அரசியல்
Published:Updated:

புதுக்கோட்டை விவகாரம்... பட்டியலின மக்களை பலிகடா ஆக்கப் பார்த்ததா காவல்துறை?

குடிநீர்த் தொட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
குடிநீர்த் தொட்டி

என் மகன்கள் கண்ணதாசன், முத்துக்கிருஷ்ணன் உட்பட எட்டு இளைஞர்கள், சிறுவர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

குடிநீர்த் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட அதிர்ச்சி விவகாரத்தில், ‘பட்டியலின மக்களையே குற்றவாளிகளாக்கப் பார்க்கிறார்கள்’ என்று வேதனைக்குரல் எழுந்திருக்கிறது!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்திவரும் குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை விவகாரம்... பட்டியலின மக்களை பலிகடா ஆக்கப் பார்த்ததா காவல்துறை?
புதுக்கோட்டை விவகாரம்... பட்டியலின மக்களை பலிகடா ஆக்கப் பார்த்ததா காவல்துறை?

இந்த நிலையில், முன்னதாக வழக்கை விசாரித்துவந்த சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார், ‘உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல், பட்டியல் சமூகத்தினரையே குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி துன்புறுத்தியதாக’ குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர் வேங்கைவயல் கிராமத்தினர்.

இது குறித்து நம்மிடம் பேசிய, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கருப்பையா, ‘‘என் மகன்கள் கண்ணதாசன், முத்துக்கிருஷ்ணன் உட்பட எட்டு இளைஞர்கள், சிறுவர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே, ‘நீங்கதான் இந்தத் தவறைச் செஞ்சதா ஒத்துக்கங்க...’ என்று சொல்லி மிரட்டிவந்தார்கள். செய்யாத தவறை, ‘நாங்கள்தான் செய்தோம்’ என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

புதுக்கோட்டை விவகாரம்... பட்டியலின மக்களை பலிகடா ஆக்கப் பார்த்ததா காவல்துறை?

என் சின்ன மகன் முத்துகிருஷ்ணனை போலீஸார் அடித்துத் துன்புறுத்தியதோடு, தொட்டிக்குள் கிடந்த மலத்தைப் படம் வரைந்து காட்டவும் சொல்லியிருக்கின்றனர். நாங்கள் குடிக்கிற தண்ணீரில், நாங்களே எப்படி மலத்தைப் போடுவோம்... மலம் கலந்த தண்ணீரைக் குடித்த வேதனையைவிடவும், ‘நாங்கள்தான் செய்திருப்போம்’ என்று சொல்லி போலீஸார் எங்களை பலிகடா ஆக்கப் பார்த்ததுதான் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றார் வேதனையுடன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், ‘‘பாதிக்கப்பட்ட மக்களிடம் துருவித் துருவி விசாரணை செய்யும் போலீஸார், மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர், குடிநீர் ஆபரேட்டர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருந்தால், இந்நேரம் உண்மையைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைக் கைது செய்திருக்க முடியும். வழக்கை திசைதிருப்பும் நோக்கில், பட்டியல் சமூக மக்களை டார்ச்சர் செய்த போலீஸார் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி போலீஸாராவது இனி முறையாக விசாரித்து, குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும்” என்றார் கோரிக்கையாக.

கருப்பையா, கவிவர்மன்
கருப்பையா, கவிவர்மன்

சிறப்பு புலனாய்வுக்குழு போலீஸார் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டுப் பேசியபோது, ‘‘விசாரணைக்கு ஒத்துழைக்காத இரு சாட்சிகளிடம்தான் சந்தேகத்தின்பேரில், துருவித் துருவி விசாரித்தோம். மலத்தை வரையச் சொன்னதாக சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்றனர்.

சி.பி.சி.ஐ.டி விசாரணையிலாவது உண்மைகள் வெளிவரட்டும்!