் கைதியாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென உயிரிழந்த நிலையில், அதற்கு பதிலாக இன்னொரு யானை வாங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர் பக்தர்கள்.

யானை லட்சுமி
யானை லட்சுமி

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலுக்கு 1997-ம் ஆண்டு தனது 6 வயதில் வந்த யானை லட்சுமி, நவம்பர் 30-ம் தேதி தனது 31-வது வயதில் உயிரிழந்திருக்கிறது. அதன் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது ஒருபுறமிருக்க, அன்றைய தினமே தனது சொந்தச் செலவில் கோயிலுக்குக் குட்டியானை வாங்கித்தருவதாக பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் சொன்னது இப்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. மணக்குள விநாயகரின் பக்தர்களில் ஒருவரான கோர்க்காடு அசோக் என்பவரிடம் பேசினோம். “அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த லட்சுமியின் இறப்பு பெரிய இழப்புதான். அதேசமயம் யானைகளின் வசிப்பிடம் காடுதான். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 25 கிலோமீட்டராவது அவை நடக்க வேண்டும். ஆனால், கோயில் யானைகளுக்கு அதற்கான வாய்ப்பில்லை. யானையை விநாயகராகப் பார்க்கும் பக்தர்கள் யாரும் அதன் கால்களைச் சங்கிலியால் பிணைத்து, கோயில் வாசலில் பிச்சை எடுக்க வைப்பதை ஆதரிக்க மாட்டார்கள். அதனால்தான் 70 வயது வரை வாழவேண்டிய லட்சுமி 31 வயதில் உயிரிழந்திருக்கிறது. எனவே, இன்னொரு யானை வாங்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்” என்றார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பின் நிறுவனர் சாமிநாதனிடம் பேசினோம். “மணக்குள விநாயகருக்கும், யானை லட்சுமிக்கும் பக்தன் நான். அந்த இழப்பின் வலி எனக்கும் இருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக மீண்டும் ஒரு யானையை அழைத்து வந்து, அதைக் கைதியாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. இந்துக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகச் சிலர் புதிய யானை வாங்கப் போவதாகக் கூறுகிறார்கள். அது தவறான முடிவு. காட்டு விலங்கை அழைத்து வந்து அதற்கு சர்க்கரைப் பொங்கலையும் புளியோதரையையும் கொடுத்து நோயாளியாக்கிக் கொன்றுவிடுகிறோம். லட்சுமி அனுபவித்த கொடுமைகளை இன்னொரு யானை அனுபவிக்கக் கூடாது. அதற்கு பதிலாக, லட்சுமிக்கு ஒரு சிலையைவைத்து வழிபடலாம்” என்றார்.

அசோக், சாமிநாதன்
அசோக், சாமிநாதன்

``அரசுக்குப் புதிய யானை வாங்கும் திட்டமில்லை’’ என்று கூறியிருக்கும் முதல்வர் ரங்கசாமி, ``அது குறித்து கோயில் நிர்வாகம்தான் முடிவுசெய்ய வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார்.

மணக்குள விநாயகர் கோயில் அறங்காவலர்குழு தலைவர் ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டபோது, “புதிய யானை வேண்டும் என்றும் சில பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்” என்று முடித்துக்கொண்டார்.