அடுத்த மாதம் பிப்ரவரி 20-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தன்னுடைய புதிய கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் 22 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமரீந்தர் சிங், ``பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான நவ்ஜோத் சிங் சித்து மூளையில்லாதவர். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருக்கக்கூட தகுதியற்றவர். இந்தத் திறமையற்ற நபரைக் கட்சிக்குள் சேர்க்க வேண்டாம் என ஐந்தாண்டுகளுக்கு முன்னரே சோனியா காந்தியிடம் கூறியிருந்தேன்" என நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ``தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக ஆதாரங்கள் கிடைத்தபோதிலும் இவர்கள்மீது கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸில் 40 ஆண்டுகளாக முக்கியத் தலைவராகப் பணியாற்றி, கட்சிக்குப் பக்கபலமாக இருந்த அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் உட்கட்சிப்பூசல் காரணமாக கடந்த ஆண்டு, தான் வகித்துவந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அடுத்த சில நாள்களிலேயே கட்சியிலிருந்து விலகி, புதிதாக பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார். இந்த நிலையில், பஞ்சாப்பில் தற்போது நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அமரீந்தர் சிங், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.