மற்ற எபிசோடுகள்
Published:Updated:

புண்ணிய புருஷர்கள் - 19

புண்ணிய புருஷர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
புண்ணிய புருஷர்கள்

`எல்லாம் ஏகம்பனின் திருவருள்'

சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொள்வதே இந்த நாளில் சவாலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தன் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் ஒருவர் செலவு செய்தால்தான் ஒரு வீடு கட்ட முடிகிறது. ஆனால், அடியார் ஒருவர் தனியாளாக ஆறு ஆண்டுகளாக உழைத்து மெள்ள மெள்ள ஒரு பெரிய சிவாலயத்தைக் கட்டிவருகிறார் என்பதைக் கேட்டால் நம்ப முடிகிறதா? நம்புங்கள்... பூசலார் நாயனாரை நம்பினால், இந்த அடியாரின் வாழ்வையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

ஆற்காடு - பொன்னை சாலையில், ஆற்காட்டில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது ஏகாம்பர நல்லூர். இங்கு அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் திருப்பணியையே சிரமேற்கொண்டு செய்து வருகிறார் அந்த அடியவர்.

புண்ணிய புருஷர்கள் - 19

அவர்தான் சிவ.சண்முகம். ஏகாம்பரநல்லூரில் வாழ்ந்துவரும் இவர் 2013-ம் ஆண்டு, அந்த ஊரில் பாழ்பட்டுக்கிடந்த இந்த ஆலயத்தைப் புனரமைக்க விரும்பினார். ஊர் மக்கள் ஒத்துழைப் போடும் அடியார் பெருமக்கள் உதவியோடும் பழைமையான ஆலயத்தின் கருங்கற்களை அகற்றி எடுத்துவைத்துவிட்டு தெய்வ மூர்த்தங்களுக்குப் பாலாலயம் செய்து பணியைத் தொடங்கினார்.

பழைய கருங்கற்களை அதே இடத்தில் அடுக்கி, ஆகம விதிப்படி கட்டுமானப் பணியை மேற்கொண்டார். சிமென்ட், டைல்ஸ் போன்ற நவீன பொருள்களைத் தவிர்த்துவிட்டு சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டிக் கலவைகொண்டு பூச்சு வேலை செய்து ஆலயம் எழும்பத் தொடங்கியது. அவ்வப்போது சிவனடியார்களும் ஊர் மக்களும் உதவ, சண்முகம் ஐயாவின் கோயில் திருப்பணி தொடர்ந்தது.

தம்மிடமிருந்த குறைவான பொருளைக் கொண்டு இந்தப் பணியைத் தொடங்கிய இவரால் தொடர்ந்து பணம்போட முடியவில்லை. ஊர் மக்கள் இணைந்து நிதி உதவி செய்ய பணி தொடர்ந்துள்ளது. அதுவும் போதாத நிலை யில் இந்துசமய அறநிலையத் துறையை அணுகி நிதி உதவி கோரினார் சண்முகம் ஐயா.

ஈசனின் கருணையால் அறநிலையத் துறை யும் ஓரளவு பணம் ஒதுக்க ஒப்புக்கொண்டு, அதில் ஒரு தொகையை ஒதுக்கித் தந்துள்ளது.

இந்த நிலையில் சக்தி விகடன் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் (18. 12. 2018 தேதியிட்ட இதழில்) இந்த ஆலயத்தின் திருப்பணி குறித்த கட்டுரை வெளியானது. தொடர்ந்து நம் வாசகர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பு களை வழங்கினார்கள். தற்போது ஆலயம் 60 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

அரசு தரப்பிலிருந்து மீதித்தொகை இன்னும் வந்துசேரவில்லை. ஆனாலும், மனம் தளராத சண்முகம் ஐயா தனி ஒருவராக ஆலயப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார். ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்கூடங்களில் சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவரும் இவர், அவற்றின் மூலம் வரும் வருமானத்தைச் சீட்டுக் கட்டி சேமித்து ஆலயப் பணியைச் செய்து வருகிறார்.

நேரம் கிடைக்கும்போது மற்ற அடியார்களும் உதவிசெய்ய, சண்முகம் ஐயாவின் திருப்பணி செவ்வனே தொடர்கிறது. தானே கல் உடைப்பது, சுண்ணம் கலப்பது, நீர் விடுவது, சுற்றிலும் மரங்கள் நட்டு பாதுகாப்பது என எல்லா வேலைகளையும் செய்துவருகிறார்.

புண்ணிய புருஷர்கள் - 19

நாங்கள் சென்றிருந்தபோதும் சிறுவர்கள் சிலரின் உதவியோடு கடுக்காய் அரைத்துக் கலந்துகொண்டிருந்தார். உங்கள் பணியைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றபோது சிறு புன்னகையையே பதிலாகத் தந்தவர், ‘ஆலயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்' என்றதும் மிகுந்த நெகிழ்ச்சியுடன் கண்ணீர்மல்க பேசினார்.

