
கடந்த ஆடிக் கார்த்திகை தினத்தில் திருச்சி ஸ்ரீதாயுமானவ ஸ்வாமியை தரிசிக்கச் சென்றிருந்தோம். அன்றைய தினத்துக்கு வேறொரு சிறப்பும் உண்டு.
ஆம், ஈசனுக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைச் செய்து பெறற்கரிய பேறுபெற்ற மூர்த்தி நாயனாரின் குருபூஜை நாளும் அன்றுதான்! ஆகவே, அவரையும் தரிசித்தோம். மூர்த்தி நாயனாரின் அற்புதத் தொண்டினை நோக்கி எங்கள் நினைவு சென்றது.
மதுரையம்பதியில் தோன்றி சிவபெருமானின்மீது மாளாத அன்பு கொண்டு, தினந்தோறும் ஆலவாய் அழகனுக்கு சந்தனம் அரைத்துக் கொடுக்கும் திருப்பணியைச் செய்து வந்தார் மூர்த்தி நாயனார்.
அக்கால மதுரையின் வடுக அரசன் புற சமயத்தைச் சேர்ந்தவன் என்பதால், மூர்த்தி நாயனாரின் திருப்பணியைத் தடுக்கும் பொருட்டு, எங்குமே சந்தனக் கட்டைகள் கிடைக் காமல் தடுத்துவிட்டான். அற்பர்கள் செய்யும் ஜாலத்துக்கு எல்லாம் அடியார்கள் அயர்ந்துவிடுவார்களா என்ன! சந்தனக் கட்டைக்குப் பதிலாக தன் முழங்கையையே கல்லில் உரைத்து கைங்கர்யத்தைத் தொடர யத்தனித்தார்; இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்டார். அதன் பலனாக, மதுரையம்பதியின் மன்னனாகி வாழ்ந்து, நிறைவில் சிவபதம் அடைந்தார் என்று அந்த நாயனாரின் திருக்கதையைப் பகிர்ந்துகொண்டோம்.
அப்போது, ``அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் இந்தத் திருச்சி நகரில் அப்படியோர் அடியார் வாழ்கிறார்; அவரைச் சந்திக்கிறீர்களா'' என்று அங்கிருந்த அன்பர் ஒருவர் கேட்டார். ``இது என்ன கேள்வி. அடியாரை தரிசிப்பது ஆண்டவனையே தரிசிப்பது போலல்லவா'' என்றபடியே உடனே புறப்பட்டோம்.
திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி ஒரு சிறிய வீடு. அங்குதான் வாழ்கிறார் சிவதர்மராஜ் எனும் அடியார். அவரின் துணைவியார் மாதவி; மகள்கள் கேதார கௌரி மற்றும் பர்வதவர்த்தினி சூழ நம்மை வரவேற்று உபசரித்தார். அப்போது மணி நண்பகல் 11. மாலை 3 மணிக்குள் மூர்த்தி நாயனார் பூசைக்குச் சந்தனம் அரைத்துக் கொடுக்க வேண்டும் என்பதால், தேநீர்- உணவு உபசரிப்புக் குப் பிறகு வீட்டிலேயே சந்தனம் அரைக்கும் பணியைத் தொடங்கினார். நாமும் மெள்ள பேச்சு கொடுத்தோம்.
``சிவபெருமானுக்குச் சாத்தும் சந்தனக் குழம்பை அரைத்துக் கொடுத்தல் என்பது உத்தமமான சிவபுண்ணியம். ஈசனுக்கான பலவித உபசாரங்களில் கந்தம் எனப்படும் சந்தனம் சாத்துவது மிகவும் சிறப்பானது என்கின்றன ஆகமங்கள். இந்தப் பணியால் பெரும் புண்ணியம் வாய்க்கும் என்பது பெரியோர் வாக்கு...'' என்றவரை இடைமறித்து, ``வரப்போகும் நன்மைகளைக் கருதியா நீங்கள் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கிறீர்கள்'' என்று கேட்டோம்.

