
‘பெண் குழந்தை பிறந்திருக்கு’ என்று சொன்னால், அதே கொண்டாட்ட மனநிலையில் அக்குழந்தையை வரவேற்பவர்களின் சதவிகிதம் மிகக் குறைவே.
‘`பெண்கள் எத்த னையோ துறை களில் இன்று நாம் வியந்து பார்க்கும் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். என்றாலும் இன்னொரு பக்கம், பெண் குழந்தை பிறக்கும்போது நம் இந்தியக் குடும்பங்களின் மனநிலையில் ஒரு தொய்வைதான் பார்க்க முடிகிறது. அந்தத் தேவதைகளை சந்தோஷமாக பூமிக்கு வரவேற்க என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியாக, என் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறந்தால் பிரசவ செலவு இலவசம் என்று அறிவித்திருக்கிறேன்’’ என்று அக்கறையுடன் சொல்கிறார் மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த டாக்டர் கணேஷ் ராக்.
புனே ஹடப்சர் பகுதியில் உள்ள தன் ‘மெடிகேர்’ மருத்துவமனையில், டாக்டர் கணேஷ் ராக் 2012-ம் ஆண்டு முதல், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம் (முல்கி வாச்சவ் அபியான்)’ என்ற முழக்கத்துடன், பெண் குழந்தைகள் பிறந்தால் இலவச பிரசவம் பார்க்கிறார். வாழ்த்து களுடன் அவரை நேரில் சந்தித்தோம்.
‘`பொதுவாக பிரசவ வார்டிலிருந்து, ‘ஆண் குழந்தை பிறந்திருக்கு’ என்ற செய்தி வெளியே காத்திருக்கும் குடும்பத்துக்குச் சொல்லப்படும்போது, அங்கு சந்தோஷம், மகிழ்ச்சி, பெருமை எனச் சூழல் கொண்டாட்டமாகிறது. இனிப்புகள் வழங்குவார்கள், கேக் வெட்டுவார்கள். அதுவே, ‘பெண் குழந்தை பிறந்திருக்கு’ என்று சொன்னால், அதே கொண்டாட்ட மனநிலையில் அக்குழந்தையை வரவேற்பவர்களின் சதவிகிதம் மிகக் குறைவே. கோபம், ஏமாற்றம், வருத்தம், சமாதானம் எனப் புதிதாக பூமிக்கு வந்த குழந்தையை அவர்கள் வரவேற்கும் விதத்தைப் பார்க்கும்போது, ஒரு மகப்பேறு மருத்துவராக எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். தாய், குடும்பத்தினர் என்று பிரசவ வார்டிலேயே அழுபவர்களையும் பார்க்க முடியும். பெண் குழந்தை பெற்ற பெண்ணை அவர் கணவர், உறவினர்கள் திட்டும் காட்சிகளும் நடக்கும்’’ என்று வேதனையோடு தன் அனுபவம் பகிர்ந்த டாக்டர்,
‘`பெண் குழந்தை பிறந்தால் மருத்துவ கட்டணத்தைச் செலுத்துவதில் அந்தக் குடும்பத்தினருக்கு முழு திருப்தி இருக்காது. கட்டணத்தை குறைக்கும்படி கேட்பார்கள். இதை யெல்லாம் அன்றாடம் பார்த்த நான், பெற்றோர்களின் இந்த மன நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதில் உதித்ததுதான் இந்தப் ‘பெண் குழந்தை காப்போம்’ திட்டம். இந்தத் திட்டத்தின்படி, எங்களது மருத்துவமனையில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பிரசவ கட்டணத்தை நாங்கள் வாங்குவதில்லை. அதோடு, ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் அந்தக் குடும்பத்தை ஊக்கப்படுத்த, நாங்களே கேக் வாங்கிவந்து கொண்டாட வைப்போம். திட்டத்தை ஆரம்பித்த இந்த ஒன்பது ஆண்டுகளில், எங்கள் மருத்துவமனையில் 2,000 பெண் குழந்தைகளுக்கு பிரசவ கட்டணத்தை இலவசமாக்கியுள்ளோம். இத்திட்டத்தை ஆரம்பித்தபோது என் மனைவி, ‘பணம் வாங்காவிட்டால் எப்படி குடும்பத்தை நடத்துவது’ என்று கேட்டார். நானும்கூட ஒருகட்டத்தில், பொருளாதார ரீதியாக இது நம்மை பின்னோக்கி இழுத்து விடுமோ என்று நினைத்தேன். ஆனால், என் அப்பாதான் எனக்கு முழு ஊக்கம் கொடுத்து, ‘திட்டமிட்ட நல்ல காரியத்தை நிறுத்தாமல் செய்’ என்றார்’’ - இந்த முன்னெடுப்பால் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி சொன்னார்...