“அஷ்ட பைரவர்களும், 64 யோகினியரும் தினமும் சூட்சும வடிவில் வழிபடும் ஆலயம் இது. பல்லவர்களும் நாயக்க மன்னர்களும் கொண்டாடிய ஏகாம்பரேஸ்வரர் இவர். இந்த ஆலயத்தின் அமைப்பையும் கற்களின் தொன்மை யையும் பாருங்கள். இது ஒரு காலத்தில் பக்தர்களின் துன்பம் தீர்க்கும் மகத்தான தலமாக இருந்ததை உணரலாம்.

நாயக்கர்கள் காலத்தில், காஞ்சி ஏகாம்பரேஸ் வரரை இந்த ஆலயத்தில் ஆண்டுக்கு இருமுறை எழுந்தருளச் செய்ததாகச் சொல்லப்படுகிறது. முனிவர்களும் யோகிகளும் கொண்டாடிய பெருமைகொண்டது இந்த ஊர். அதற்குச் சாட்சியாக காஞ்சி காமகோடி பீடத்தின் 13-வது பீடாதிபதியாக விளங்கிய சத்சித்கணேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானமும், அவருடைய சீடரின் பிருந்தாவனமும் இந்த ஊருக்கு அருகே அமைந்திருக்கின்றன.

பெருமைகள் பலகொண்ட இந்த ஆலயம் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்டு பல நாள்கள் தவித்திருக்கிறேன். ‘யாரோ வந்து சீர் செய்ய வேண்டும் என்று ஏன் காத்திருக்கிறாய், நீயே தொடங்கு’ என்று ஈசன் குறிப்பால் எனக்கு உணர்த்தினார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தெய்வ கைங்கர்யத்தைத் தொடங்கினேன். எல்லாம் ஈசன் திருவருள். இந்த எளியோனால் எதுவும் நடக்கவில்லை ஐயா” என்கிறார்.

ஆலயத் திருப்பணி மட்டுமல்ல... அந்த ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்களைக் கொண்ட ஓர் அடியார் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார் இவர். அவர்களோடு இணைந்து நந்தவனம் அமைத்தல், இயற்கை விவசாயம், ஆலயப் பணிகள் என எப்போதும் பரபரப்பாக இயங்கிவருகிறார் சிவ.சண்முகம்.

“செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. எல்லாம் நல்லவர்களின் உதவியால் இனிதே நடைபெறும் என்று நம்புகிறோம் ஐயா. பிரமாண்டமான இந்த ஆலயம் இவ்வளவு கம்பீரமாக எழுந்துவிட்டது. இனி மீதமிருக்கும் பணிகளையும் ஏகம்பன் பார்த்துக்கொள்வான்.

சுவாமி, அம்பாள் தவிர மற்ற தெய்வ மூர்த்தங் களையும் பரிவார மூர்த்திகளையும் புதிதாகச் செய்யவேண்டியுள்ளது. விமான சுதைச் சிற்பங்கள், சுற்றுச்சுவர், பிராகாரத் தரைகளில் கற்கள் பதித்தல் என்று பெரும் பணிகள் காத்திருக்கின்றன. இறையருளால் எல்லாம் நடக்கும்.

இந்த ஆலயத்துக்கென்று ஒரு திருக்குளமும் நந்தவனமும் அமைக்கக்கூட ஆசைப்படுகிறோம். இறையருள் கூடினால் அதற்கான நிலம் கிடைத்து அதுவும் கைகூடும் என்றே நம்புகிறோம்'' எனக் கூறும் சிவ.சண்முகம், எத்தனையோ பணக்கஷ்டம், அவமானம், உதாசீனங்களைக் கடந்துதான் இந்தப் பணியைச் செய்துவருகிறார்.

``எல்லாமே சிவன் என்று இருப்பவருக்கு ஏது துக்கமும் துயரமும்... அடியார்களும் இந்த ஊர் மக்களும் எப்போதும் உதவுகிறார்கள். அதுபோலவே அறநிலையத் துறையும் சீக்கிரமே பண உதவி செய்து உதவினால் ரொம்ப சந்தோசம்.

விடியற்காலை தொடங்கி இரவு வரும்வரை இங்கேயே கிடந்து ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பேன். இந்த ஆறு ஆண்டுகளில் ஆலயப்பணி செய்யாமல் இருந்ததே இல்லை. ஒருவேளை ஈசனருளால் இந்த ஆலயப் பணிகள் முடிவடைந்துவிட்டாலும் பெருக்கித் துடைத்து என்ஆயுள் முழுக்கக் கிடப்பேன். ஏகம்பன் என்னை ஆட்கொண்டுவிட்டான். அவன் பூரண அன்பில் எங்களுக்கு ஒரு குறையுமில்லை'' என்று கூறும் அடியவர், தொடர்ந்து பேசினார்.