“சிவ சிவா! புண்ணியமும் பெருமையும் கிடைக்கும் என்பதற்காக எளியோன் இந்தச் செயலைச் செய்யவில்லை ஐயா” என்று பதற்றத் தோடு மறுத்தவர், தொடர்ந்து பேசினார்.
`‘ `சிவனை வழிபட்டார் எண்ணிலி தேவர்கள்
அவனை வழிபட்டங்கு ஆமாறு ஒன்றில்லை
அவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்
குருவை வழிபடில் கூடலும் ஆமே’ என்பார் திருமூலர். அதன்படி, சிவனை எளிதாக அடைய அவருடைய அடியார்களை வணங்கினால் போதும்; சிவநாமத்தை ஜபிக்கும் அடியவர்களைக் குருவாக வணங்கினால் போதும்; சிவபெருமானை எளிதாக அடைந்துவிடலாம்.
சிவபெருமானை ஆராதிக்கும் வழியோ, முறையோ இந்த எளியோனுக்குத் தெரியவில்லை அதனால் அவருடைய அடியார்களான நாயன்மார்களை வணங்கத் தொடங்கினேன். 63 நாயன்மார்களும் அற்புதமானவர்கள்; சிவனுக்கு நிகரான அன்பு கொண்டவர்கள். அவர்கள் பெருமைக்கு அவர்களே இலக்கணமானவர்கள்.
இந்த அடியார்களைக் கொண்டாட எண்ணிய போது, எனக்குள் தோன்றிய கைங்கர்யமே, இந்தச் சந்தன சேவை. நாயன்மார்களின் குருபூஜை மற்றும் அவதார பூஜை நாள்களில், அவர்கள் அவதரித்த அல்லது முக்தி அடைந்த தலத்துக்கே சென்று சந்தனம் அரைத்துக் கொடுத்து, ஈசனுக்கும் குறிப்பிட்ட நாயன்மாருக்கும் சாத்தி வணங்கு வேன்; வில்வ மாலை சாத்தி, பல்வேறு தூப வகைகள் காட்டி மனமார வழிபடுவேன். ஏழு ஆண்டுகளாகத் தொடர்கிறது இந்தப் பணி. நாயன்மார்கள் அனைவரது திருத்தலங்களுக்கும் சென்று கைங்கர்யம் செய்துவிட்டேன்.
பிழைப்புக்காக பொற்கொல்லர் தொழில் செய்து வருகிறேன். என் குடும்பமே எனக்கு ஆதரவாக இருந்து இந்தச் சிவப்பணியில் ஈடுபட்டு வருகிறது. அதனால், வாழ்வதற்குத் தேவையான அளவுக்குப் பணம் கிடைத்தால் போதுமென்ற அளவில் உழைப்போம். மற்ற நேரங் களில் இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம்.
தினந்தோறும் என் மனைவியும் குழந்தைகளும் வில்வ மாலையைக் கட்டிக்கொடுத்துவிடுவார்கள். நான் சந்தன கைங்கர்யத்தைச் செய்துவிடுவேன். எப்பாடுபட்டாவது சந்தனக் கட்டைகள், தூப திரவியங்களை வாங்கிவிடுவேன். சிலநேரம் அடியார்கள் சிலரும் தானமாக வழங்குவார்கள்...'' என்று கூறிப் புன்னகைத்தவர், மேலும் தொடர்ந்தார்.
``அன்பே வடிவான தயாபரன் நம் ஈசன். அதனால்தான் தம்முடைய அடியார்களுக்காக அலகிலா விளையாட்டை ஆடி இன்பம் அளிக்கிறார். எவருமே செய்யமுடியாத பல அற்புதங்களைச் செய்த அடியார்களை, தமக்கு நிகராக உயர்த்தி ஆலயங்களில் அமரச்செய்தவர் சிவபெருமான்.
