
இந்தியா வந்திருக்கும் முதல் பேட்ச் ரஃபேல் விமானங்கள் மூன்று மத நம்பிக்கைகளின்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த வாரம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
குதிரைப்படை, யானைப்படை என நிலத்தில் போரிட்ட காலங்கள் மாறி இன்று வானிலும் சண்டையிட்டாக வேண்டும், விண்ணிலும் அரண் அமைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றன நாடுகள். விமானப்படையின் முக்கியத்துவம் என்ன என்பது இரண்டாம் உலகப்போரின் போதே அனைவருக்கும் புரிந்துவிட்டது. பலம்பொருந்திய நாடுகள் அனைத்தும் தொடர்ந்து அதிநவீனப் போர் விமானங்களை அவற்றின் விமானப்படைகளில் சேர்த்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி இந்திய விமானப்படையில் சேர்ந்திருக்கும் புதிய விண் அரக்கன்தான் ரஃபேல்.
ஊழல் சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் விதைபோட்ட ரஃபேல் ஒப்பந்தத்தின் சாராம்சத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம். 59,000 கோடி ரூபாய்க்கு மொத்தம் 36 ரஃபேல் விமானங்களை பிரான்ஸின் டசால்ட்(Dassault) நிறுவனத்திடமிருந்து வாங்க 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டது இந்திய அரசு. 36 ரஃபேல் விமானங்களில் 30 விமானங்கள் ஒரு இருக்கை கொண்ட, போருக்குத் தயாராக இருக்கும் விமானங்கள். 6 பயிற்சி விமானங்கள், இதில் இருவர் அமர முடியும். இந்த ஒப்பந்தத்தின்படி ஜூலை 29 அன்று இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு, முதற்கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் வந்து இறங்கின. ஏற்கெனவே சில விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டாலும் இந்தியா வரும் முதல் ரஃபேல் விமானங்கள் இவைதாம். ஏற்கெனவே பெறப்பட்ட விமானங்கள் இன்னும் பிரான்ஸில் இருக்கின்றன. இந்திய பைலட்கள் அங்கு தங்கி ரஃபேலை நேர்த்தியாக இயக்கும் பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். 36 விமானங்களும் 2021-ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையென்றால் இன்னும் 36 விமானங்களை ஆர்டர் செய்யவும் இந்திய அரசு தயாராக இருக்கிறதாம். இந்திய விண் அரணுக்கு ரஃபேல் விமானங்கள் ஏன் அவ்வளவு முக்கியம்?

இந்தியா வந்திருக்கும் முதல் பேட்ச் ரஃபேல் விமானங்கள் மூன்று மத நம்பிக்கைகளின்படி பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த வாரம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. அப்போது பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “இந்திய தேசியப் பாதுகாப்புக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள்” என்றார். எல்லைப்பகுதியில் தற்போது நிலவும் சூழலில் இந்த விமானங்களின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார். அவர் சொல்வதுபோல பல வருடங்களாகவே பாகிஸ்தான் எல்லைப்பகுதி என்பது கடும் பதற்றம் நிலவும் பகுதியாகத்தான் இருந்துவருகிறது. கடந்த வருடம் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பால்கோட் பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியது. பின்பு இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F-16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இப்படி அவ்வப்போது வான்வழி மோதல்கள் இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது பாகிஸ்தான் எல்லை மட்டுமல்லாது சீன எல்லையிலும் பதற்றம் அதிகமாகியிருக்கிறது. இந்த இரு நாடுகளின் போர் விமானங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரஃபேல் விமானங்களின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.