‘`இத்திட்டத்தால் இப்போது எங்களது பகுதி மக்களிடம் நல்ல மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ‘பெண் குழந்தைகள் பிறந்தால் அந்த மருத்துவமனையில் கொண்டாடுகிறார்கள், பெண் வெற்றியாளர்கள் பற்றியெல்லாம் சொல்கிறார்கள். நாளை நம் வீட்டுப் பெண்களும் அப்படி வருவார்கள்’ என்ற நம்பிக்கை பல குடும்பங்களில் ஏற்பட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பிறக்கும்போது குடும்பத்தினர் சந்தோஷத்துடன் வரவேற்கிறார்கள். சிலர், ‘பிரசவ கட்டணம் தள்ளுபடி செய்ய வேண்டாம் டாக்டர்’ என்று கூறுவது சந்தோஷமாக இருந்தாலும், அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, ‘எங்களால முடிஞ்சதை கொடுக்குறோம், உங்க மருத்துவமனையில பிறக்குற மற்ற பெண் குழந்தைகளின் பிரசவ செலவுக்கு அது உதவட்டும்’ என்று சொல்லி, எங்கள் மருத்துவமனையில் இருக்கும் ஒரு பதிவேட்டில் அவர்களின் பெயரையும், அவர்களால் கொடுக்க முடிந்த உதவித் தொகையையும் எழுதி வருகிறார்கள். ‘பெண் குழந்தைதான் வேணும் டாக்டர்’ என்று சொல்லும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, அத்துணை மகிழ்ச் யாக இருக்கிறது’’ என்று டாக்டர் கணேஷ் ராக் சொல்வதைக் கேட்கும் நமக்கும் நிறைவாக இருக்கிறது. தன்னுடைய இந்த முயற்சியில் மற்ற மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டுள்ள டாக்டர் கணேஷின் செயல்பாடு, சிறப்பு.
‘`எனது பகுதியில் உள்ள மருத்து வர்கள் மற்றும் என்னுடன் சேர்ந்து மருத்துவம் படித்தவர்களிடமும் தொடர்புகொண்டு, இத்திட்டம் குறித்து எடுத்துச் சொல்லி, பெண் குழந்தைகளை வெறுக்கும் பெற்றோருக்குத் தேவையான கவுன்சலிங் கொடுக்கும்படியும், சட்டவிரோத கருக்கலைப்பு மற்றும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிதல் போன்ற காரியத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன். பெண் குழந்தை பிறந்தால் முடிந்த அளவுக்குக் கட்டண சலுகை வழங்கும்படியும் வேண்டுகோள் வைத்தேன். மகாராஷ்டிராவில் பெண் குழந்தைகளுக்கு ஆதர வான இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் என்னுடன் இணைந்துள்ளனர்’’ என்று ஆச்சர்யம் கொடுத்தவர், மாநிலம் தாண்டியும் இதை முன்னெடுத்துள்ளார்.
‘`மகாராஷ்டிரா மட்டுமல்லாது இந்தியா முழுக்க ‘பெண் குழந் தைகள் காப்போம்’ பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, பஞ்சாப், ஹரியானா, குஜராத், புதுடெல்லி போன்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள டாக்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணையோடு விழிப்புணர்வு பிரசாரம், கவுன்சலிங் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறோம். எங்களது இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் இதுவரை 4 லட்சம் டாக்டர்களும், 13,000 தொண்டு நிறுவனங்களும், 25,000 தன்னார்வலர்களும் சேர்ந்துள்ளனர். இந்தியா மட்டுமன்றி ஆப்பிரிக்க நாடான ஸாம்பியாவுக்கும் சென்று விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளேன்’’ என்று சொல்லும் டாக்டர், பெண் குழந்தைகள் மீதுள்ள வெறுப்பால் பாதிக்கப்படுவது பெண்கள் குழந்தைகள் மட்டுமல்ல, மொத்த சமூகமும்தான் என்கிறார்.

‘`பெண் குழந்தைகள் சட்ட விரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்படுவதால் நாட்டில் ஆண் பெண் விகிதாசாரம் மாறுபடுகிறது. பாலின விகிதாசாரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் சமுதாயத்தில் மிகப்பெரிய பிரச்னை ஏற்படும். பெண் குழந்தைகளை காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஆரம்பத்தில் மருத்துவ மனைக்கு பேருந்தில்தான் வந்து கொண்டிருந்தேன். பெண் குழந்தை களுக்காக நான் செய்யும் சேவை குறித்து கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் என்னை, ‘இனிமேல் நீங்கள் ஹாஸ்பிட்டலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டாம்’ என்று சொல்லி, எனக்கு ஒரு கார் பரிசளித்தார். அந்த காரில்தான் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று ‘பெண் குழந்தைகள் காப்போம்’ விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். என் மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகள் வளர்ந்து, ‘தேங்க்ஸ் டாக்டர், நிச்சயம் பெருமை தேடித் தருவோம்’ என்று சொல்லும்போது கிடைக்கும் உணர்வை... தாய்மை என்றும் சொல்லலாம்.”
நிறைவுடன் சொல்கிறார் டாக்டர் கணேஷ் ராக்.