ஆலகாலம் பொங்கி அனைவரை யும் அச்சுறுத்தியபோது, தம்முடைய அடியவரான ஆலால சுந்தரரை அனுப்பி, அந்த விஷத்தை திரட்டி எடுத்துவந்து தம்மிடம் கொடுக்கும்படி செய்தவர் ஈசன். சுந்தரரின் பெருமையை உலகரியச் செய்ய, அவரை திருவாரூரில் அவதரிக்கச்செய்து தம்பிரான் தோழராக ஏற்றுக்கொண்டவர். அதுமட்டுமா, சுந்தரரைக் கொண்டே தம் அடியார்களின் பெருமையைச் சொல்லும் திருத்தொண்டர்தொகையை இயற்றவைத்து அடையாளம் காட்டியவரும் அந்த ஆதிசித்தன் தானே. ஆக, தன் அடியார்களிடம் அதீத கருணையும் பாசமும் கொண்டவர் நம் ஈசன்'' என்றவர், அடுத்ததாக சந்தனம் அரைப்பது குறித்த நியதிகளை விளக்கினார்.
``சந்தனம் அரைத்தபின், சேரும் சந்தனத்தை கட்டை விரல் சேர்க்காமல் எடுக்கவேண்டும். அதேபோல், அரைத்தப் பிறகு சந்தனக் கட்டை யையும் அடிக்கல்லையும் ஒன்றின் மேல் ஒன்றை வைக்கக்கூடாது; தனித்தனியாக வைக்க வேண்டும்.
சிவனை வணங்குவதும் அவரின் அடியார்களை வணங்குவதும் ஒன்றே. இதுகுறித்து அவரே முருகனுக்கு உபதேசித்ததாக ஞானநூல்கள் விளக்குகின்றன. அதேபோல், நாயன்மார்கள் அவதரித்த, முக்தியடைந்த அல்லது அவர்கள் சென்று தரிசித்த தலங்களுக்குச் சென்று வழிபடுவதும் சேவை செய்வதும் அனந்தகோடி புண்ணியங்களைக் கொடுக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

பாடல்பெற்ற தலங்கள் எல்லாம் அதிர்வோடு விளங்கி அருள் வழங்குவதெல்லாம், நாயன்மார்கள் அங்கு வருகை புரிந்ததால்தான் என்பது பெரியோர் வாக்கு. எனவே, நாயன்மார்களை வணங்குவதே சிவனை அடைவதற்கான எளிய வழி என்பேன்.
நம்பியாண்டார் நம்பி, தாம் அருளிய திருத் தொண்டர் திருஅந்தாதியில், ஈசனை அடைய நினைக்கும் முனிவர்களுக்கு ஓர் எளிய உபாயம் கூறுகிறார். `ஈசனின் திருப்பாதங்களை அடைய ஐயன் திருஞானசம்பந்தரின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டால் போதும்' என்கிறார். இப்படி அடியார்களை ஏத்துவது என்பது ஈசனை போற்றுவதற்குச் சமம் எனலாம்.
ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள எனக்கு என்ன தெரியும் ஐயா. எல்லாம் பெருமான் கிருபை. அவர் ஆட்டுவிக்கிறார்; ஆடுகிறேன். ஈசனை மகிழ்விக்க அவர் அடியார்களை மகிழ்விப்பதும் ஒரு சிறந்த வழி என்று குருமார்கள் சொன்னார்கள். அதன்படி நாயன்மார்களின் பூசை நாள்களில் என்னால் முடிந்த கைங்கர்யங் களைச் செய்துவருகிறேன். மற்றபடி வேறு எந்தப் பிரதிபலனும் கருதி இதைச் செய்யவில்லை. இப்படி வழிபட்டால் மனம் மகிழ்கிறது அவ்வளவுதான்!