விமானப்படையைப் பொறுத்தவரையில் சில ஆண்டுகளாகவே ‘வானில் ஆதிக்கம் செலுத்திவருவது நாங்கள்தான்’ என மார்தட்டிக்கொள்கிறது பாகிஸ்தான். காரணம் அதனிடம் இருக்கும் F-16 ரக போர் விமானங்கள். அமெரிக்கத் தயாரிப்புகளான இவற்றுக்கு நிகரான விமானங்கள் இந்தியாவிடம் இல்லை. இவற்றை வீழ்த்த இந்தியாவிடம் தற்போது இருப்பதில் இரண்டு விமானங்கள் தேவை என்கிற நிலைதான் இருந்துவருகிறது. விமானத் தளபதி அபிநந்தனை, கடந்த வருடம் பாகிஸ்தான் விமானப்படை கைது செய்தது அனைவருக்கும் நினைவிருக்கும். அபிநந்தன் அப்போது MiG-21 என்னும் விமானத்தில் பறந்தார். இந்த விமானம் AIM-120 AMRAAM (Advanced Medium-Range Air-to-Air Missile) என்னும் பாகிஸ்தான் ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்டது. நீண்ட தொலைவில் இருக்கும் இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணையும் அமெரிக்கத் தயாரிப்புதான். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வரை இருக்கும் இலக்குகளை இதனால் சுட்டுவீழ்த்த முடியும். இதை F-16 விமானங்கள் மூலம் வானிலிருந்தே ஏவுகிறது பாகிஸ்தான். எதிரியின் விமானத்தைக் கண்ணில் பார்க்காமலேயே இந்த ஏவுகணைகளை F-16 விமானங்களிலிருந்து பாகிஸ்தானால் ஏவ முடியும். இந்திய விமானப்படைக்கு இது பெரும் தலைவலியாக இருந்துவந்தது. இதனால் தாக்குதல் நடத்த முடிவெடுத்தாலும் இந்த ஏவுகணைகளிலிருந்து தப்பிப்பது இந்திய விமானப்படைக்கு சவாலான காரியமாக இருந்தது. நம்மிடம் இருந்த ரஷ்ய Sukhoi-30 MKIs ரக விமானங்களில் பொருத்தப்பட்டிருக்கும் R-77s ஏவுகணைகளுக்கு இந்த அளவுக்கு ரேஞ்ச் இல்லை. ‘ரஷ்யா விளம்பரம் செய்வது போல் மிக நீண்டதூர இலக்கையெல்லாம் R-77 ஏவுகணைகளை வைத்து வீழ்த்தமுடியாது. 80 கிலோமீட்டருக்குள்ளான இலக்குகளை மட்டுமே தாக்க முடியும்” என இந்திய விமானப்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது ரஃபேல். METEOR என்னும் BVRAAM (Beyond Visual Range Air to Air Missile) ஏவுகணையுடன் ரஃபேலை வாங்குகிறது இந்தியா. விண்ணில் 120-150 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கும் இலக்குகளை இந்த ஏவுகணை கொண்டு ரஃபேலால் வீழ்த்த முடியும். மிகவும் மேம்பட்ட இந்த ஏவுகணைகளை ஐரோப்பிய நிறுவனமான MBDA தயாரிக்கிறது. இது மட்டுமல்லாமல் SCALP, HAMMER என மேம்பட்ட ஆயுதங்களை ஒவ்வொன் றாகப் பார்த்து ரஃபேலுக்காக இந்தியா தேர்வு செய்திருக்கிறது. இப்படி நாம் கேட்டுக்கொண்ட மாற்றங்களுக்கு ஏற்ப ஸ்பெஷலாகவே தயாரிக்கப்பட்டு வருகின்றன ரஃபேல் விமானங்கள். மிகவும் பலம் பொருந்திய இந்த விமானங்கள் பாகிஸ்தானிடத்தில் இப்போதே ஒருவிதக் கலக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருக்கிறது. METEOR ஏவுகணைகளால் நேரடியாக பாகிஸ்தானின் F-16 விமானங்களை வீழ்த்த முடியும். இதுவரை நேரடியாக இந்த இரு விமானங்களும் மோதிக்கொண்டதில்லை என்றாலும் ரஃபேலிடம் F-16 விமானங்களால் போட்டிபோட முடியாது என்றே ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பாகிஸ்தானிடம் இருக்கும் F-16 நான்காம் தலைமுறை போர் விமானங்கள். ரஃபேல் 4.5-ம் தலைமுறைப் போர் விமானங்களாகக் கருதப்படுகின்றன.

