பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மழை அரசியல் வேண்டாமே..!

மழை
பிரீமியம் ஸ்டோரி
News
மழை

தலையங்கம்

பெருமழை... மீண்டும் தமிழகத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது. மழைநீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல், நாள் கணக்கில் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இதனால் மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல.

கொரோனாவின் பிடியிலிருந்து மெள்ள பொருளாதாரம் மீண்டுகொண்டிருந்த சூழலில், பட்டகாலிலேயே படும் என்பதுபோல மீண்டும் பலத்த அடி. ஏன் இந்த நிலை, இதற்கெல்லாம் யார் காரணம்? காலம்காலமாகவே தொடர்கின்றன இத்தகைய கேள்விகள்!

‘அ.தி.மு.க ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பணிகளில் முறைகேடு நடந்ததே இதற்குக் காரணம்’ என்று தற்போது குற்றம் சாட்டியிருப்பதுடன், விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் சொல்லியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உண்மையிலேயே விசாரிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய விஷயமே. ஆனால், ஸ்மார்ட் சிட்டி என்பது சென்னை உள்ளிட்ட சில நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்தகைய திட்டங்கள் அமல்படுத்தப்படாத பகுதிகள்தான் அதிகம். அவையும் மிதக்கின்றனவே! இதற்கு யாரைக் கைநீட்டப்போகிறார் முதலமைச்சர்?

ஆட்சி மாறும்போது முந்தைய ஆட்சியாளர்களைக் குறைகூறி மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவது வாடிக்கையாகவே இருக்கிறது. ஆட்சியாளர்களின் இத்தகைய மனோபாவம்தான்... மாநிலத்தையே இத்தகையதொரு பேரிடரில் மறுபடி மறுபடி தள்ளிக்கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், திட்டங்களை நிறைவேற்ற ஒதுக்கப்படும் பணத்தில் கிட்டத்தட்ட 40% மட்டும் செலவழிக்கப்பட்டு, மீதமுள்ள 60% கொள்ளை அடிக்கப்படுவதுதான் காலம்காலமாக நடக்கிறது. சொல்லப்போனால், கொள்ளையடிப்பதற் காகவேதான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு, சாலைகள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டமைப்புகளும் மிகமுக்கியம். அத்தகைய கட்டமைப்புள்ள நாட்டைத்தான் தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவை நாடி வரும். அதுதான் நம்முடைய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு மிகவும் கைகொடுக்கும். ஆனால், இங்கே எதுவுமே சரியில்லை என்கிற நிலைதானே பற்பல ஆண்டுகளாக நீடிக்கிறது.

உள்கட்டமைப்புத் திட்டங்களில் மோசடி செய்திருப்பவர்கள் மீது நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதோடு, இனி ஒரு நாளும் கட்டமைப்புகளை உருவாக்குவதில் தவறேதும் நிகழாது என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, உள்நாட்டு மக்களுக்கும் ஆள்வோர் மீது நம்பிக்கை ஏற்படும்.

வரும் ஆண்டிலாவது நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்!

- ஆசிரியர்