
ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் அவர் ஆந்திராவில் பிரசாரம் முடித்துவிட்டு சென்னை வந்தார்.
சொகுசு கேரவன்கள், 41,000 ரூபாய் டி-ஷர்ட், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா சர்ச்சைப் பேச்சு என தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா என்ற இந்திய ஒற்றுமைப் பயணம் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்தப் பயணம் 150 நாள்கள், 3,570 கிலோ மீட்டர் பயணித்து ஸ்ரீநகரில் முடிவடைகிறது.


* யாத்திரையைத் தொடங்கும் முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தன் தந்தை ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார் ராகுல் காந்தி.
* ராஜீவ் காந்தி கடந்த 1991 மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அன்றைய தினம் அவர் ஆந்திராவில் பிரசாரம் முடித்துவிட்டு சென்னை வந்தார். விமானம் பழுது காரணமாகப் பயணம் தாமதமானது. மதியமும் அவர் சரியாக சாப்பிடாததால் நல்ல பசியிலிருந்தார். அப்போது, ஆந்திர காங்கிரஸ் பிரமுகர் பப்பி ராஜு என்பவர், தனது தோட்டத்தில் விளையும் அரியவகை `பெத்தரசம்' என்ற மாம்பழத்தை ராஜீவுக்குச் சாப்பிடக் கொடுத்திருக்கிறார். அதன் சுவை ராஜீவுக்குப் பிடித்துப்போக, மேலும் ஒரு மாம்பழம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார். இறப்பதற்கு முன்பாக அவர் சாப்பிட்ட கடைசி உணவு அந்த மாம்பழம் மட்டுமே. ராகுல் வந்தபோது, ராஜீவ் கடைசியாகச் சாப்பிட்ட அதே மாம்பழங்களை ஆந்திராவில் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து ராஜீவ் நினைவிடத்தில் படைத்தார்கள்.


* கோதாவரி, காவிரி, கங்கை, யமுனை, நர்மதை, இயேசு ஞானஸ்நானம் செய்த ஜோர்தான் நதி, மெக்காவின் ஜாம் ஜாம் போன்ற இடங்களிலிருந்து நீர் எடுத்துவந்து நினைவிடத்தில் ஏழு கலசங்களில் வைக்கப்பட்டிருந்தது. ராஜீவ் நினைவிடத்தின் பராமரிப்புக் குழு பொறுப்பாளர் டி.என்.முருகானந்தம் இவற்றையெல்லாம் செய்திருந்தார். ராகுல் தனிப்பட்ட முறையில் முருகானந்தத்துக்கு நன்றி தெரிவித்தார்.
* தன் தந்தையின் புகைப்படத்தைப் பார்த்து ஏக்கத்துடன் ராகுல் பிரார்த்தனை செய்தவிதம் காண்போரையெல்லாம் சோகத்தில் ஆழ்த்தியது. ராகுல் அங்கிருந்து கிளம்பும் முன்பாக, நினைவிடத்தில் பணிபுரியும் ஊழியர்களுடனும், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
* அதன்பின் கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தேசியக் கொடியை வாங்கி நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய பின்பு ஓய்வெடுக்க அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்குச் சென்றுவிட்டார்.
* ஒவ்வொரு நாளும், நடைப் பயணத்தின்போதும் மதியம் ஓய்வெடுக்கும்போதும் விவசாயிகள், மீனவர்கள், ஊராட்சித் தலைவர்கள், வேலையில்லா பட்டதாரிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என்று பலரைச் சந்தித்தார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் தமிழக மீனவப் பெண்களுடன் பேசிய ராகுல், ‘எப்படி எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கடலில் முத்துக் குளிக்கிறீர்கள்' என ஆச்சர்யமாகக் கேட்டறிந்தார்.

* காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் நடைப்பயணம் நடக்கிறது. ஆனால், ராகுல் வேகமாக நடந்து குறிப்பிட்ட பகுதியை அடைந்துவிடுகிறார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சக தலைவர்கள் ஓடி ஓடி நடக்கிறார்கள்.
* நடைப்பயணத்தில் இருந்து ரிலாக்ஸ் ஆவதற்காக ராகுல் காந்தி தினமும் அதிகாலையில் யோகா செய்கிறார். ராகுல் வழக்கமாகப் பயிற்சி செய்யும் சைக்கிளும் நடைப்பயணத்துடன் செல்கிறதாம். ராகுல் தங்கி இருக்கும் பள்ளி, கல்லூரி வளாகத்திலேயே மாற்றுப் பயிற்சியாக சைக்கிள் ஓட்டுகிறாராம்.
* ராகுலைச் சுற்றிப் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திப் பாதுகாப்புப் படையினர் நடக்கின்றனர். பாதுகாப்புக்காக மப்டியில் 25-க்கும் மேற்பட்ட போலீஸாரும் மக்களுடன் மக்களாக நடக்கின்றனர். முன்கூட்டியே திட்டமிட்டபடி தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே ராகுல் காந்தியுடன் குறிப்பிட்ட தூரம் வரை சேர்ந்து நடக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
* ராகுலுடன் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொள்ளும் 118 பேருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ராகுலுடன் செல்லும் வீடியோ, போட்டோகிராபர் டீமுக்கும் அதுபோன்றே பிளாஸ்டிக் ஐ.டி கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவருடன் நடப்பவர்களுக்கு வேறு ஐ.டி கார்டு வழங்கப்பட்டுள்ளது. ராகுல் தங்கும் வளாகத்தில் முக்கிய தலைவர்கள், காஷ்மீர் வரை நடப்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி.
* ராகுல் கேரவனில் ஏ.சி வசதியுடன் கூடிய பெட்ரூம். பயோ டீகிரேட் அட்டாச்டு பாத்ரூம், முக்கிய நிர்வாகிகளைச் சந்திக்க மினி மீட்டிங் ஹால் போன்ற வசதிகள் உள்ளன. தினமும் காலையிலும் மாலையிலும் கேரவனில் உள்ள பாத்ரூமில்தான் குளிக்கிறார். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாத யாத்திரை முடியும் வரை கேரவனிலேயே இரவு ஓய்வெடுக்கிறார். ராகுல் உள்ளே இருந்தாலும் இல்லையென்றாலும் கேரவன் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே இருக்கிறது.
* ராகுலுடன் செல்பவர்கள் தங்குவதற்காக கண்டெய்னர்களை கேரவன்களாக மாற்றியுள்ளனர். இரண்டு பெட் ரூம்கள், நான்கு பெட்ரூம்கள் என விதவிதமான வசதிகளுடன் கண்டெய்னர்கள் உள்ளன. அனைத்து கண்டெய்னர்களும் இரவு முகாமிடும் பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தப்படுகின்றன.
* சமையல் உபகரணங்களுடன் சமையல் தொழிலாளர்களும் ராகுல் யாத்திரையுடன் பயணித்து வருகின்றனர். நடைப்பயணம் மேற்கொள்ளும் அனைவருக்கும் பொதுவான சமையல்தான். அதிலிருந்து ராகுல் காந்திக்கு தனியாக உணவு எடுத்துச் செல்லப்பட்டு பரிமாறப்படுகிறது. நான்(ரொட்டி), ரைஸ் வகைகள், பொரியல், கட்லெட், ஐஸ் கிரீம், பழ வகைகள், குலோப்ஜாமூன் என ஃபைவ் ஸ்டார் ஓட்டலுக்கு இணையான உணவுகள் சுடச்சுட பரிமாறப்படுகின்றன. சைவ உணவு வகைகள் மட்டுமே சமைத்துப் பரிமாறப்படுகின்றன.
* ராகுல் யாத்திரையின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவரது ஆலோசகரான பைஜூ வழிகாட்டுதல்படிதான் நடக்கிறது. ராகுல் முகாமிடும் பகுதிகளில் உதவ ஜெய்ராம் ரமேஷும், நடைப் பயணத்தின்போது உதவ அகில இந்தியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் உடன் செல்கின்றனர்.