சரி, சீனாப் பக்கம் வருவோம். தற்போது சீனாவிடம் இருக்கும் முக்கியப் போர் விமானங்களாகப் பார்க்கப்படுபவை Chengdu J20 விமானங்கள். சீனாவின் சொந்தத் தயாரிப்பான இவற்றை ‘ஆசியாவின் சிறந்த போர் விமானங்கள்’ எனப் பெருமைப்பட்டுக்கொள்கிறது சீன அரசு. ஆனால், இந்த ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை ரஃபேல் என்கிறது இந்திய விமானப்படை. வெளியில் காட்டும் பிம்பம் அளவுக்கு J20 வலுவானவை இல்லை என்பது ராணுவ வட்டத்தில் இருக்கும் பரவலான கருத்து. J20-ன் முக்கிய பலமாக சீனா சொல்வது அதன் Stealth திறன்களைதான். ‘எந்த ஒரு ரேடார் தொழில்நுட்பத்தையும் J20 ஏமாற்றிவிடும்’ என்கிறது சீனா. ஆனால், திபெத் பகுதியில் இந்த ரக விமானங்கள் பறந்ததை இந்திய Sukhoi Su-30 MKI விமானம் ஒன்று கண்டறிந்தது. இதனால் J20-ன் Stealth வல்லமைமீது கேள்விகள் எழத்தான் செய்கின்றன. அனைத்து விஷயங்களையும் போல J20 விஷயத்திலும் வெளிப்படையான தகவல்களை வெளியிடவில்லை சீனா.
ரஷ்ய விமானங்கள் சிலவற்றைப் பயன்படுத்தியுள்ளதால் இந்தியாவிடம் ஏற்கெனவே இருக்கும் Sukhoi Su-30 MKI ரக விமானங்கள் எப்படிச் செயல்படும், அதன் அம்சங்கள் என்ன என்பதெல்லாம் சீனாவுக்கு ஓரளவுக்குத் தெரியும். இதனால் அவற்றைப் பெரிய அச்சுறுத்தல்களாகக் கருதுவதில்லை சீனா. ஆனால், ரஃபேல் அப்படியில்லை. எந்த மாதிரியான வல்லமைகளுடன் இந்திய ரஃபேல் விமானங்கள் இருக்கின்றன எனச் சீனாவுக்குத் தெளிவாகத் தெரியாது. இன்னும் J20 எந்தச் சண்டையிலும் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், ரஃபேலை ஏற்கெனவே பல மிஷன்களில் பிரெஞ்சு விமானப்படை பயன்படுத்தியிருக்கிறது.
ரஃபேலுடன் ஒப்பிடுகையில் J20-ல் இருப்பது பழைய என்ஜினும்கூட. J20-க்கான மேம்பட்ட என்ஜினைத் தயாரிக்கும் ஆரம்பக்கட்டப் பணியில்தான் இருக்கிறது சீனா. இதனால், என்னதான் மிகவும் மேம்பட்ட விமானம் எனச் சொன்னாலும் J20 இன்னும் நேரடியாகக் களத்தில் சண்டையிடும் அளவுக்குத் தயாராக இருக்கிறதா என்பதில் சீனாவுக்குமே சந்தேகம் உண்டு. அதனால், இந்தியாவுடன் விண்ணில் நேரடியாக மோத இனி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும் சீனா. இதனாலேயே மொத்த இந்திய விமானப்படையுமே ஒருமித்த குரலில் ‘ரஃபேல் இருக்க பயமேன்’ என்கிறது!