``ஒரு கோயிலும் சிதைந்துகிடக்கக் கூடாது ஐயா. ஒவ்வோர் ஊரிலும் நல்லவர்கள்கூடி சிதைந்திருக்கும் ஆலயங்களைப் புனரமைக்க முன்வர வேண்டும். எல்லா ஆலயங்களும் சீராகி பூஜைகள் நடந்தால், ஒட்டுமொத்த தேசமும் சுபிட்சம் பெறும். ஓர் ஊரில் ஆலயம் சிறப்பாக விளங்கினால் அந்த ஊரே செழிப் பாகும்.

புண்ணிய புருஷர்கள் - 19

அரசன் குதிரை வாங்கக் கொடுத்த பொன்னைக்கொண்டு பெருந்துறை ஆலயத்தை மாணிக்கவாசகப் பெருமான் கட்டினார். சோழப் பேரரசனான கோச்செங்கணான் யானை ஏறா எழுபது ஆலயங்களைக் கட்டினான் என்றெல்லாம் படித்திருக்கிறோம். அப்படி, நம் முன்னோர்கள் உருவாக்கிய ஆலயங்களைப் பொலிவுடன் பாதுகாப்பது நம் கடமை அல்லவா.

அரசர்கள், மந்திரிகள், அளவிலா செல்வம்கொண்ட தனவான்கள் ஆலயம் எழுப்பலாம். இந்த அன்றாடம் காய்ச்சிக்கு ஏன் இந்தப் பெரிய ஆசை என்று நினைக்கலாம். ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது ஈசனின் விருப்பம். நான் வெறும் கருவியே” என்கிறார் சிவ. சண்முகம்.

`ஆலயங்களில் மட்டுமே இறைவன் இருப்பதில்லை' என்று நம் புராணங்களும் புனிதக் கதை களும் சொல்கின்றன. இதுபோன்ற அடியார்களின் செயலிலும் ஆண்டவன் உறைகிறான். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் பூசலார் நாயனார் திருக்கதை. தனது ஊரில் ஒரு சிவாலயம் கட்ட யாருமே உதவ முன்வராத நிலையில், பூசலார் மனதுக்குள்ளேயே ஒரு பிரமாண்டத் திருக்கோயிலை எழுப்பினார்.

அந்த ஆலயத்துக்கான குடமுழுக்கு நாளையும் தீர்மானித்துக் குறித்துவைத்தார். காஞ்சி மன்னன் காடவர்கோன் எழுப்பிய பிரமாண்ட ஆலயத்தின் குடமுழுக்கு நாளும் அதே நாளில் வந்தது. எளியோருக்கு எளியோனான ஈசன் எங்கு எ ழுந்தருளியிருப்பான் என்று உங்களுக்கே தெரியும் அல்லவா!

ஈசனே அரசனின் கனவில் தோன்றி, `நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்துச் செய்த நன்று நீடாலயத்து நாளைநாம் புகுவோம்; நீயிங்கு ஒன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்’ எனப் பணித்தாராம் ஈசன். அதன் மூலம் `எது ஆலயம்' என்பதை உலகுக்கு ஓங்கி உரைத்தான் இறைவன் என்றே சொல்லவேண்டும். அடியார்தம் உள்ளத்து ஒடுக்கம் அந்த ஆண்டவன்!

மன்னவன் காடவர்கோன் எங்கே நீங்கள் கட்டிய ஆலயம் என்று பூசலாரைக் கேட்க,

`என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான்

அருள் செய்தாரேல் முன்வரு நிதி இலாமை

மனத்தினால் முயன்ற கோயில் இன்னதாம்'

என்று பூசலார் தன் மனத்தில் கட்டிய கோயிலைக் காட்டி னார் எனப் புராணம் சொல்கிறது. அவர் மனக்கோயில் கட்டினார் எனில், இந்த அடியாரோ மனத்தில் `அற்புத ஆலயத்தைப் புனரமைப்பது' எனும் மகத்தான ஆசையை விதைத்து, அதற்கான திருப்பணியைச் செய்துவருகிறார். பணி இனிதே நிறைவேறும்; `ஏகம்பன் கோயிலை அந்த ஈசனே முடித்துக்கொடுப்பான்' என்று உறுதிகூறினோம்.

பூமி இருப்பதால்தான் வானகம் வணங்கப்படுகிறது. இது போன்ற அடியார்களைக் காணும்போதுதான் ஆண்டவன் மீதே அதீத நம்பிக்கை உண்டாகிறது. அடியாரின் விருப்பங்கள் நிறைவேற ஈசனைவேண்டி விடைபெற்றோம்.

- அடியார்கள் வருவார்கள்