
- லத்திகா சுகுமார்
மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், சொந்த ஊருக்குச் செல்கிறீர்கள் என்றால், அங்கே நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் விஷயம் எதுவாக இருக்கும்... ஏன்? சில வார்த்தைகளில்... `நச்' என்று பகிருங்கள். சரியான விடையுடன் `நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.
பொங்கல் புதிர்
பொங்கல் என்றதும் தவிர்க்க முடியாத சில விஷயங்கள் உடனே நம் நினைவுக்கு வந்துவிடும். கீழே 11 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடையைக் கட்டத்துக்குள் இருக்கும் எண்களில் இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக, வலமிருந்து இடமாக, கீழிருந்து மேலாக எழுத வேண்டும்.
1. இது ஓர் உலர்ந்த பழம். கொடியில் காய்க்கக் கூடியது (4)
2. கரும்புச் சாற்றைக் காய்ச்சினால் கிடைக்கும் பொருள் (4)
3. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்று. (7)
4. பொங்கல் என்பது ----------- பண்டிகை (4)
5. மலையில் விளையும். உணவுக்கு வாசனையூட்டும் (5)
6. பல காய்கறிகளைச் சேர்த்து சமைக்கும் ஒரு தொடு கறி (4)
7. புல் வகையைச் சேர்ந்த இந்தத் தாவரத்தை பொங்கல் பானைக்கு அருகில் வைத்திருப்பர் (4)
8. பொங்கல் பானையில் இந்தக் கிழங்கைக் கட்டுவார்கள் (4)
9. பொங்கலுக்குச் சுவையூட்டும் பொருள்களில் ஒன்று (2)
10. கனிக்கு வெளியே இருக்கும் பருப்பு (4)
11. இது இன்றி பொங்கல் கிடையாது (5)


புதிர்ப்போட்டி-27 விடைகள்...
1. கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்
2. வேரில்லாத மரங்கள் - சிவசங்கரி
3. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
4. கல்மரம் - திலகவதி
5. ஒரு வீடு இரு வாசல் - அனுராதா ரமணன்
6. கருக்கு - பாமா
7. அந்தி மாலை - அம்பை
8. பார்த்தீனியம் - தமிழ்நதி
சரியான விடையுடன், `நோயின்றி வாழ, உங்கள் குடும்பத்தில் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பயனுள்ள உபாயம் ஒன்று...’ - நச் வரிகள் எழுதி 500 பரிசு பெறும் 10 பேர்...
1. மீனலோசினி பட்டாபிராமன், சென்னை-92
சமையலுக்கு பருப்பு வேகவைக்கும்போது சில துளிகள் விளக்கெண் ணெய் சேர்ப்போம். இதனால் வயிறு உப்புசம், வாய்வு பிரச்னை, மலச்சிக்கல் போன்ற உபாதைகள் இல்லாமல் வாழ்நாள் முழுக்க நலம் பேண முடிகிறது.
2. தி.அமிர்தம், கோயம்புத்தூர்-25
இரவு படுக்குமுன் உப்பு கரைத்த நீரில் தொண்டை நனையும்படி வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது என் தந்தை கற்றுத் தந்தது. வாய் சுத்தம் தொண்டைக்கு இதமான இந்தப் பழக்கத்தை என் பேரன், பேத்திகள் தொடர்கிறார்கள். கொரோனா தடுப்பில் இதற்கு முக்கிய பங்கு உண்டு.
3. கே.ஆர்.சாந்தி, மதுரை-1
‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை. சுப்ரமணியனுக்கு மிஞ்சிய சாமியுமில்லை’ என்பதுபோல் எங்கள் வீட்டில் சுக்கே பிரதானம். தலைவலி, தலைபாரம் என்றால் உடனே சுக்கு மருந்து தயார்.
இதுவே நோயின்றி வாழக் கடைப்பிடிக்கும் மாமருந்து.
4. ராஜி ஸ்ரீதர், சென்னை-28
உணவை அடிக்கடி சூடு செய்வதைத் தவிர்க்கும்வகையில் முடிந்தவரையில் அனைவரும் ஒரே நேரத்தில் உணவுண்டு சத்துகளின் பலன்களைச் சிதைவின்றி பெறுகிறோம்.
5. க.வளர்மதி, கோயம்புத்தூர்-46
எளிதாகக் கிடைக்கும் துரித உணவு வகைகளை எந்தச் சூழ்நிலை யிலும் சாப்பிடக் கூடாது என்று குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்திருக்கிறோம்.
6. ஆர்.மேரி, திருச்சி-18
தினமும் இரண்டு வகை காய், ஒரு குழம்பு கட்டாயம். வாழைத்தண்டு, வாழைப்பூ, பாகற்காய், சுண்டைக்காய், ஏதேனும் ஒரு கீரை. புதன், ஞாயிறு அசைவம். நாற்பதாண்டுகளாகக் கடைப்பிடித்து வரும் உணவுமுறை இது. ‘வைத்தியருக்குக் கொடுப்பதை வணிகருக்குக் கொடு’ என்பது எங்கள் குறிக்கோள்.
7. உமாதேவி, சேலம்-14
என்னதான் செருப்பு போட்டாலும் வெளியே தெரியும் குதிகால்கள் அல்லது வெடிப்புகள் மூலம் நோய்க் கிருமிகள் வீட்டுக்குள் வரலாம். அதனால் வெளியில் சென்றுவிட்டு வந்ததும் குதிகால்களைத் தேய்த்து கழுவுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறோம்.
8. என்.காவ்யா, சென்னை-125
பசித்தால் மட்டுமே சாப்பிடுவோம். அகோர பசி இருந்தால் நான்கு வேளைகூட சாப்பிடுவோம். இல்லையெனில் சாப்பிட மாட்டோம்.
9. எம்.திருவிநாயக சுந்தரி, தென்காசி.
வாரம் ஒருமுறை இஞ்சித் துண்டை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து தேனுடன் கலந்து சூடுபண்ணி சாப்பிடும் பழக்கம் எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஆரோக்கியமாக வாழ்கிறோம்.
10. சோ.மதுமிதா, அரியலூர்.
மாதம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். ஆண்டுக்கு இருமுறை பேதி மருந்து சாப்பிடுவோம். வாழ்நாள் முழுக்க நோயின்றி வாழ்கிறோம்.