அரசியல்
Published:Updated:

டார்க் ரூம் டார்ச்சர்... நிர்வாண சித்ரவதை! - சிறைத்துறை கொடுமைகள்

சிறைத்துறை கொடுமைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறைத்துறை கொடுமைகள்

வடசென்னையைக் கலக்கிய பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியாகவும் இவர் செயல்பட்டார்.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக விசாரணைக்காக ஆஜரான கைதி பாண்டியன் என்பவர், பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திடுக்கிடவைத்திருக்கிறது. இது பற்றி விசாரித்தால், சிறைத்துறையில் நடக்கும் பல்வேறு கொடுமைகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சென்னை புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த பாண்டியன் என்பவர், உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு, நீதிபதி ரவி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை நீதிபதி விசாரித்துக்கொண்டிருந்தபோது, கூண்டில் நின்றுகொண்டிருந்த பாண்டியனின் அலறல் சத்தம் கேட்டு நீதிமன்றமே ஸ்தம்பித்தது. கையில் வைத்திருந்த பிளேடால் தன் கழுத்தை பாண்டியன் அறுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்துப் பதறிய போலீஸார், ஓடிச் சென்று அவர் கையிலிருந்த பிளேடைப் பறித்தனர். தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியனின் கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டன.

யார் இந்த பாண்டியன்? போலீஸாரிடம் கேட்டோம். ‘‘வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டியன், லாரி ஷெட்டில் பணிபுரிந்துவந்தார். வடசென்னையைக் கலக்கிய பிரபல ரௌடி ஒருவரின் கூட்டாளியாகவும் இவர் செயல்பட்டார். 1998-ம் ஆண்டில் லாரி ஷெட்டில் நடந்த மோதல் ஒன்று, கொலையில் முடிந்தது. இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டவர், சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்’’ என்றார்கள்.

“பாண்டியன் எதற்காகக் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்?” என்று அவரின் வழக்கறிஞர் சங்கரிடம் கேட்டோம். ‘‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பாண்டியன், கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கொலை வழக்கைத் தவிர சென்னை சென்ட்ரல் பகுதியில் மத்தியச் சிறை இருந்தபோது நடந்த கலவரத்திலும் பாண்டியன் மீது வழக்கு இருக்கிறது. 2008-ம் ஆண்டு புழல் சிறையில் பாண்டியன் இருந்தபோது, அப்போதைய சிறைக் கண்காணிப்பாளருக்கும் அவருக்கும் இடையே சம்பளப் பிரச்னை ஏற்பட்டது.

டார்க் ரூம் டார்ச்சர்... நிர்வாண சித்ரவதை! - சிறைத்துறை கொடுமைகள்

சிறையில் ஷூ டப்பா தயாரிப்பு பணியில் பாண்டியன் ஈடுபட்டிருந்தார். ஒரு டப்பாவுக்கு 85 பைசா வீதம் அவருக்குச் சம்பளம் கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தை சிறை அதிகாரிகள் எடுத்துக் கொண்டதால், நீதிமன்றத்தில் பாண்டியன் சார்பில் வழக்கு தொடரப் பட்டது. அதனால், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர் மீண்டும் புழல் சிறைக்கு வந்திருக்கிறார். அவர்தான் பாண்டியனுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார். சோதனை என்ற பெயரில் பாண்டியனை நிர்வாணப்படுத்தியிருக்கிறார். அதோடு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருந்த பிளாக்கில் பாண்டியனை இடம் மாற்றி, தூங்க விடாமல் தொல்லை கொடுத்திருக்கிறார். அதனால்தான், மன அழுத்தம் தாங்க முடியாமல் நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் பாண்டியன். இது தொடர்பாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி-க்கும் நீதிபதிக்கும் புகார் அளித்திருக்கிறோம்’’ என்றார் விலாவாரியாக.

சிறைக் கைதிகளின் உரிமைகளுக்காகப் போராடிவரும் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இன்னும் சில பகீர் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ‘‘தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் இது போன்ற கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது நீதிபதி முன்பாக கைதி ஒருவர் தற்கொலை செய்ய முயன்றதால், விவகாரம் பரபரப்பாகியிருக்கிறது. ஏற்கெனவே சிறைக்குள் பல மர்ம மரணங்கள் நடந்திருக்கின்றன. சிறைக்கைதிகள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நடப்பதுண்டு. சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அதில் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பொதுவாகவே சிறை அதிகாரிகளைக் கேள்வி கேட்டாலே கைதிகள் பல்வேறு டார்ச்சர்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. சாப்பாடு சரியில்லை, கழிவறை மோசமாக இருக்கிறது என்று சிறைக் காவலர்களிடம் குறைகளைச் சொன்னால், டார்க் ரூமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். அதை வழக்கறிஞர்கள், உறவினர்களிடம் கூறினால் அதற்கும் சிறைக்காவலர்களிடம் அடி, உதை விழும். அதேநேரத்தில் அதிகாரிகளை நன்றாக கவனித்தால், சிறைக்குள் ராஜாபோல வாழலாம். சிறைக்குள் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க அங்கு பணியாற்றும் சில கறுப்பு ஆடுகள்தான் காரணம். ஒரு கட்டு பீடி சிறையில் 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 தமிழ்வேந்தன்  - சங்கர்
தமிழ்வேந்தன் - சங்கர்

சிறையிலிருந்து ஒரு கைதி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும்போது தீவிரமாகச் சோதனை நடத்தப்படும். பாண்டியனை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோதும் சோதனை நடந்திருக்கிறது. அப்போது அவரிடம் பிளேடு இல்லை என்று சிறைத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ‘பாண்டியனுக்கு பிளேடு கிடைத்தது எப்படி?’ என்ற கேள்விக்கு விடை கிடைத்தாலே சிறை அதிகாரிகள், பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் சிக்கிக்கொள்வார்கள்’’ என்றார்.

புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, ‘‘சிறைக்குள் பாண்டியன் மற்ற கைதிகளைத் தூங்கவிடுவதில்லை. அது தொடர்பாக சில கைதிகள் எங்களிடம் புகார் அளித்திருக்கிறார்கள். சிறைவிதிகளை மீறி பாண்டியன் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு பிளேடு எப்படிக் கிடைத்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அவர் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை’’ என்றார்.