புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதி, சித்தி விநாயகர், மாயன்பெருமாள் கோயில் திடலில் 63-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் மேடையுடன் கூடிய நிரந்த வாடிவாசல் அமைக்கப்பட்டு இவ்வாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது.
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைத்தனர். புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மொத்தம் சுமார் 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, 542 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. ஆறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 290 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயன்றனர். ஒரு சில வீரர்கள் மாட்டின் திமிலை லாகவமாகத் தழுவி வெற்றிபெற்றனர்.

சில காளைகள் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடி, வீரர்களைப் பந்தாடியது. மாடுபிடிவீரர்கள், பார்வையாளர்கள் என ஜல்லிக்கட்டில் 25 பேர் வரையிலும் காயமடைந்தனர். அருகிலேயே மருத்துவக் குழு அமைக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிகபட்சமாக 21 காளைகளைத் தழுவிய முரட்டுச் சோழகம்பட்டியைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞர் முதலிடம் பிடித்து டூவிலரைப் பரிசாக வென்றார். அதேபோல் வாடிவாசலில் நீண்ட நேரம் விளையாடிய செறிவாவிடுதி ரஞ்சித்தின் காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கும் டூவிலர் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு அண்டா, பீரோ, கட்டில், ரொக்கப்பணம் என ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட்டன.
வீரர்கள் காயம்படாமல் இருக்க சில மாடுகளுக்கு, மாட்டின் உரிமையாளர்கள் ரப்பர் குப்பிகளைக் கொம்பில் பொருத்திக் கொண்டுவந்திருந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சார்பில் மஞ்சள் பையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதேபோல், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில் ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.