சந்தனம் அரைத்துக் கொடுப்பதும், வில்வமாலை தொடுத்துக்கொடுப்பதும், தூபங்கள் இடுவதும் எளிய வேலைகள்தான் ஐயா... யார் யாரோ என்னென்னமோ செய்கிறார்கள்... இந்த அடியேன் செய்வது ஒன்றுமே இல்லை'' என்று கூறியபடி வெள்ளந்தியாகச் சிரித்தார், அடியார் சிவதர்மராஜ். நிறைவாக, நாம் பத்திரிகையாளர் என்பதைக் கூறி, ``உங்கள் கைங்கர்யத்தையும் நீங்கள் பேசியதையும் வெளியிடலாமா'' என்று கேட்டோம்.
அவ்வளவுதான்... அதிர்ந்துவிட்டார் சிவதர்ம ராஜ். ``ஏதாவது பாராட்டி எழுதி, எனக்குக் கர்வம் வரும்படி செய்துவிடாதீர்கள் ஐயனே. உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்...'' என்றெல் லாம் புலம்பத் தொடங்கிவிட்டார். பிறகு, உடன் வந்த அடியார்கள் இந்தத் தொடரின் நோக்கத்தை எடுத்துச் சொல்லி, சம்மதிக்கவைத்தார்கள்.
உண்மையானவர்கள் எல்லாம் இப்படி ஒதுங்கியிருப்பதால்தான் போலிகள் நிறைந்து, பொய்களும் மிகுந்து வருகின்றன என்று நினைத்த வாறு அவரிடம் விடைபெற்றோம். சந்தனம் அரைக்க மணக்கும்; சிவதர்மராஜோ நினைக்கவே மணக்கிறார்!
அடியார்தம் புகழ் பாடும் புண்ணியத் தொடர்!
சிவமே தவமென்று வாழும் அடியார்களைப் போற்றும் இந்தத் தொடர், பாராட்டுதலுக்கு உரியது.

சாமான்ய மானிடர்கள் கங்கை - காவிரி போன்ற நதிகளில் நீராடினால், அவர்களின் பாவங்கள் அந்த நதிகளில் சேரும். அதே நதிகளில் சிவனடியார்கள் நீராடினால், அந்த நதிகளின் பாவங்களே விலகும் என்று ஈசன் முருகப்பெருமானுக்கு உரைத்த ஓர் உபதேசத்தில் கூறியுள்ளார். இத்தகு மகிமை வாய்ந்த இறையாடியார்களால்... அவர்கள் அவதரித்த, சென்று வழிபட்ட, முக்தியடைந்த தலங்கள் பெருமையுடன் விளங்குகின்றன.
அடியார்களின் பெருமை ஆண்டவனாலும் புகழப்பட்டது. திருநாரையூர் நம்பியாண்டார்நம்பி விநாயகர் அருளால், சகல வேதங்களையும் ஆகமங்களையும் அறியப்பெற்றார்.
அவரே, ஞானகுருவான விநாயகப் பெருமானைத் தொழுது வெறும் 21 பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். ஆனால், திருஞானசம்பந்தரைத் தொழுது 570 பாடல்கள் பாடியுள்ளார். இதிலிருந்தே அடியார்களின் பெருமையை அறிந்துகொள்ளலாம்.
இந்தத் தொடரில் அடியார்களின் பலரது வாழ்க்கையும், அவர்கள் செய்துவரும் தொண்டுகளும், அதற்காக அவர்கள் படும் சிரமங்களும் நம்மை நெகிழவைக்கின்றன; அவர்களை எண்ணி அழவும் தொழவும் வைக்கின்றன. காலங்கள் கடந்தும் இந்தத் தொடர் நிலைத்து நிற்கும்; நமது தர்மத்தின் புகழ் பாடி நிற்கும்.
- வீ. பாபு,
புகைப்படக் கலைஞர்,
சென்னை - 4